சு.சக்கீர், 240/J030
வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய தேச பாரம்பரியத்தை,
இசையின் வாயிலாக இணைப்பதில் சேர்ந்திசை முக்கிய பங்காற்றுகிறது. பல்வேறு
மொழிகளில் மாறுபட்ட கலாச்சாரத்தின் வெளிப்பாடாகப் படைக்கப்பட்ட பாடல்களை, ஒரே குழுவினர் ஒன்றன்பின் ஒன்றாக பாடும்போது நமது தேசபக்தி சிலிர்த்து எழுகிறது.
சேர்ந்திசை என்றாலே நம் நினைவுக்கு வருவது எம்.பி.எஸ். என்று அன்பாக அழைக்கப்படும்
எம்.பி.சீனிவாசன் பெயர்தான். அவர் மறைந்து 25 ஆண்டுகள் உருண்டோடி
விட்டன என்றாலும், அவரால் படைக்கப்பட்ட பாடல்கள் இன்றும் நமது
காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன. மானாமதுரை, பாலகிருஷ்ணா
ஸ்ரீனிவாசன், கல்லூரி நாட்களிலேயே முற்போக்குச் சிந்தனை கொண்டவராக
இருந்தார். மதராஸ் மாணவர்கள் சங்கம் வாயிலாக தனது அரசியல் ஆர்வத்தை அவர் வெளிப்படுத்தினார்.
பிறகு டில்லிக்கு இடம் பெயர்ந்தார். அங்கு இந்தியாவின் முதல் எதிர்க்கட்சி தலைவராக
இருந்த மார்க்சிஸ்ட் கட்சித் தோழர் ஏ.கே.கோபாலன் அவர்களின் அலுவலக செயலாளராக பணியில்
சேர்ந்தார். அங்கே, இந்தியன் பீப்பிள்ஸ் தியேட்டர் ஆர்ட்ஸ் (இப்டா) மூலமாக கலைத்துறையில் செயல்படத் துவங்கினார்.
காஷ்மீர் மாநிலத்தைச் சார்ந்த சஹீதா என்பவரைக் காதல் திருமணம் புரிந்தார் எம்.பி.எஸ்.
இந்தத் திருமணத்திற்கு ஏற்பாடுகளை செய்தவர் ஏ.கே.கோபாலன். திருமணத்தை முன் நின்று நடத்தி
வைத்தவர் பண்டித ஜவஹர்லால் நேரு.
1959ஆம் ஆண்டு குமரி பிலிம்ஸ் சார்பில் ``பாதை தெரியுது பார்'' என்ற திரைப்படம் மூலமாக எம்.பி.எஸ்
தமிழ் திரையுலகத்திற்குள் நுழைந்தார். 1962ம் ஆண்டு பின்னணிப்
பாடகர் ஜேசுதாசுக்கு ``கால்பாடுகள்'' என்ற
திரைப்படத்தில் ஸ்ரீ நாராயணகுரு இயற்றிய ``ஜாதி பேதம் மத துவேஷம்''
என்ற பாடலைப் பாட வாய்ப்பளித்ததன் மூலம் ஒரு புதிய வரலாற்றையே அவர் அறிமுகம்
செய்தார். 1970ல் மதராஸ் யூத் கொயர் என்ற சேர்ந்திசைக்குழு மூலமாக
தாகூர், பாரதியார், இக்பால், வள்ளத்தோள், ஓ.என்.வி.குரூப் போன்ற தேசியக் கவிஞர்களின்
பாடல்களை இசைத்தார் வங்கி, பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்கள் என பல பகுதி மக்களிடத்தில் இசை ஆர்வத்தை உருவாக்கியதோடு,
பல நூறு இசைக்குழுக்களையும் உருவாக்கினார். ஜான் ஆபிரஹாம் இயக்கிய அக்ரஹாரத்தில்
கழுதை என்ற திரைப்படத்தில் பேராசிரியர் நாராயணசாமி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவும்
செய்தார் அவர். நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ், மலையாள திரைப்படங்களுக்கு
இசையமைப்பாளராகப் பணியாற்றிய எம்.பி.எஸ்., மாற்றுத் திரைப்பட
கலாச்சாரத்தை முன்னெடுத்து சென்ற முக்கியமான கலைஞர்களுள் ஒருவர் ஆவார்.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா