Saturday, 28 June 2014

நீதானே என்தன் பொன்வசந்தம்

S.கெஜராஜ்
375\K700
Mechatronics

தனது வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டுமென கற்பனையில் கோட்டை கட்டி வைத்திருந்தானோ அதே அழகான உருவம் அந்த பில் கவுண்டரில் தர்ம சங்கடத்தில் நெளிந்த போது ஆச்சரியத்துடன் அவளது அருகில் நெருங்கி விசாரித்தான் வினோத். ``இல்ல சார்.. பில் போட்டுட்டேன். என்னுடைய டெபிட் கார்டை எடுத்து வர மறந்துட்டேன்'' என்றாள் தயங்கியபடி ஸ்வேதா. நீங்க தப்பா நினைக்கலன்னா நான் குடுக்குறேன்'' என்றான் வினோத். மிகவும் தயங்கிய ஸ்வேதா அரைகுறை மனதுடன் வேறு வழியில்லாமல் ``நாளைக்கு இதே இடத்தில் உங்களிடம் திருப்பிக் கொடுத்துடறேன் சார். ரொம்ப தேங்க்ஸ் சார்'' என்றாள். மனதில் நிறைந்திருந்த தன் வருங்கால மனைவியை நேரில் சந்தித்ததை நினைத்து நினைத்து உறக்கமின்றி புரண்டு படுத்தான் வினோத்.


ஸ்வேதாவும் இதே நிலையில்தான் இருந்தாள். அந்த வசீகர முகம்; அடுத்தவர்க்கு உதவி செய்யும் மென்மையான குணம்; அவளது நினைவில் வந்து, வந்து தூக்கத்தைக் கெடுத்தது. ``இவரே எனது கணவராகக் கிடைத்தால்'' என்று ஏங்கியபடி உறங்கினாள்.

``டேய் வினோத். நாளை எங்கப்பா அம்மாவோட சேர்ந்து நீயும் என் கூட பொண்ணு பார்க்க வரணும்'' என்றான் கலை, வினோத்தின் ஆருயிர் நண்பன்.
பெண் வீட்டில் குனிந்த தலையுடன் காபி கொண்டு வந்த பெண்ணைப் பார்த்ததும் குப்பென்று வியர்த்தது வினோத்துக்கு. உதடுகள் ``ஸ்வேதா நீயா'' என்று சத்தமில்லாமல் உச்சரித்தன. ஸ்வேதாவும் கலைதான் மாப்பிள்ளை என்று அறிந்ததும் உடலில் ஏற்பட்ட நடுக்கத்தை வெளிக்காட்டாமல் நகர்ந்த போது வினோத்துக்கு மட்டும் அவள் உடல் நடுக்கத்தை உணர முடிந்தது. இருவர் கண்களில் துளிர்த்த நீரை வினோத்தும், ஸ்வேதாவும் மட்டுமே உணர முடியும்.
கலையும், அவன் பெற்றோரும் டபுள் ஓகே கொடுத்துவிட்டு அங்கிருந்து விடைபெற்றனர். தான் விரும்பும் பெண் இவள்தான் என்று ஆருயிர் நண்பனிடம் வினோத்தால் கூற முடியவில்லை. அதே நிலைதான் ஸ்வேதாவிற்கும். பெற்று, வளர்த்து, படிக்க வைத்த பெற்றோரிடம் வரப்போகும் கணவனின் நண்பன்தான் தான் விரும்பியவன் என்று கூற பயம், தயக்கம்.

அழைப்பு மணி ஒலித்தது! கதவைத் திறந்தான் வினோத் ``ஹாய்! வாடா கலை'' வரவேற்றான் வினோத். ``கல்யாண வேலை எல்லாம் எப்படி இருக்கு?'' என்றான் வினோத். ``அட அது இருக்கட்டும் உனக்கு எப்போ?''. ``எல்லாம் நம்ம கையிலா இருக்கு? ம் ம் ம்'' பெருமூச்சு விட்டான் வினோத்.

``ஆமாண்டா... இப்போ அது நம்ம கையிலதான் இருக்கு'' என்றான் புதிருடன்! ``நான் காபி ஷாப்புக்குப் போயிருந்தேன். அந்த ரெஸ்டாரெண்டுல ஸ்வேதா அவள் தோழியோடு பேசிட்டு இருந்ததைக் கேட்டேன். அவளுடைய மனசுல நீதான் முழுமையா நிறைஞ்சிருக்கே! என் ஆருயிர் நண்பனை ஸ்வேதா விரும்புறான்னு தெரிஞ்சதும் நான் அவளை உனக்காக விட்டுக் கொடுக்க முன் வந்துட்டேன்.''

வினோத்தின் கண்களில் நீர் பொல பொலத்தது. கலை தொடர்ந்தான், ``நீயும் பொண்ணு பார்த்த அன்று நீ விரும்பிய பெண் என்று தெரிஞ்சும் எனக்காக அவளை நீ விட்டுக்கொடுத்தியே. அந்த மனப்பாங்கு யாருக்கு வரும்? உன் நேர்மை உள்ளத்துக்கு முன்னால் என்னால் செய்ய முடிந்தது உங்களைச் சேர்த்து வைப்பது தான்'' என்றான் கலை. ``நானும் உன் திருமணம் சம்பந்தமாக ஸ்வேதா குடும்பத்துடன் பேசிவிட்டேன்'' என்றான் கலை உற்சாகமாக

``இனி உனக்கென பிறந்தவ அவதான்'' என்றான் கலை. தன் நண்பனின் உயர்ந்த உள்ளத்தை நினைத்து கண்ணீர் மல்க கட்டியணைத்து நன்றி பாராட்டினான் வினோத்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா