Tuesday, 25 December 2012

மாறுவோம் மாற்றுவோம்


G.குமாரசாமி
இணை செயலாளர்
என்பீல்டு தொழிற்சங்கம்

      ஒப்பந்தமென்றவுடன் நம் கவனத்திற்கு வருவது ஊதிய உயர்வு ஒப்பந்தம்தான். சம்பளம் உயரும், புதிய சலுகைகள் கிடைக்கும். துண்டு பட்ஜெட் இல்லாமல் குடும்பம் நடத்தலாம். தொழிற்சங்கம் சாதுர்யமாகப் பேசி உற்பத்தி குறைவாக உயர்த்திஒப்பந்தம் முடித்து கொடுப்பார்கள்.
      ஆனால் இன்று உற்பத்தி அடிப்படையில் ஊதிய உயர்வு என்பதும் தொழிலாளர்களும், தொழிற்சங்கமும் உற்பத்தியைத் தீர்மானிக்கும் சூழலும் காலாவதியாகிப் போனது. மாறாக சந்தையின் தேவையே உற்பத்தியை தீர்மானிக்கிறது.

      சங்கமும் தொழிலாளர்களும் பின் எப்படித்தான் ஊதிய உயர்வைக் கோருவது, விலைவாசியைக் காரணம் காட்டலாமா? நிர்வாகத்தின் லாபத்தைச் சுட்டிக் காட்டலாமா? இப்படிப் பேசலாமா? அப்படிப் பேசலாமா? என நமக்காக மட்டுமே யோசித்து கையறு நிலையில் ஒப்பந்த கோரிக்கை நகலை தயாரிப்பது இலக்கு நிர்ணயிக்காத பயணமாக உள்ளது.
      நமது பகுதியின் தொழிலாள வர்க்கம் புதிய உத்தியைக் கையாள முனைந்திருக்கிறார்கள். ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை எப்படிப் பார்ப்பது என்பதைப் பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள் ஒன்றுகூடி கலந்து ஆலோசித்துள்ளனர். அதில் ஒரு தனிநபர் வாங்கும் சக்தி, சமூக பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் நிலையில், சமூகத்தைத் தீர்மானிக்கும் ஊதிய உயர்வு ஒப்பந்தம் எத்தனை சமூகக் கவலை கொண்ட கோரிக்கைகளாக இருக்க வேண்டும் என்ற கருத்து முன்னுக்கு வந்தது. பன்முகத் தலைமையில் கருத்துகள் சேகரிக்கப்பட்டது.
      நிரந்தரத் தொழிலாளர்கள், பயிற்சித் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் இவர்கள் சமூகத்தின் அங்கம் மட்டுமல்ல. தொழிலகத்தின் அங்கமாகவும் இருக்கிறார்கள். இப்படியிருக்க ஒரு தொழிலகத்தின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் என்பது அனைத்து தொழிலாளர்களின் நலனையும் கவனத்தில் கொண்டதாக இருக்க வேண்டும். கோரிக்கைகளை மக்கள் நல அமைப்புகளின் ஆய்வோடு தீர்மானித்து தயாரிப்பது ஒரு முழுமை பெற்ற ஒப்பந்த கோரிக்கையாக மாறும். அப்போதுதான் இந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் பின் பொதுமக்களின் ஆதரவும் இருக்கிறது என்பதை நிர்வாகங்கள் புரிந்து கொள்ளும்.
      ஒப்பந்தக் கோரிக்கைகள் இவ்விதம் தயாரிக்கப்பட்டால், தொழிலாளர்கள் பற்றிய பொது மக்களின் முணுமுணுப்பு மறையும். தொழிலாளர்கள் போராட்டத்தில் பொதுமக்கள் ஆதரவு கூடும்.
      இறுதியில் ஒன்று சேர்ந்து போராடுவது பழைய வடிவம்!
      கோரிக்கை துவங்கும்போது ஒன்று சேர்வது புதிய வடிவம்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா