Wednesday 20 August 2014

போதை இட்டுச் செல்லும் பாதை...

S.கெஜராஜ்
375/K700
Mechatronics

``அக்கா....! அக்கா...!'' என்று அலறியவாறு உள்ளே நுழைந்த மணி, ``நம்ம மெயின் ரோடு ஓரம் மாமா, குடிச்சிட்டு விழுந்து கிடக்கிறாருக்கா'' என்றான். ``ஐயோ...! வீட்டுக்கு மட்டும் தெரிஞ்ச இந்தக் குடிப்பழக்கம் இப்போ ஊரு முழுக்க தெரிஞ்சு போச்சே!'' என்று பதறிக் கொண்டே தன் கணவனைத் தேடி ஓடினாள் சாந்தி!. கூடியிருந்த கூட்டத்தை விலக்கிக் கொண்டு தன் கணவனின் முகத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். ஈக்கள் மொய்த்து முகத்தையே மூடியிருந்தது.


``வீதிக்கு பத்து கடை திறந்து வச்சா இப்படித்தான்யா, அவனவன் விழுந்து கிடப்பான்'', ``சின்னவன்லேயிருந்து பெரியவன் வரைக்கும் வயசு வித்தியாசமில்லாம குடிக்கிறாங்க; நாடே இந்தக் குடியால அழிஞ்சு போயிடும்'!', ``ஏம்பா! ஒன்னு தெரிஞ்சுக்கோ, வீட்டு பொம்பளதான் இவன்களையெல்லாம் அடக்கி வைக்கணும்'' என்று கூடியிருந்தவர்கள் பேசிய வார்த்தைகள், அவள் நெஞ்சை ஈட்டியாய் துளைத்தன. தட்டுத்தடுமாறி தன் கணவனை ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்கு அழைத்துச் சென்றாள் சாந்தி.

மறுநாள் காலை தன் மனைவி மற்றும் மகள் முகத்தில் விழிக்க வெட்கப்பட்டான் இராமநாதன். ஈனக் குரலில் என்னை மன்னிச்சிடுங்கப்பா!'' என்றான். ``நீங்க திருந்தப் போறதில்ல, உங்களுக்கு உங்க சுயநலமும், குடியும்தான் முக்கியம்!'' என்ற மனைவியிடம் ``இனி குடிக்க மாட்டேன்'' என்று தலையில் அடித்து சத்தியம் செய்தான் இராமநாதன்.

இரண்டு நாள் கழித்து குடிக்க வேண்டும் என்ற வெறி மீண்டும் டாஸ்மாக் கடையை நோக்கி நடக்க வைத்தது. நண்பனுடன் சேர்ந்து போதை தலைக்கேற குடித்துவிட்டு தட்டுத் தடுமாறி வீடு வந்து விழுந்தான். விழுந்தவன், எழவேயில்லை. சாந்தி கஷ்டப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள்.

``அவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால, இரத்த அழுத்தம் அளவுக்கு மீறி, அவருடைய மூளைக்கு இரத்தம் செல்லும் பாதையிலே அடைப்பு ஏற்பட்டு, கைகால்கள் விழுந்த நிலையில இருக்காரு. எங்களால முடிந்ததைச் செய்றோம்'' என்றார் டாக்டர். இரண்டு நாட்கள் கழித்து கணவனின் உடல் இன்னும் மோசமான நிலைக்குச் சென்றது. நம்பிக்கையிழந்து செய்வதறியாது திகைத்தாள் சாந்தி. ஒரு வாரம் கழித்து, பல வேதனைகளுக்கு உள்ளாகி இராமநாதனின் உயிர் பிரிந்தது. இராமநாதனின் குடிப்பழக்கம் அவன் குடும்பத்தையே நடுத்தெருவுக்குக் கொண்டு வந்து விட்டது. கண்ணீரும் கம்பலையுமாய் நடைப் பிணமானாள் சாந்தி! 

போதை இட்டுச் செல்லும் பாதை... மரணப் பாதை!
எங்கோ ஒரு பாடல்... காதில் விழுகிறது!
``வாழ்க்கையெனும் ஓடம். வழங்குகின்ற பாடம்!
மானிடரின் மனதினிலே மறக்கவொண்ணா வேதம்''

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா