Thursday 22 January 2015

படிப்பு பெருங்காய டப்பாவா? அட்சயப் பாத்திரமா?

அனந்த நாராயணன்
 275\L192
99402 22619



படித்த படிப்பு, வேலையில் எவ்வளவு தூரம் கை கொடுக்கும்? இந்தக் கேள்வியே சிலருக்கு சிரிப்பை வரவழைக்கலாம். ``நாங்க படிச்ச படிப்புக்கும் செய்யற வேலைக்கும் சம்பந்தமே கிடையாது'' என்று சொல்பவர்கள்தான் எல்லா காலங்களிலும் அதிகம். உங்களோடு வேலை செய்பவர்களின் அடிப்படைக் கல்வித் தகுதிகளை ஆராயுங்கள். உங்களோடு டிகிரி முடித்தவர்கள் என்னவெல்லாம் வேலை செய்கிறார்கள் என்று ஆராயுங்கள். உண்மை புரியும். இன்று படித்து முடித்து அதே துறை சார்ந்த வேலைக்குப் போகிறவர்கள் மருத்துவர்கள் மட்டுமே (சிலர் மட்டுமே விதிவிலக்கு). இன்ஜினியரிங் என்பது 16வது வகுப்பு போல ஆகிவிட்டது. இன்று இன்ஜினியர்களை எல்லா தொழில்களிலும் பார்க்கலாம்.

படித்த படிப்பை நீங்கள் வேலையில் காட்ட முடிந்தால் பாக்கியவான். அப்போது கூட வேலையின் தேவை அறிந்து, நாம் கல்வி கற்கவில்லை என்பது வேலை செய்யும்போதுதான் தெரியும். பட்டங்களை பெரும் பெருமையாகக் கொண்டாடும் நம் சமூகத்தில் கல்வியின் தரம் பற்றிய நேர்மையான விமர்சனம், படித்த படிப்பின் சாதக பாதகங்கள் பற்றிப் பேசுவதில் சிரமங்கள் உள்ளன. நன்கு படித்தால் நல்ல வேலை; அதிகம் படித்தால் அதிகச் சம்பளம்; நல்ல மதிப்பெண்கள் நல்ல அறிவின் அறிகுறி போன்ற பிழையான கருத்துகள் கல்விச் சாலைகளில் வளர்த்து விடப்படுகின்றன. நிதர்சனம் வேலையில் சேரும் காலத்தில் தான் தெரிகிறது.

சிலர் நிறைய டிகிரிகள் படித்துக் கொண்டே இருப்பார்கள். அஞ்சல் வழியில் எனக்குத் தெரிந்த ஒருவர் நான்கு எம்.ஏ. பட்டம் வாங்கியிருக்கிறார். அத்தனையையும் பெயருக்குப் பின் சேர்த்துக் கொண்டே இருப்பார். ஆனால் ஒரு பைசாவுக்கு பிரயோசனமில்லை என்று அங்கலாய்ப்பார் அவரது மனைவி. கல்வி சம்பாத்தியத்திற்கு மட்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை; என்றாலும் அவரின் பட்டங்கள் அறிவின் தேடலா என்று விவாதிக்க வேண்டியுள்ளது.

நிறைய படிப்பது எங்காவது பயன்படும் என்று பரவலாக நம்புகிறார்கள். நிறைய பாடங்களை மேம்போக்காகப் படிப்பதை விட ஒரு விஷயத்தை ஆழமாகத் தொடர்ந்து படியுங்கள். பட்டத்தைவிட பாட அறிவும், செய்திறனும் முக்கியம். எது படித்திருந்தாலும் அத்துறையில் வந்த புதிய விஷயங்களைத் தொடர்ந்து படித்துப் புதுப்பித்துக் கொள்ளுங்கள். அதுதான் நிஜமான அறிவு. பெயருக்குப் பின் வரும் பட்டங்கள் அல்ல.

நீங்கள் செய்யும் வேலைதான் அறிவையும், திறனையும் வெளிப்படுத்தும். நீங்கள் என்றோ வாங்கிய பட்டங்கள் முன்பு பயன்பட்டது போல வருங்காலத்தில் பயன்படாது. முன்பெல்லாம் ஒரு முறை படித்துவிட்டு ஒருமுறை வேலைக்கு சேர்ந்தால் அது காலம் முழுவதும் கை கொடுக்கும். இன்று படிப்பு, வேலை, தொழில்  அனைத்தும் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து கற்க வேண்டிய வித்தையாக மாறி வருகிறது என்பதுதான் உண்மை.

உங்கள் படிப்பு காலி பெருங்காய டப்பாவா? அல்லது அட்சயப் பாத்திரமா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா