Wednesday 1 August 2012

"குறையொன்றுமில்லை" (சிறுகதை)



S.கெஜராஜ்
375\K700

      இனிமையான பாடலை ஒலித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் வேலை வாய்ப்பு பகுதிகளை இணைய தளத்தில் தேடிக்கொண்டிருந்தது திவாகரின் கணினி. திவாகர் இன்ஜினியரிங் முடித்து மாதங்கள் ஓடிக் கொண்டிருந்தன; மனதிற்குப் பிடித்த வேலைதான் இன்னும் கிடைக்கவில்லை. அம்மா வருத்தப்படுகிறாள். ஏதாவது ஒரு வேலையைத் தேடிக்கணும் என்று நினைத்தான் திவாகர்.

      தற்செயலாக மேசை மேல் இருந்த அன்றைய தினசரியில் வந்த விளம்பரம் கண்ணில் பட்டது.    ``தேவை : பகுதி நேர ஆட்கள்'' பேசுவதில் அருமை; தமிழில் ஆர்வம்; நேர்த்தியான உடல்வாகு;...! விளம்பர நோக்கத்தைப் பார்த்தால் பத்திரிக்கை நிருபருக்கான வேலை என்பதை திவாகர் புரிந்து கொண்டான்.

      ஆர்வத்துடன் ``எனக்கும் வி.ஐ.பி.களை பேட்டி எடுக்கணும்னு ஆசைதான்'' என்று நினைத்தான். திவாகரின் அம்மா சமையல் அறையில் பிஸியாக இருந்த நேரம், ``கலா அக்கா'' என்று குரல் கேட்டுத் திரும்பினாள், வாசலிலிருந்து மேனகா வெளிப்பட்டாள்.

      ``ஆ... வாம்மா மேனகா எப்படி இருக்க? ஆமா... என்ன வெயில்ல'' என்றாள் கலா. ``அதுவா...! சி.டி. பிளேயர் ரிப்பேராயிடுச்சு. அப்பா அம்மா இதுலதான் பழையப் படங்களா போட்டு பாப்பாங்க'' வெளியே கை காட்டியபடி ``இங்க ஒரு கடை இருந்திச்சிக்கா...! இப்போ அது மூடியே வச்சிருக்காங்க...'' என்னத்துக்குனு தெரியல என்றாள் மேனகா.

      ``உனக்கு சிடி பிளேயரை ரிப்பேர் செய்யணும் அவ்வளவுதானே.. என் கூட வா'' என்றாள் திவாகரின் தாய் உறுதியாக. ``திவா.! நீயும் அந்தக் கடை வரைக்கும் வாயேன்''  ``சரி வரம்மா'' என்றான் திவாகர். போய்தான் பார்ப்போமே என்று மனதில் நினைத்தவாறு.

      அது ஒரு சின்னக் கடையாக இருந்தாலும், சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. ``திருநிறை...! சவுக்கியமா...? எப்படி இருக்கே?'' ``அம்மா நல்ல இருக்கீங்களா'' என்றான் திருநிறை பவ்யமாக.

      ``இந்தப் பிளேயரை கொஞ்ச ரிப்பேர் செய்யணும்'' என்றாள் கலா.

      கைகள் சூம்பிய நிலையில் திருநிறை அந்தப் பிளேயரை வாங்கிக் கொண்டான். மேனகா, திவாகர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர் `இவர் எப்படி ரிப்பேர் செய்வார்!' மனதில் ஒரே குழப்பம்.

      ``கண் பார்த்தா கை செய்யும்'' ஆனா இங்கு கண் பார்த்ததைக் கால் விரல்கள்...! மிக லாவகமாக திருப்புளியைக் கொண்டு பிளேயர் ஸ்க்ரூவை கழற்றிய விதம் திவாகரைப் பிரமிக்க வைத்தது. கட்டை விரலுக்கும், நடுவிரலுக்கும் நடுவே வைத்து பற்ற வைத்த விதம் இப்படியும் செய்ய முடியுமா..?' மனதில் நினைத்த அத்தனையையும் அவன் கால் விரல்கள் செய்தன. `பட்ங்ழ்ங் ண்ள் டர்ஜ்ங்ழ் ஐய்ள்ண்க்ங்' மெதுவாகச் சொல்லிக் கொண்டான் திவாகர். சிறிது நேரத்திலேயே பிளேயர் ரெடியாகி, அதில் திரைப்பட குறுந்தட்டையும் போட்டு காண்பித்தான் திருநிறை. மிகவும் நியாயமான தொகையையும் பெற்றுக் கொண்டு பிளேயரை அவர்களிடம் கொடுத்தான்.

      ``அம்மா நீங்க போயிகிட்டே இருங்க நான் இதோ வந்திடுறேன்'' என்றான் திவாகர். மெதுவாக திருநிறையைப் பேட்டி கண்டான் திவாகர், ``தம்பீ, உன்கிட்ட சில விஷயம் பேசலாமன்னு இருக்கேன். உனக்கு சம்மதமா?'' என்றான் திவாகர்.

      ``இதெல்லாம் எப்படிக் கத்துக்கிட்ட...'' ``சார்... இதுக்காக நான் கிளாஸ் ஒன்னும் படிக்கல. ஆனா எங்க அண்ணன் கடையிலே போய் இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் கத்துக்கிட்டேன்.''

      ``இதைத் தவிர வேற ஏதாவது ரிப்பேர் செய்வியா?''

      ``சார்.. செல்போன்; டிவி கூட ரிப்பேர் பண்ணுவேன்'' என்றான் அமைதியாக ``இதுல கொஞ்சம் வருமானம் கிடைக்குது சார்...''

      திருநிறையிடம் பேசப் பேச அவன் திறமைகள் வெளிப்பட்டன. தன்னம்பிக்கை முகத்தில் ஒளிரியது. ஒரு அவயம் குறைந்தால் மற்றொன்று கூடும் என்பார்களே...! அது இதுதானா...! என வியந்தான் திவாகர். ``திருநிறை..! உனக்கு ``குறையொன்றுமில்லை'' என மன நிறைவுடன் அணைத்துக் கொண்டான் திவாகர்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா