அ.பிரபாகரன்
எவரெடி தொழிலகம்
எவரெடி தொழிலகம்
``நாம் நம்ப வேண்டும் என்பதற்காக அல்ல; ஆழ்ந்த விசாரனையில் ஈடுபட வேண்டும் என்பதற்காகத்தான் புத்தகங்கள் எழுதப்படுகின்றன. ஒரு புத்தகத்தைப் பொறுத்தவரை அது என்ன சொல்கிறது என்று பார்க்கக்கூடாது: அது என்ன உணர்த்துகிறது என்றுதான் பார்க்க வேண்டும்.''
- உம்பெர்த்தோ ஈகோ
சமீப காலமாக நவீன தமிழிலக்கியத்தின் காத்திரமான படைப்புகள் கவனம் பெறுவது தமிழில் நிலவக்கூடிய ஆரோக்கியமான சூழலாகும். அவ்வகையில் ஜோ.டி.குருஸின் கொற்கை நாவல் சாகித்ய அகாடெமி விருது பெற்றது மிகப் பொருத்தமானதாகும்; இலக்கிய உலகுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாகும். இவரது முதல் நாவல் ``ஆழி சூழ் உலகு''. இது தமிழக அரசின் விருது பெற்றது. கொற்கை இரண்டாவது நாவல்.
நெய்தல் நிலக்காட்சி மற்றும் அதன் வாழ்வியல் அணுகுமுறையினை ப.சிங்காரத்தின் ``புயலிலே ஒரு தோணியும்'', ஹெர்னஸ்ட் ஹெமிங்வேயின் `கடலும் கிழவனும்' <பட்ங் ஞப்க் ஙஹய் ஹய்க் பட்ங் நங்ஹ> போன்ற படைப்புகள் முன்னெடுத்துச் சென்றாலும், அதனினும் கொற்கையின் இயங்குதளம் முற்றிலும் வேறானது. அன்றைய பாண்டியர் காலத்தின் கொற்கை துறைமுகம், இன்று தூத்துக்குடி துறைமுகம். அது பரதவரின் கதையாடலாக 1914_ல் தொடங்கி 2000 வரையிலான 86 ஆண்டு கால கடல்சார்ந்த மீன்பிடி வாழ்வின் களத்தைப் பதிவு செய்கிறது. இப்படைப்பு 1174 பக்கங்களில் விரிவடைந்து மீனவர் சமூகத்தின் உரையாடலாகவும், நெய்தல் நில சந்ததியரான பரதவ மக்களின் இலக்கிய ஆவணமாகவும் உள்ளடக்கி பெருநாவலுக்குண்டான தகுதியினை தானே தகவமைத்துக் கொள்கிறது.
கடல் மனிதர்களின் உடல் உழைப்பு சார்ந்த வாழ்வு, துக்கித்து வீழும் குடும்ப மரணம், ஒப்பனையற்ற பாலியல் வசவு மொழிகள், மீன்பிடித்து திரும்புகையில் தூரத்தில் தெரியும் கரையில் திருச்செந்தூர் மச்சானுக்கு கும்பிடு போடுதல், மற்றும் உள்ளூர்வாசிகளுக்கே தெரியாமலிருந்த தாசி வீடு தேடி காமக்களியாட்டம் நிகழ்த்த வரும் வெள்ளைக்காரர்கள், இப்படியாக பன்முக தளத்தில் இந்நாவல் ஆழமும், விரிவும் கொள்கிறது. ஐரோப்பிய காலனியத்தின் வருகையும், கத்தோலிக்க சமய நிறுவனத்தின் வசந்தமும் வேர்கொண்டு துளிர்த்த பரதவர் கடல்வாழ்வில் தான் பால்யத்தில் அறிந்து வாழ்ந்த அச்சமூகத்தையும் அவர்கள் பயன்படுத்திய மொழியிலே அடையாளப்படுத்தி வாழ்வியல் சித்திரமாக்கியதில் இப்படைப்பு தன்னளவில் கலைத்தன்மையோடு தேர்ச்சி பெறுகிறது. எண்பத்தியாறு பர்னாந்துமார்களின் குடும்ப வரலாற்றுத் தகவல் கூறுகளை புனைவுக்குள் துறுத்தி அதனை ஆவணப்படுத்தி பெரும் கலைப்படைப்பாக்கியதில் தன்னை அசலான கலைஞனென நிரூபிக்கிறார் ஜோ.டி.குருஸ். தமிழில் அவசியம் வாசிக்க வேண்டிய பிரதிகளில் கொற்கையும் ஒன்று.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா