Wednesday, 1 August 2012

மெட்ரோ ரயில் - வடசென்னை திருவொற்றியூர் மக்களின் கனவு நனவாகுமா?



K.சுப்பிரமணி
250/L491

      ஆகும்! ஆம் தோழர்களே, நமது கனவு நிச்சயம் நிறைவேறும். ஏனென்றால், இப்பகுதியில் உள்ள தொழிற்சங்கங்கள் இப்பொழுது இக்கோரிக்கையை அரசிடம் முறையிட்டு செயல்படுத்த வேண்டும் என முடிவு செய்துள்ளன.

      முதலில் மெட்ரோ இரயில் திட்டத்தைப் பார்ப்போம். இந்த இரயில் கம்ப்யூட்டர் வசதியுடன், சுற்றுப்புறச்சூழல் மாசு ஏற்படா வண்ணம் மின்சார உதவியுடன், சாலையில் செல்லும் வாங்கனங்களைக் காட்டிலும் 50% எரிபொருள் சிக்கனத்துடன், 60% பயண நேரம் குறைவாகவும், பயணக் களைப்பு தெரியாவண்ணம் குளுகுளு வசதியுடன் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அடுத்த நிறுத்தத்தை அறிவிப்புடனும், சாலை அகலமாக உள்ள இடத்தில் 30 அடி உயர்நிலை பாலத்திலும், சாலை குறுகலாக உள்ள இடத்தில் பூமிக்கு அடியில் 60 அடி ஆழத்தில் மேலே உள்ள கட்டிடங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாவண்ணம், திருவொற்றியூர், உயர்நீதிமன்றம், சென்ட்ரல், அண்ணாசாலை, கிண்டி, எழும்பூர், புறநகர் பேருந்து நிலையம், விமான நிலையம் என சென்னையின் முக்கிய பகுதிகளை இணைக்குமாறு முதலில் 4 பெட்டிகளுடனும், பிறகு 6 பெட்டிகளுடனும் 5 நிமிடத்திற்கு ஒரு வண்டி என்று 2004ம் ஆண்டு ரூ.14,600\_ கோடியில் திட்டம் போட்டார்கள்.

      இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது 600 இருசக்கர வாகனங்களில் செல்வோர் (அ) 300 கார்களில் செல்வோர் (அ) 25 பேருந்துகளில் செல்வோர் ஒரு மெட்ரோ இரயிலில் பயணிக்கலாம். அப்படியென்றால் சாலையில் எவ்வளவு போக்குவரத்து நெரிசல் குறையும்? விபத்துகளும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் எவ்வளவும் குறையும்? போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி சாலையை அகலப்படுத்துகிறேன் என்று பலரின் வாழ்வாதாரமான வீடுகளையும், கடைகளையும் இடிக்க வேண்டியது இருக்காது.

      இப்படி எண்ணற்ற வசதிகளைக் கொண்ட மெட்ரோ இரயில் யாருக்கு முக்கியமாக தேவையோ அவர்களை அதாவது வடசென்னை திருவொற்றியூர் மக்களை புறக்கணித்துவிட்டு (1995 பறக்கும் இரயில் திட்டத்தில் வடசென்னையைப் புறக்கணித்ததைப் போல) வண்ணாரப்பேட்டையில் இருந்து துவக்கிச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

      இந்தத் திட்டத்தை அரசு முதலில் திட்டமிட்டபடியே திருவொற்றியூரில் இருந்து செயல்படுத்த வேண்டுமென ``வடசென்னை மக்கள் உரிமை கூட்டமைப்பு'' முதலில் குரல் கொடுத்ததுடன், திருவொற்றியூர் சமூக சேவை சங்கம், திருவொற்றியூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், ஈவஊஐ போன்ற சமூக அமைப்புகளுடன் சேர்ந்து உண்ணாவிரதம், நடைபயணம், மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாணவமாணவியர், ஆண்கள் பெண்கள் எனக் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் 30,000 பேர் கலந்து கொண்ட மாபெரும் `மனித சங்கிலி' போராட்டம் 13_10_2008 அன்று நடத்தப்பட்டது.

      மக்கள் பங்கேற்புடன் மார்க்சிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம் நடத்தியது. இப்படி பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு, அரசு இந்தத் திட்டத்தைத் திருவொற்றியூர் வரை விரிவு படுத்துவதெனவும், அதற்காக மண் பரிசோதனை செய்வதெனவும் தமிழக சட்டசபையில் ஆளுநர் உரையில் அறிவித்து, மண் பரிசோதனை செய்து சரியாக உள்ளது என அறிவித்தார்கள். ஆனால், அரசு அறிவித்தபடி வடசென்னையில் திருவொற்றியூரில் இருந்து மெட்ரோ இரயில் திட்டம் துவக்கப்படவில்லை.

      ஆகவே, வருங்கால போக்குவரத்தின் வரப்பிரசாதமான `மெட்ரோ இரயில்' திட்டத்தை முதலில் அரசு அறிவித்தபடி திருவொற்றியூரிலிருந்தே செயல்படுத்தப்பட வேண்டும் என திருவொற்றியூர் _ எண்ணூர் _ மணலி பகுதிகளில் உள்ள தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் 23.6.2012 அன்று கூடி தங்கள் தொழிற்சங்க செயற்குழுவைக் கூட்டி முடிவெடுத்து அரசுக்கு தெரிவிப்பதாகவும், பிறகு இக்கோரிக்கையை அரசுக்கு வலியுறுத்தி அனைத்துத் தொழிற்சங்கங்களும் சேர்ந்து ஒரு சுவரொட்டியை போடுவதெனவும், அதன் பிறகு 1 லட்சம் கையொப்பம் வாங்கி அரசுக்கு அனுப்புவதெனவும், மேலும் தேவைப்பட்டால் பல போராட்டங்களை நடத்தியாவது இந்தத் திட்டத்தை வடசென்னை திருவொற்றியூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளைச் சேர்ந்த பல லட்சம் மக்கள் பயன்பெறும் வண்ணம் அரசை செயல்படுத்த வைப்பதென முடிவெடுத்து செயல்படுத்திக் கொண்டுள்ளன.

      ஆகவேதான், அரசு நமது கோரிக்கையில் உள்ள உண்மையை ஏற்று ``மெட்ரோ இரயில்'' திட்டத்தை திருவொற்றியூர் வரை விரிவுபடுத்தும் என்றும், வடசென்னை திருவொற்றியூர், அதைச் சுற்றியுள்ள நாமும் சென்னையின் மற்ற பகுதிகளுக்கு ``மெட்ரோ இரயில்'' பயணம் செய்வோம் என்றும் நமக்கு நம்பிக்கை வந்துள்ளது.

      நண்பர்களே.... அரசை அசைப்போம்!
      நம் கனவு திட்டத்தை நனவாக்குவோம்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா