Wednesday, 1 August 2012

காண கண்கோடி வேண்டும்



சு.சக்கீர்
240/J030

      நாம் வாழும் இந்த உலகம், குவாண்டா எனும் ஒரே புவியியல் பகுதியாக சுமார் அறுபது கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்ததாகவும், பிறகு பல கண்டங்களாகப் பிரிந்து சென்றதாகவும், ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலையானது.  குஜராத் மாநிலம் தாப்தி நதிக்கரை முதல் குமரி வரை நீண்டு செல்கிறது. இயற்கை எழில் கொஞ்சும்  இந்த மலையில் இன்னும் கொஞ்சம் நிலவும் தட்ப வெப்பத்தை அனுபவிக்க பல கோடி பேர் வந்து சென்றுள்ளார்கள். விரிவாக ஆராய்ந்தோம் என்றால் இலங்கை வரை இந்த மலைத்தொடர்கள் ஒரு காலத்தில் இணைந்து இருந்ததாக அறிந்து கொள்ள முடியும். சிலோன் ஃபிராக் மோத் என்று அழைக்கப்படும் காடை வகையைச் சார்ந்த மிருகங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையின் எல்லா பகுதிகளிலும் வாழ்கின்றன. உலகத்தில் எங்குமே காண இயலாத 15 அரிய வகை மிருகங்கள் (சிங்கவால் குரங்கு, வரையாடு போன்றவைகள்) மரங்கள், பாம்புகள் இந்தியாவின் பறவை இனங்களில் சரிபாதி எனக் காட்சியளிக்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

      இந்த மகத்தான பாரம்பரியத்திற்கு மகுடம் சூட்டும் விதமாக, ஐ.நா. சபையின் கீழ் இயங்கும் யுனெஸ்கோ, பாதுகாக்கப்பட வேண்டிய பாரம்பரியச் சின்னங்கள் என்ற பட்டியலில் மேற்கு தொடர்ச்சி மலையையும் இணைத்துள்ளது. ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள அமேசான் வனங்களைப் போன்று, அரிய வகை உயிரினங்களின் இருப்பிடமாக இந்த மலைத் தொடரின் 39 இடங்களை யுனெஸ்கோ தேர்வு செய்துள்ளது. சென்ற மாதம் ருஷ்யாவிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் நடைபெற்ற உலகப் பாரம்பரிய பாதுகாப்பு மாநாட்டில் இதற்கானத் தீர்மானமும் நிறைவேறியது. இதன் மூலமாக அழிவை நோக்கிச் செல்லும் நமது இயற்கை வளங்களையும், அரிய வகை உயிரினங்களையும் பாதுகாக்க, உலகளாவிய நிதியுதவியளிக்க உலக சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குழு (ஐ.யூ.சி.என்.) முன்வரும். டாக்டர் மாதவ் காட்கில் தலைமையிலான மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு நிபுணர்க்குழு அளித்த அறிக்கை வரும் காலத்தில், இயற்கை மீதான நமது அரசியல் பாதையை உருவாக்கத் தூண்டும் என நம்புவோம்.

      விடுமுறை நாட்களில் வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க ஊட்டி, கொடைக்கானல், மூணார் என குடும்பத்தோடு புறப்படுமுன், பாரம்பரியமிக்க நமது மேற்கு தொடர்ச்சி மலையின் செல்வங்களை ஒருபோதும் அழியவிடோம் என சபதமேற்றுச் செல்வோம். பூமி வெப்பமயமாவதைத் தடுத்து, இயற்கைக்கும், உயிர் இனங்களுக்கும் இடையேயான சுமூகமான உறவை, பல நூற்றாண்டுகள் தொடரவும் பூமியின் ஆயுளை நீடிக்கவும் நம்மாலானதைச் செய்வோம்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா