Friday, 20 June 2014

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்

S.சுகுமார்
266\C858

            பங்களாக்கள் நிறைந்த பகுதியில் சிறு சிறு குடிசைகள் அமைந்த சந்து ஒன்றில் சொகுசுக் கார் ஒன்று ரமாவின் வீட்டு வாசலில் வந்து நின்றது! வீட்டு வாசலில் பாத்திரம் தேய்த்துக் கொண்டிவள் ஆச்சரியத்துடன் பார்த்தாள். காரை விட்டு இறங்கி வந்த ரமேஷ், ``எப்படிக்கா இருக்கிற? புள்ளங்க எங்கக்கா காணோம்?'' என்றான். ``அவங்க ஸ்கூலுக்குப் போயிருக்காங்க. நீ வா'' என்று குடிசைக்குள், தம்பியை அழைத்துச் சென்றாள் ரமா! ``கொஞ்சம் உக்காரு. போய் டீ வாங்கிக்குனு வந்துடறேன்'' என்று பக்கத்தில் உள்ள டீக்கடைக்குச் சென்றாள். ``என்னாடா கார்ல வந்திருக்கே''. ``அது வந்து முதலாளி குடும்பத்தோடு வெளியூருக்குப் போயிருக்காரு. அடுத்த வாரம் தான் வருவாரு! அவரு வர்ற வரைக்கும் இந்தக் கார் நம்மளதுதான். அதான் காரை எடுத்துகினு உன்னையும், குழந்தைகளையும் பார்த்துட்டு போவலாம்னு வந்தேன்'' என்றான் ரமேஷ்.
            அக்காவும் தம்பியும் சேர்ந்தவுடன் ஊரைப் பற்றியும், சொந்த பந்தங்கள் பற்றியும் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டார்கள். ``சரி, நீ குளிச்சிட்டு வா டிபன் சாப்பிடலாம்'' என்று கூறி தகரத் தடுப்பு போட்ட பாத்ரூமைக் காட்டினாள். ``தண்ணி அதோ அந்த மூலைல தவலைல இருக்கு பாரு'' என்று கூறி ஒரு துண்டைக் கொண்டு வந்து கையில் திணித்தாள். பாத்ரூமுக்குள் போன ரமேஷ் , ``என்னக்கா, தண்ணி கொஞ்சமா இருக்கு...''. ``ஆமாடா தண்ணி இன்னிக்கு சாயங்காலம்தான் வரும். அதுவரைக்கும் இந்த தண்ணியத்தான் ஆண்டுக்கணும். இதான் எங்க நிலைமை. அதுலயே முடிச்சுக்கோ'' என்றாள் ரமா.
            குளித்துவிட்டு தலையைத் துவட்டிக் கொண்டே அக்கா பாத்திரம் தேய்ப்பதைக் கவனித்தான். சிறிய பாத்திரத்தில் உள்ள தண்ணீரை வைத்தே கையளவு தண்ணீரை எடுத்து எடுத்துத் தேய்த்து வைத்தப் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தாள் சிக்கனமாக. அக்காவைப் பார்க்க பாவமாக இருந்தது ரமேசுக்கு. ``அவ்வளவு தண்ணி பஞ்சமாக்கா இங்க'' என்ற ரமேஷ் ``எல்லா இடத்திலும் இப்படித்தான் ஆயிடுச்சு. நம்மவூரு கூட முன்ன மாதிரி இல்ல. அங்கேயும் தண்ணி ரொம்ப கீழ போயிடுச்சி. பணம் உள்ளவங்க எவ்ளோ செலவு ஆனாலும் போர் போட்டுக்குறாங்க. இல்லன்னா எவ்ளோ பணம் குடுத்தும் வாங்கிக்கிறாங்க! நம்ம மாதிரி ஜனங்க எங்க போறது! கவர்ன்மெண்ட் குடுக்கிற தண்ணியத்தான் நம்பியிருக்க வேண்டியிருக்கு'' என்றான் ரமேஷ்.
            பள்ளியை விட்டு வந்த குழந்தைகள் ரமேஷைப் பார்த்ததும் ``ஹையா மாமா வந்திருக்குது'' என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ``ஏய் கொத்தவரங்கா கோமதி நல்லா படிக்கிறியா? வாடா கருப்பா'' என்று குழந்தைகளைக் கொஞ்சினான். ``நாளைக்கு நாம ஜாலியா கார்ல ஊர் சுத்தப் போலாமா?''. ``நாளைக்கு எங்களுக்கு ஸ்கூல் லீவுதான் மாமா'' என்றார்கள் குழந்தைகள் குதூகலமாக.
            மறுநாள் காலையில் அக்காவையும், குழந்தைகளையும் காரில் ஏற்றிக் கொண்டு கிளம்பினான் ரமேஷ். குழந்தைகள் பீச்சிலும், சிறுவர் பூங்காவிலும் மகிழ்ச்சியாக விளையாடினார்கள். செயற்கையான நீரூற்று அமைக்கப்பட்டிருந்தது. உயரத்தில் ஏறி, சறுக்கி, தண்ணீரில் வந்து விழுவதுமாக உற்சாகத்தில் மிதந்தார்கள். இதையெல்லாம் ரமா ரசித்தாலும் நமக்குப் பாத்திரம் கழுவ, கால் கழுவவே தண்ணி கிடைக்கல. இங்க மட்டும் இவ்ளோ தண்ணி எப்பிடி கிடைக்குது என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டாள்.
            அனைவரும் மறுபடியும் காரில் பயணமானார்கள். ஒரு கோயில் வாசல் அருகில் கார் நின்றது. எல்லோரும் கோயிலுக்குள் சென்றார்கள். சாமி கும்பிட்டு விட்டு வந்த ரமா, ரமேஷின் நெற்றியில் திருநீரைப் பூசினாள். ``என்னக்கா வேண்டிக்கிட்ட சாமிக்கிட்ட...'' ``எங்க ஏரியாவுல தண்ணி தட்டுப்பாடு தீரணும். எல்லாருக்கும் எல்லா வசதி வாய்ப்புகளும் கிடைக்கணும். ஜனங்க எல்லாம் ஒத்துமையா, சந்தோஷமா வாழணும்னு வேண்டிக்கிட்டேன்''

            ``அதெல்லாம் சாமி குடுக்காது. நல்ல கவர்ன்மெண்ட் தான் அதக் குடுக்க முடியும்.''  ``சரி... அதையெல்லாம் குடுக்குற நல்ல கவர்ன்மெண்டை குடுன்னு வேண்டிக்கிறேன்'' என்று சொல்லி மீண்டும் உள்ளே சென்றாள்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா