Wednesday, 13 February 2013

தேசத்தின் அவமானம்


எஸ்.சுரேஷ்குமார் 217/37918



      கடந்த டிசம்பர் 16, 2012 அன்று இரவு தலைநகர் தில்லியில் 23 வயது மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, நடுரோட்டில் வீசி எறியப்பட்ட சம்பவம், உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஆனால் இது தலைநகர் தில்லியில் நடைபெறும் 635வது பாலியல் வன்முறையாகும்.
      மத்திய, மாநில அரசாங்க அமைப்புகளில் ஆழமாக வேரோடிப் போயிருக்கும் குறைபாடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வரக்கூடிய ஒரு அடையாளமாகவும், பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களைத் தடுக்க முடியாத அரசின் இயலாமையும் இன்றைக்கு பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. அந்த மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு, சாலையில் வீசி எறியப்பட்ட பிறகும் சாலையிலேயே கிடந்த செய்தி உண்மையிலேயே ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தலைகுனிய வேண்டிய செயல். காவல்துறை வந்த பின்பும், இதே நிலைமை நீடித்தது என்ற செய்தி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் கவலையோடு பார்க்க வேண்டியுள்ளது.

      இவ்வளவு பிரச்சனைகளுக்கும் இடையில் ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால், தலைநகர் தில்லியில் நடந்த மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களும், மாணவர்களின் எழுச்சியும், பல மாதர் அமைப்புகளின் தொடர் போராட்டங்களும், இடதுசாரி கட்சிகளால் நாடு முழுவதும் நடத்தப்பட்ட பல கட்ட போராட்டங்களும்தான். இதன் பலனாக பிரதமரும், ஜனாதிபதியும் இந்த பாலியல் வன்முறைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதும், இறந்த மாணவிக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. உடனடியாக மத்திய அரசு நீதிபதி ஜெ.எஸ்.வர்மா தலைமையில் குழு அமைத்து பொதுமக்களும், அமைப்புகளும், பாலியல் குற்றங்களைத் தடுக்க பரிந்துரைகள் அளிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டது.
      இதில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட பரிந்துரைகள் கவனிக்கத்தக்கது. கூட்டாக வன்புணர்ச்சி, குழந்தைகள் மீதான வன்புணர்ச்சி, கொடூரமான பாலியல் வன்குற்றங்களுக்கு வாழ்நாள் முழுவதும் கடுங்காவல் ஆயுள்தண்டனை விதிக்க வேண்டும். பாலியல் வன்முறைகள் தொடர்பான அனைத்து வழக்குகளும் மூன்று மாத காலத்திற்குள் தீர்வு காணப்பட வேண்டும். பாலியல் வன்முறைக்கு உள்ளான பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரண உதவி உட்பட மறுவாழ்வுக்கான ஏற்பாடுகள் குறித்து சட்டத்தில் அவசியம் வரையறுக்க வேண்டும். பெண்ணின் உடலை ஒரு நுகர் பொருளாக சித்தரிக்கும் மிக மோசமான பாலியல் வக்கிரத்தன்மை கொண்ட விளம்பரங்களும், பெண்களைக் கேவலமாகவும், இழிவாகவும் சித்தரிக்கும் செய்திகளும் ஒளிபரப்பப்படுவது, பிரசுரிக்கப்படுவது ஆகியவற்றைத் தடுக்கும் விதத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இத்தகைய மோசமான கலாச்சாரத்திற்கு எதிரான உணர்வு ஊடகங்களில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் குறித்த பாடம், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அனைத்துப் பாடத் திட்டங்களிலும் கட்டாயமாக்க வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு பாலின சமத்துவம் குறித்து போதிக்கும் பாடங்கள் இணைக்கப்பட வேண்டும். இப்பரிந்துரைகள் பின்பற்றப்பட்டால் நிச்சயம் பாலியல் குற்றங்கள் குறையும்.
      ஆனால் ஒன்று..., புறச்சூழல்தான் ஒரு மனிதனின் வாழ்வைத் தீர்மானிக்கிறது என்பதை யார் புறக்கணிக்க முடியும்! குற்றங்கள் உருவாக சமூகமே ஊற்றுக்கண்ணாய் இருக்கின்ற போது, அந்த ஊற்றுக் கண்ணை அடைத்தால்தான் குற்றங்கள் குறையும்! உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என நடப்பு நூற்றாண்டு நடைபோடுவதால் மூலதனப் பெருக்கமே மிக முக்கியம், லாபமே மிக அவசியம் என்று வந்துவிட்ட காரணத்தால் பெண்கள் வெறும் நுகர்வு சரக்குகளாக விவரிக்கப்படுகிறார்கள், கணினியில் ஆபாசக் காட்சிகளை இறக்கி வாலிபர்களின் மனதில் வக்கிர எண்ணங்கள் ஏற்படுத்த ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கின்றன. பெண்களைப் போகப் பொருட்களாக, போதைப் பொருளாக நினைக்கும் சிந்தனை வளர்க்கப்படுகிறது. இதன் விளைவு இந்தியாவில் பாலியல் பலாத்கார எண்ணிக்கை விகிதாச்சாரம் பல மடங்கு அதிகரித்துவிட்டது. ஆகவேதான் இப்போது தேவைப்படுவது சிந்தனையில் மாற்றம். அதை ஏற்படுத்த ஆண்-பெண் சமத்துவத்தை உறுதிப்படுத்த, சமூகத்தின் எல்லா தளங்களிலும் பெண்களுக்கு அதிகாரப் பங்களிப்பு என்பது உத்திரவாதப்படுத்த வேண்டும். அதற்கு சமூக மாற்றம் ஒன்றே வழி.
      நோய்க்கு மருந்து கொடுப்பதோடு நின்றுவிடக்கூடாது. நோய்க்கான காரணத்தை ஒழிக்க வேண்டும். பெண்கள் மீதான தாக்குதலை எதிர்த்துக் கொண்டே குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதிப்படுத்தியும், அதோடு நில்லாமல் சமூக மாற்றத்திற்காகவும் போராடும்போதுதான் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க முடியும். எனவே ஆண்-பெண் சமத்துவ சமுதாயம் படைக்க சபதமெடுப்போம்! தேசத்தின் அவமானம் துடைப்போம்!
 

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா