M. ஆதிகேசவன்
264\J066
264\J066
நம்பிக்கைக்கும், மூட நம்பிக்கைக்கும் இடையில் நுணுக்கமான வேறுபாடு உண்டு. அது புரியாமல் பலரும் தமக்குத்தாமே சமாதானம் சொல்லிக் கொள்கிறார்கள். பகுத்தறிவினால் சோதித்து அறியப்படாதது நம்பிக்கை. சோதித்து அறிய வாய்ப்பிருந்தும் அப்படிச் செய்யாமலே ஒன்றை உண்மை என நம்புவது மூட நம்பிக்கை.
அறிவியல் வளராத காலத்தில், உலகம் தட்டையானது என மனிதன் நம்பினான். அந்தக் காலத்து மனிதனுக்கு அது நம்பிக்கை. இந்தக் காலத்து விஞ்ஞானமோ உலகம் உருண்டையானது என நிரூபித்துவிட்டது. இப்போதும் அதைத் தட்டை என நினைத்தால் அது மூட நம்பிக்கை.
சமூகத்தில் உழைப்பாளி மக்கள் சுரண்டப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு துன்ப துயரங்களில் மூழ்கி இருக்கிறார்கள். விரல் விட்டு எண்ணி விடக் கூடிய நபர்கள் ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு நாட்டையே கொள்ளையடிக்கிறார்கள். இதற்கு மக்களின் மூடநம்பிக்கைகள்தான் துணை நிற்கின்றன. இந்தியாவின் முதுபெரும் பொதுவுடைமைத் தலைவர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் ஒரு முறை கூறினார். `மதநம்பிக்கையுள்ளவர்களும் எங்கள் பொதுவுடைமை இயக்கத்தில் சேரலாம். ஆனால் அவர் படிப்படியாகத் தங்களை பொருள் முதல் வாதக் கோட்பாட்டை ஏற்பவராக மாற்றிக் கொள்ள வேண்டும்'' என்றார்.
சிலந்தி வலை போல் பிடித்த நம்பிக்கைகள், இரும்புச் சங்கிலிகளாய் மூட நம்பிக்கைகள் மனிதர்களை ஆட்டிப்படைக்கின்றன. பயமும், பேராசையும் மக்களை சாமியார்களிடம் போக வைக்கின்றன. எத்தனை சாமியார்கள் பிடிபட்டாலும், இரட்டை ஆயுள் தண்டனை பெற்றும் அதே சாமியார்களிடம் மக்கள் ஓடுகிறார்கள். வாழ்க்கை நெருக்கடிகள் மக்களை இப்படி மூட நம்பிக்கைகளில் இருந்து விடுபட இயலாமல் செய்கின்றன. ஆனால் நமக்கோ ஒரு நீண்ட பகுத்தறிவு பாரம்பரியம் உண்டு. பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் போன்ற சிந்தனையாளர்கள் அறிவொளி பாய்ச்சிய தடம் தமிழ் மண்ணின் வரலாறாக உள்ளது. எனவே நம்பிக்கையை இதயத்தில் ஏந்தி, மக்களுக்கு விஞ்ஞான அறிவைப் புகட்டி, அவர்களை மூட நம்பிக்கைகளில் இருந்து மீட்பது முற்போக்காளர்களின் கடமையாகும்!
அறியாமை என்கிற பூதம் மக்களை ஆட்டிப்படைக்கிறது. இது தொடரும் வரை துன்பங்கள் என்பது தொடரும் என்றார் தொழிலாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவன் காரல் மார்க்ஸ். இதை மனதில் கொண்டு சமூக மாற்றத்துக்கான போராட்டத்தில் இணைவோம்!
மூடநம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!
பாரெங்கும் அறிவொளி பாய்ச்சுவோம்!
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா