Wednesday, 1 August 2012

தொழிலாளி வர்க்கத்தின் முன் உள்ள சவால்களும்... தீர்வும்...



A.G.காசிநாதன்,
செயலாளர், சிஐடியு_வடசென்னை

      நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் இருந்து, முதலாளித்துவ சமுதாயம் உருவான போது, உதித்தெழுந்த தொழிலாளி வர்க்கம், அன்றிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு காலகட்டத்திலும், சவால்களைச் சந்தித்து முறியடித்து, தன்னுடைய இருத்தலை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது.

      தற்போது, நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதே நேரம், கேஷூவல், காண்ட்ராக்ட், அப்ரண்டீஸ் என்று பல்வேறு வகையில் தினக்கூலித் தொழிலாளியாக, நிரந்தரமற்ற தொழிலாளியாக, தொழிலாளர்களை மாற்றும் வேலையை அரசாங்கத்தின் உதவியோடு நிர்வாகங்கள் கச்சிதமாகச் செய்து வருகின்றன.

      இதன் பின்னணி என்னவென்றால், 1990_ம் ஆண்டு உலகமயமாக்கல் கொள்கையை மத்திய, மாநில அரசுகள் இந்தியாவில் அமல்படுத்தத் துவங்கிய பிறகு தொழிலாளர்கள் நிலையென்பது பல்வேறு வகைகளிலும் சீரழிக்கப்பட்டு வருகிறது. உலகமயமாக்கல் என்பதே வளர்ந்த நாடுகள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை வளரும் நாடுகள் மற்றும் மூன்றாம் உலக நாடுகள் தலையில் வைத்து கட்ட உருவாக்கப்பட்டது தான் என்ற அடிப்படையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

      1990_ம் ஆண்டு, முதலாளித்துவத்திற்குச் சவாலாக விளங்கிய சோவியத் யூனியன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவத்திற்கு ஆதரவாக ஏற்பட்ட மாறுதல்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட அசுர வளர்ச்சி ஆகியவை முதலாளித்துவத்திற்குச் சாதகமாகிப் போனது. சோவியத் பின்னடைவைப் பயன்படுத்தி முதலாளித்துவ நாடுகள் வளரும் நாடுகளின், மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரத்தை சீரழிக்கிறது. வளர்ந்த நாடுகளின் மூலதனக் குவியல் தேசியத் தொழில்களை பன்னாட்டு நிறுவனங்களின் பிடிக்குள் சிக்க வைத்துள்ளது.

      மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல, தன்னை மாற்றித் தகவமைத்துக் கொள்ளாத எதுவும் அழிவை நோக்கிச் செல்வதைத் தவிர்க்க முடியாது. மாறிவரும் உலகமயமாக்கல் சூழலைப் பயன்படுத்தி, முதலாளித்துவம் தான் வளர்வதுடன் தொழிலாளர்களுடைய உரிமைகளையும் சலுகைகளையும், வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் பறித்து வருகிறார்கள்.

      அடிப்படை உரிமையான சங்கம் சேரும் உரிமையே இன்றைய தினம் கேள்விக்குறியாக உள்ளது. 8 மணிநேர வேலையை அதிகப்படுத்த தொடர் முயற்சிகள் நடந்து வருகிறது. ஒரு சிலருக்கு அதிக ஊதியம் கொடுத்து, பலருக்கு குறைந்த ஊதியம் வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மென்பொருள் தொழிலில் அநேகமாக வேலை நேர வரம்பு என்பதே இல்லாமல் செய்துவிட்டார்கள். காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் மத்தியில் வேலை நீட்டிப்பைப் புகுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தொழிலாளி வர்க்கம் கடந்த காலங்களில் சங்கம் செயல்படுத்திய நடைமுறைகளை கைக்கொள்ள முடியாது என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். தங்களுடைய நடைமுறைகளை வெகுவாக மாற்றிக் கொள்வது தான் தற்போதைய சவால்களைச் சந்திக்க உதவியாக இருக்கும்.

      அவுட்சோர்சிங், காண்ட்ராக்ட், சப் அசெம்பிளி, இம்போர்ட் என அனைத்து தந்திரோபாயங்களையும் பயன்படுத்தி, தேவையையொட்டி தங்கு தடையற்ற உற்பத்தியைக் குவித்து அனைத்து பெரு நிறுவனங்களும் தங்களைத் தயார் நிலையில் மேம்பட்ட நிலையில் வைத்திருக்கின்றன. இந்தச் சூழ்நிலைதான் இன்றைய தினம் நம் ஒவ்வொருவர் முன்னும் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் சவால். இந்தச் சவாலை நாம் எப்படிச் சந்திக்கப் போகிறோம்? இதற்குத் தீர்வுதான் என்ன?

      ஒரு வளாகத்திற்குள் உழைப்பை விற்று வாழ்க்கை நடத்தும் காண்ட்ராக்ட், கேஷுவல், நிரந்தரத் தொழிலாளர்கள், ஒற்றுமையின்றி  பல்வேறு பிரிவுகளாக பிரிந்து நிற்பது எந்த நிலையிலும் பொருத்தமானதல்ல. ஒருவர் உதவியின்றி மற்றவர் வெற்றியடைவதென்பது அநேகமாக சாத்தியம் இல்லாத ஒன்றாக மாறியிருக்கிறது.

      ஆகவே, ஒரு வர்க்கம் என்ற முறையில், இந்த அரசின் கொள்கைகளை எதிர்த்து அனைத்துத் தொழிலாளர்களையும் ஒருங்கிணைப்பது நமது கடமையாகும். நம்மோடு பணிபுரியும் அனைத்து கேஷூவல், காண்ட்ராக்ட், அப்ரண்டீஸ் தொழிலாளர்களை ஒருங்கிணைப்பதும், அவர்கள் நலனை இயன்ற அளவு பாதுகாப்பதும் நமது வரலாற்றுக் கடமையாகும். திரட்டப்பட்ட அமைப்பு சார்ந்த தொழிலாளர்களும் திரட்டப்படாத அமைப்புசாரா தொழிலாளர்களும் ஒன்றுபட்டு ஒருவருக்கொருவர் உதவி செய்வதும், ஒற்றுமையோடு செயல்படுவதும் தான் இன்றைக்கு எழுந்திருக்கும் சவாலைச் சந்திக்க வெற்றிகொள்ள ஒரே வழியாகும்.

      ஒன்றுபடுவோம்... வல்லமை பெறுவோம்... போராடுவோம்... வெற்றி பெறுவோம்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா