Sunday 21 April 2013

வீட்டிற்கோர் நூலகம் வேண்டும் - பேரறிஞர் அண்ணா

  


   வீட்டிற்கோர் புத்தகசாலை நிச்சயம் வேண்டும். வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம், புத்தக சாலைக்குத் தரப்பட வேண்டும். சில அடிப்படை அறிவுக்குத் தேவையான புத்தகங்களையாவது, வீடுகளில் சேகரித்துப் பயன்படுத்தும் முறை இருக்க வேண்டும். வீடுகளில் நடைபெறும் விசேஷங்களின் போது, வெளியூர் சென்று திரும்பும்போது, பரிசளிப்புகள் நடத்தும்போது, புத்தகங்கள் வாங்குவது என்று ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் சுலபத்தில் ஒரு சிறு புத்தகசாலையை வீட்டில் அமைத்து விடலாம். புத்தக சாலை அமைக்கும்போது, அர்த்தமற்ற, அவசியமற்ற எண்ணங்களை நிலைநிறுத்தக்கூடிய நூல்களைச் சேர்க்கக்கூடாது. சேர்த்தால் மனவளம் ஏற்படாது.

      உலக அறிவை, உருப்படியான காரியத்துக்குப் பயன்படும் அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும், நாட்டு வரலாறு உலக நாடுகளின் நிலையைக் குறிக்கும் நூல்கள் முதலிடம் பெற வேண்டும். மக்களின் அறிவுக்குத் தெளிவும், ஆண்மைக்கு உரமும், ஒழுக்கத்துக்கு வலிவும் தரத்தக்க நூல்கள் இருக்க வேண்டுமேயொழிய, வாழும் இடத்தை வகையற்றது என்று கூறி வானவீதிக்கு வழிகாட்டும் நூல்களும், மாயாவாதத்தையும் மனமருட்சியையும் தரும் ஏடுகளும் தன்னம்பிக்கையைக் கெடுத்து விதியை அதிகமாக வலியுறுத்தி, பெண்களை இழித்தும், பழித்தும் பேசிடும் நூல்களும் இருத்தலாகாது. சங்க இலக்கிய சாரத்தைச் சாமான்யரும் அறிந்து வாசிக்கக்கூடிய முறையில் இருக்க வேண்டும். குறைந்த பட்சம், மக்கள் முன்னேற்றத்துக்கும், வாழ்க்கை வசதிக்கும் உதவும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் பற்றிய நூல் இருக்க வேண்டும். நாட்டு விடுதலைக்கு உழைத்தவர்கள், மக்களின் மன மாசு துடைத்தவர்கள், தொலை தேசங்களைக் கண்டவர்கள், வீரர்கள், விவேகிகள் ஆகியோரின் வாழ்க்கைக் குறிப்பு ஏடுகள் இருக்க வேண்டும். இந்த அடிப்படையில் வீட்டிற்கோர் நூலகம் அமைத்துக் கொண்டால், நாட்டுக்கு நல்ல நிலை ஏற்படும்.

உலக புத்தக தினம் - ஏப்ரல் 23 - சேக்ஸ்பியர் நினைவு தினம்

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா