Tuesday, 25 December 2012

வேகம்



சிறுகதை

S.கெஜராஜ் 375\K700 Mechatronics

      அந்த அரசியல் பிரமுகர் வீட்டின் முன் காலையிலேயே கட்சித் தொண்டர்கள் மற்றும் சக தோழர்கள் கூட்டம் நிரம்பி இருந்தது. ``தலைவரே... வணக்கம்! தலைவர் வாழ்க!'' கூட்டத்தில் இருந்த சிலர் அவர் வருவதைப் பார்த்துக் கூக்குரலிட்டனர். கூட்டத்தைப பார்த்து தலைவர் ``யோவ்! உங்களுடைய கூட்டத்துக்கும் ஆரவாரத்துக்கும் ஒண்ணும் குறைச்சலில்ல... ஆனா... ஓட்டுதான் வர மாட்டேங்குது!''

      ``தலைவா... இந்த முறை எப்படியும் உங்களை ஜெயிக்க வெச்சிடுவோம்!'' ``யோவ்! நம்ம சாதி சனமெல்லாம் என்னயா பண்றாங்க?'' வெறுப்புடன் தலைவர் கத்தினார். ``நான் முடிவா சொல்லிட்டேன். இந்த முறை நான் ஜெயிக்கிறதுக்காக என்ன வேண்டுமானாலும் பண்ணுவேன், மேலிடத்துல இருந்து காவல்துறை வரைக்கும் எல்லாத்துக்கும் எங்கிட்ட ஆளிருக்கு. பாத்துடலாம், இந்தத் தடவை ஒரு கை!'' பிரமுகரின் முகத்தில் கோபமும், ஒரு வெறியும் தெரிந்தது.
      பிரமுகரின் கைப்பேசி அலறியது... ``யாருய்யா வேணும்?'' பிரமுகரின் குரல் கணீரென்று ஒலித்தது. ``அப்பா, அப்பா! மறுமுனையில் பிரமுகரின் மகன் ``இன்னாடா... சொல்லு விசு!'' ``அப்பா, சன்னதி தெருவுல ஒரு பொம்பள குறுக்க வந்திடுச்சி... ஆக்சிடென்ட் ஆயிடுச்சி... நான் பைக்கை எடுத்துகிட்ட நிக்காம வந்துட்டேம்பா.... என்னாச்சி, ஏதாச்சி தெரிய பயமா இருக்குப்பா'' என்றான் விசு பயம் கலந்த குரலில். ``டேய், நீ விபத்தான இடத்துல இருந்த வந்திட்டல்ல... எல்லாம் நான் பாத்துக்குறேன், நீ வீட்டுக்கு வந்துரு''
      மீண்டும் பிரமுகரின் கைபேசி அலறியது... பிரமுகர் கைப்பேசி எடுத்துப் பேசியதும் முகம் மாறினார். ``இதோ உடனே வர்றேன்'' என்று கூறி வைத்தார். ``டிரைவர்... உடனே வண்டிய சன்னதி தெருவுக்கு விடு'' என்றார்.
      விபத்து... சுற்றி கூட்டம்! கூட்டத்தை விலக்கிப் பார்த்தார். பார்த்தவுடனே கதற ஆரம்பித்தார். ``ஐயோ... நான் மோசம் போயிட்டேனே. மரகதம், என்னை விட்டு போயிட்டியே'' என்று தரையில் உருண்டு கதறி அழுதார். மனைவியைக் கொன்றது தன் பிள்ளைதான் என்று அறிந்து அப்படியே மூர்ச்சையாகிப் போனார், அந்த அரசியல் பிரமுகர்.
      காவலர் பிடியில் இப்போது அரசியல் பிரமுகர் மகன். விவேகம் இல்லாமல், வேகமாய்ச் சென்று, அடிபட்டது யாரென்று கூட பார்க்காமல் அலட்சியப் போக்கில் இன்று தன் தாயின் சாவுக்குத் தானே காரணமாகிவிட்டோமே... என்று துடிதுடித்தான் விசு. விவேகமற்ற வேகம் எவ்வளவு பெரிய விளைவை ஏற்படுத்திவிட்டது என மனம் நொந்தான். குற்றம் செய்துவிட்டு அதை அரசியல் செல்வாக்கால் மறைக்க நினைத்ததை எண்ணிக் குறுகிப் போனான். எனக்கு இந்த தண்டனை தேவை என்று தண்டனையை ஏற்கத் தயாரானான் விசு.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா