S.சுகுமார்
266\C858
266\C858
செங்கழனியூர் பெயருக்கு ஏற்றார்போல செழுமையாக இருந்த ஊர்தான். இன்று தலைகீழாக மாறிவிட்டது. கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்தார்கள்! தேர் இழுப்பது, கூழ் ஊற்றுவது என்றெல்லாம் செய்துபார்த்துவிட்டார்கள். எந்த மாற்றமும் இல்லை.
விளைச்சல் இல்லை! விளைந்தால் நியாயமான விலை இல்லை. வேலையும் கிடைக்கவில்லை. கிடைத்தால் சரியான கூலி இல்லை! வாழ வழியின்றி தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வூர் மக்கள்! அதே நேரத்தில் ஆளவந்தான் குடும்பமும், ராஜதுரை குடும்பமும் மட்டும் செல்வச்செழிப்போடு அந்த ஊரின் எல்லா விவகாரங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக இருக்கிறார்கள்.
அரசின் கொள்கையில் கோளாறு உள்ளதை புரிந்து கொண்ட அவ்வூர் மக்கள் ஒன்றுபட்டுப் போராடினால் எல்லோரும் வாழ வழி உள்ளது என்பதை உணர்ந்து அணிதிரள ஆரம்பித்தார்கள்! இவர்களை வளரவிட்டால் நாம் நிலைக்க முடியாது என்றுணர்ந்த ஆளவந்தானும், ராஜதுரையும் இவர்களை ஒன்றுபட விடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு நாள் அரசு நிர்ணயித்த கூலியை விட குறைத்துக் கொடுக்கும் அதிகாரிகளை எதிர்த்து இயக்கம் நடத்த தயாராகிக் கொண்டிருந்த இளைஞர்களிடமும், மாரிமுத்துவிடமும் பேச்சுக் கொடுத்தான் ஆளவந்தான். ``எல்லோருக்கும் வேலை கேட்கிறீர்களே, ஜனத்தொகை எவ்வளவு பெருகிப் போச்சு? எல்லோருக்கும் எப்படி கவர்ன்மெண்டால வேலை கொடுக்க முடியும்? இதெல்லாம் நடக்கிற காரியமா'' என்றான். ``அப்ப ஜனத்தொகை அதிகமானதாலதான் வேல கிடைக்கலனு சொல்றியா?'' என்று கேட்ட மாரிமுத்து ``இப்படித்தான் நிறைய பேரு நினைச்சுகிட்டும், சொல்லிக்கிட்டும் இருக்காங்க.... நம்ம சுதந்திர இந்தியாவுல 1951ல மக்கள் தொகை 30 கோடி. அப்ப வேலை இல்லாதவங்க 50 லட்சம் பேர்னு அரசாங்கத்தோட புள்ளிவிபரம் சொல்லுது. இப்ப மக்கள் தொகை 120 கோடி, இப்ப கணக்குப்படி வேலை இல்லாதவங்க எண்ணிக்கை 2 கோடிதானே இருக்கணும், ஆனால் 10 கோடிக்கும் மேல வேல இல்லாதவங்க இருக்காங்க. ஆக மக்கள் தொகை 4 மடங்காச்சி. வேல இல்லாதவங்க எண்ணிக்கை 20 மடங்காயிடுச்சு. வேலை கிடைக்காததுக்கு காரணம் ஜனத்தொகை இல்லன்னு இப்ப புரியுதா? நம்மளவிட ஜனத்தொகை அதிகமாக உள்ள சீனாவுல வேலையில்லாத் திண்டாட்டம் இல்லையே! அது எப்படி?'' என்று கேட்டான் மாரிமுத்து. பதில் சொல்ல முடியாமல் விழித்த ஆளவந்தான் அங்கிருந்து நைசாக நழுவினான்.
சிறிது நேரத்தில் ராஜதுரை அங்கு வந்து சேர்ந்தான். ``பொம்பளைங்க எல்லாம் வேலைக்குப் போயிட்டாங்க. உங்களுக்கு எப்படி வேலை கிடைக்கும்? அந்த மதத்துக்காரன், இந்த மதத்துக்காரன் வந்து குவிஞ்சிட்டான், ஆன்மிகம் குறைஞ்சு போச்சு. கோயில் குளங்கள சீரமைக்கணும். அதுதான் நம்மளை வாழ வைக்கும்'' என்று ஒரே போடாகப் போட்டான் ராஜதுரை. பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த மாரிமுத்து, தேர்தல் வந்தா, `இங்க கோயில் கட்டுவோம், அத இடிப்போம், இத இடிப்போம்னு சொல்றவங்க கூட இப்ப அத சொல்ல முடியல. அதனாலெல்லாம் பிரச்சனைகள் தீராதுன்னு அவர்களுக்கே நல்லா தெரிஞ்சு போச்சு. அவங்களே அதெல்லாம் விட்டுட்டாலும் நீ விட மாட்டே போலிருக்கே'' என்றான் மாரிமுத்து.
``ஆளவந்தானுக்கும் உனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ரெண்டு பேரு கொள்கையும் ஒன்னுதான்.'' என்று ராஜதுரையிடம் சொன்ன மாரிமுத்து, தனது நண்பர்களிடம், ``, எல்லோரும் வாழறதுக்கு இந்த நாட்டுல வழி இருக்கு. அதுக்கு முன்னாடி ஆளவந்தானையும், ராஜதுரையையும் ஓரங்கட்டிட்டு உழைப்பாளி மக்களுக்கு ஆதரவான கொள்கையைச் செயல்படுத்தினா இந்த ஊரே சொர்க்கபுரியாகிவிடும்'' என்று கூறி மக்களை ஒன்றுபடுத்தும் பணியினை மாரிமுத்து தொடர்ந்தான்.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா