Wednesday 20 August 2014

சட்டம் ஒரு இருட்டறை

S.சுகுமார்
266\C858


குடும்பத்துடன் சொந்த ஊர் சென்று வீடு திரும்பிய தயாளன் குடும்பத்திற்கு அதிர்ச்சி காத்திருந்தது. இவர்களது வீட்டின் கதவு திறக்கப்பட்டிருந்தது! உள்ளே நுழைந்த பிள்ளைகள் இருவரும் ``பீரோ கூட உடைஞ்சிருக்குப்பா'' என்றவாறே பீரோவின் அருகில் சென்றனர். பீரோவில் இருந்த துணிமணிகள் அறையெல்லாம் சிதறிக் கிடந்தன. ``இதெல்லாம் அப்படியே இருக்கட்டும்; எதையும் எடுக்காதீங்க. நான் போலீஸ் ஸ்டேசனுக்குப் போய் கம்ப்ளெய்ன்ட் குடுத்துட்டு வந்திடுறேன்'' என்று சைக்கிளை எடுக்கப் போன தயாளன் `சைக்கிளையும் காணவில்லை' என்றதும் பாவம் பதறித்தான் போனான். அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு நட நடவென நடந்தே சென்றான்.


போலீஸ் ஸ்டேசனில் நுழைந்த தயாளனிடம் ``என்ன வேணும். யார் நீங்க?''. ``சார்... ஒரு கம்ப்ளெய்ண்ட் குடுக்க வந்திருக்கேன் சார்''. ``யார் மேல கம்ப்ளெய்ண்ட் கொடுக்கணும்? எங்கிருந்து வர்றீங்க?''. ``சார் என் வீட்டுல திருடு போயிடுச்சு சார்! வீடு ருக்மணி தியேட்டர் பக்கத்துல உள்ள மேட்டுத் தெருவுல இருக்குது சார், வீட்டுக்கு வந்து பாருங்க சார்'' என்றான் கெஞ்சும் தொனியில். ``சரி, அந்த ரூம்ல ஒருத்தர் இருப்பார். அவர் பேரு ஹரிச்சந்திரன். அவரு வெளியல போயிருக்கார். அவர் வந்ததும், அவர்கிட்ட சொல்லுங்க'' என்று கூறினார் போலீஸ்காரர்.

யார் யாரோ வருவதும் போவதுமாக இருந்தார்கள். தயாளனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. `யாராவது விசாரித்து உடனே நடவடிக்கை எடுக்க மாட்டார்களா?' என்று பதைபதைப்புடன் இருந்தான். சிறிது நேரத்தில் ஒரு ஜீப் காவல் நிலையத்துக்குள் நுழைந்தது. அதிலிருந்து இறங்கியவர்களில் ஒருவர் அந்த ரூமுக்குள் நுழைந்தார். அவர்தான் ஹரிச்சந்திரனாக இருக்க வேண்டும் என்று அவர் பின்னாலேயே தயாளனும் சென்றான். ``கொஞ்சம் வெளியே இருங்க நான் கூப்பிடுறேன்'' என்றார். சிறிது நேரம் கழித்து அழைத்த காவல் அதிகாரியிடம் நடந்த விபரங்களைக் கூறி, ``திருடு போன பொருள்களை எப்படியாவது கண்டுபிடிச்சி கொடுங்க சார்'' என்றான். ``நீங்க ஒன்னு பண்ணுங்க; எங்கிட்ட எப்படி சொன்னீங்களோ, அத அப்படியே ஒரு பேப்பர்ல எழுதி குடுத்துட்டு போங்க, இப்ப ஆள் இல்ல, கொஞ்சம் நேரம் கழிச்சு உங்கள வீட்டுக்கு வந்து விசாரிப்பாங்க...'' என்றார் ஹரிச்சந்திரன். எதிர்ல உள்ள கடையில போய் ஒரு குயர் பேப்பர் வாங்கிட்டு வாங்க. ஆபீஸ்ல பேப்பர் இல்ல. பேப்பர் வாங்கி வந்த தயாளன் கம்ப்ளெய்ண்ட்டை எழுதிக் கொடுத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தான்.

தயாளன் வீட்டுக்குப் போலீஸ் வந்து விசாரித்துவிட்டுச் சென்றது. இது வரை எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. இவனும் வாரம் தவறாமல் போலீஸ் ஸ்டேசனுக்குப் போகத் தவறுவதில்லை. ஒரு நாள் காவல் நிலையத்திற்கு தயாளன் போன போது, காவல் அறையில் ஒரு விசாரணைக் கைதியை போலீஸ்காரர் மிருகத்தனமாக அடித்துக்கொண்டிருந்தார். `உங்கிட்ட இருந்து எப்படி உண்மையை வர வைக்கறதுன்னு எனக்குத் தெரியும்'' என்றவர், தயாளனைப் பார்த்தவுடன் தனது அறைக்கு வந்தார். ``இங்க வாங்க'' என்று அழைத்து, ``உட்காருங்க! நீங்களும் வந்து வந்து போறீங்க. காணாமல் போன உங்க பொருளுங்க எதுவும் கிடைக்கல. உங்களுக்கு சைக்கிள் ரொம்ப முக்கியம்னு எனக்குத் தெரியும். அதனால இங்க கொஞ்சம் சைக்கிள் இருக்குது. அதுல எது வேணுமோ பார்த்து ஒரு சைக்கிளை எடுத்துக்கோங்க'' என்றார். ``இல்ல உங்க பொருள்தான் வேணும்னா, அது எப்ப கிடைக்கும்னு சொல்ல முடியாது!'' கொஞ்சம் யோசித்த தயாளனின் மனது ``டேய் மடையா, வந்தத வாங்கிக்கோ'' என்று சொல்லிக் கொண்டே இருந்தது. ``சரி சார்'' என்றான்.

உடனே எழுந்து ஒரு பேப்பரைக் கொடுத்து, ``இதுல கையெழுத்துப் போடுங்க''. ``எதுக்கு சார்?''. ``உங்க சைக்கிள் கிடைச்சிடுச்சி என்பதற்காக''. `` சரி'' என்று சொல்லி கையெழுத்துப் போட்டான். அடுத்து ஒரு பைலைக் கொண்டு வந்து ``இதுல கையெழுத்துப் போடுங்க'' என்றார். ``இது எதுக்கு சார்?'', ``வந்து... அது ஒன்னுமில்ல. எப்பவோ கள்ளச்சாராயம் பிடிச்ச போது, அத அழிச்சிட்டோம். அப்ப நீங்க பார்த்த மாதிரி சாட்சி. அவ்வளவு தான்''. ``அத நான் பார்க்கலேயே சார்''. ``இது ரொம்ப பழைய கேசு. அதனால உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராது. அந்தக் கேசு எல்லாம் முடிஞ்சி போச்சி. பயப்படாம போடுங்க'' என்று கூறி கையெழுத்தும் வாங்கிக் கொண்டார்.

தயாளன் சைக்கிள்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்று நல்ல சைக்கிளைப் பார்த்து எடுத்துக் கொண்டான். வெளியே வந்த தயாளன், ``சார், இந்த சைக்கிளுக்குச் சொந்தக்காரன். இது என்னுடையதுன்னு என்கிட்ட கேட்டா, நான் என்ன பன்றது சார்''. ``அப்படி யாராவது வந்தால், எங்ககிட்டதானே வரணும். அத நாங்கப் பாத்துக்குறோம்'' என்றார். தயாளன் சைக்கிளை ஓட்டிச் சென்றான்.

காவல்துறையின் பெருமை பேசும் வாசகங்கள் அறையெங்கும் நிரம்பியிருந்தன. சுவரில் மாட்டியிருந்த போட்டோவில் மகாத்மா காந்தி சிரித்துக் கொண்டிருந்தார்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா