Wednesday 21 January 2015

அனைத்திற்கும் தீர்வு சமபங்கீட்டுமுறை சமூகமே

R.பத்மநாபன் 
760\D054
தலைவர், உழைப்போர்
உரிமைக் கழகம்

புராதன பொதுவுடைமை சமூகத்தில் மனிதன் உழைப்பின் பயனை அறிந்து, சமபங்கீட்டு முறை சமூகமாக வாழ்ந்தான்.  சமபங்கீட்டு முறை சமூகத்தில் மனித உழைப்பு அவரவர் சக்திக்கு இயன்றவாறுதான் இருந்தது. ஆனால் பயன்கள் அவரவர்களுக்குத் தேவையான அளவு பங்கிடப்பட்டது. மனிதன் மனிதம் என்ற உன்னத நிலையைப் புரிந்து கொண்டான். தனிநபர்  கட்டளைகள் கிடையாது. கூட்டு விவாதமுறை முடிவுகள் அடிப்படையில் சமூகம் முன்னேறியது. சமூகம் பல குழுக்களாக மாறிய பொழுது பண்டமாற்று முறை உருவானது. அப்போதும் சமபங்கீட்டு முறை சமூக அமைப்பே தொடர்ந்தது. சமூகத்தில் நிர்வாக அமைப்பு முறை தொடங்கி, பின் அதுவே அரசு என்று உருவெடுத்தது.

அரசு தொடங்கியவுடன் அதற்கு உள்ளடங்கிய கருவிகளாக நீதி, பாதுகாப்பு, வரி வசூலிப்பு, பரிபாலனம் என்ற அமைப்புகள் உருவாகின. அரசைக் கண்காணிக்க உருவான கூட்டுவிவாதமுறை குழுக்கள் சமபங்கீட்டு முறை சமூகத்தில் இருந்தது. அது அரசாங்கம் என அழைக்கப்பட்டது.
தனி மனித சொத்துரிமை உருவானபோதுதான் உழைப்புச் சுரண்டல் தொடங்கியது. உழைப்புச் சுரண்டல் என்பது நாளுக்கு நாள் பலவிதமாக அதிகரித்தது. அதனுடைய வளர்ச்சி சந்தை, மூலதனம், லாபம் என்று அடிமை சமூக அமைப்பை உருவாக்கியது. அடிமைச் சமூக அமைப்புமுறை, நிலப்பிரபுத்துவ அமைப்பு முறையாகப் பரிணமித்துப் பின் முதலாளித்துவ அமைப்பு முறையாக மாறியது.

முதலாளித்துவ அமைப்பு முறையில் அரசு அடக்குமுறை கருவியாக மாறி, முதலாளித்துவ அமைப்பில் இருந்து சமூகம் விடுபடாமல் பாதுகாக்கின்றது. முதலாளித்துவச் சமூகத்தில் மனிதம் மறைந்து போனது. உழைப்பின் பெரும்பகுதி சுரண்டப்பட்டுத் தனி மனித சொத்துக்களாக மாறி, குறிப்பிட்ட சிலரின் உடமையானது. அரசு அவர்களின் கேடயமாக மாறிப் போனது.

நவீன சமூகத்தின் அத்தனை பிரச்சனைகளுக்கும், உழைப்புச் சுரண்டலும், முதலாளித்துவ அமைப்பு முறையும்தான் காரணம், மனித சமூகம் மறுபடியும் மனிதத்துடன் நிறைவாக வாழ, மீண்டும் சமபங்கீட்டு முறை சமூகத்தை அமைப்பது அவசியம். உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக, உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டால் சமபங்கீட்டு முறை சமூகம் நிச்சயம் உருவாகும். சமபங்கீட்டு முறை சமூகமே அனைத்திற்கும் தீர்வு! உணர்வோம்! உருவாக்குவோம்!!

உலக நாடுகளில் அதற்கான பணிகளை உழைக்கும் வர்க்கம் தொடங்கி விட்டது. இந்தியாவில் உழைக்கும் மக்கள் ஒன்றாய் இணையாமல் பலவிதக் கூறுகளாகப் பிரிந்து, முதலாளித்துவத்திற்கு ஆதரவாக உள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், முதலாளித்துவத்தின் பிரதிநிதியாகவே மாறிவிட்டது. இந்திய மக்கள் இதைப் புரிந்து கொள்ள இயலாமல் சாதி, மத, இன, பிராந்திய உணர்வு கயிறுகளால் கட்டப்பட்டு உள்ளனர். இந்தக் கயிறுகளை அறுத்து மக்களை ஒற்றுமைப் படுத்துவதே உழைக்கும் மக்களின் பிரதானக் கடமை.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா