Sunday 21 April 2013

ஸ்வீட் எடு! கொண்டாடு! - சிறுகதை


எஸ்.கெஜராஜ், 375/K700, Mechatronics

 

            பண்பலையில், அந்த மாலைப் பொழுதில் பண்பாக இனிய பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

            ``அங்கே மாலை மயக்கம் யாருக்காக...?

            இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக...!''

            அந்த பிரம்மச்சாரிகளின் அறையில்தான் இந்தப் பாடல் தேனாகப் பாய்ந்து கொண்டிருந்தது. பணி முடித்து, ஒவ்வொருவராக தங்கள் அறைக்கு வந்து சேர்ந்தனர்.

            ``டேய் கணேஷ் சும்மா போரடிக்குது. எங்கேயாவது போலாமாடா...?'' என்று வினவினான் ரமேஷ்...

            அதற்குள் ரவி உள்ளே நுழைந்தவன்... குறுக்கிட்டு, ``உங்களுக்கெல்லாம் ஒரு விஷயம் தெரியுமாடா...?'' என்று பொடி வைத்தான். ``பீடிகை போடாம சொல்லுடா...!'' என்றார்கள் மற்றவர்கள் ஒரே குரலில்.

            ``இன்னிக்கி நம்ம பரத்துக்கு சம்பள நாள். அதுவும் ஒரு பெரிய நிறுவனத்தில் சேர்ந்து முதல் முதலா ஒரு பெரிய தொகை வாங்குறான்னா பாத்துக்கோ...!'' என்றான் ரவி.

            ``அப்போ நமக்கு ஒரு பெரிய பார்ட்டி இருக்கு'' என்று ஒரே குரலில் சப்தமிட்டனர் இருவரும்...! ``டேய் நண்பர்களா! இதுதாண்டா நமக்கு நேரம் அவனிடமிருந்து நாம வாங்கக்கூடியது. இதை விட்டா அவன் பணத்தை ஊருக்கு அனுப்பிட்டேன்னு சாக்கு போக்கு சொல்லிடுவான்...!''

            உள்ளே நுழைந்த பரத்தை பார்த்து மூவரும் ஒரே குரலில் ``ஹாய்! பரத், கன்கிராஜூலேஷன்ஸ்... இன்னைக்கு உனக்கு முதல் சம்பளம் எங்களையும் கொஞ்சம் கவனிச்சுக்கப்பா...!'' என்றனர்.

            ``டேய்...! நண்பர்களா, நீங்க எல்லோரும் என் நலம் விரும்பி உங்களைக் கவனிக்கிறதுல எனக்கு மகிழ்ச்சிதான்டா...!'' என்றான் மனதில் மகிழ்ச்சியுடன் பரத்.

            ``சரி, எப்ப பார்ட்டி?'' என்றார்கள் மூவரும்...?

            ``இன்னும் அரைமணி நேரத்தில எல்லோரும் கிளம்புங்க'' என்றான் பரத்.

            வழியில் பரத் நிறைய இனிப்புகள், மற்றும் பழ வகைகள் வாங்கிக் கொண்டான். மற்ற நண்பர்களுக்கு ஒரே வியப்பு...! என்னடா...? பரத் ஆபிசுல யாருக்காவது கொடுக்கணுமா....? முதல்ல ஒரு இடத்துக்கு போறோம், அப்புறம் நம்ம பார்ட்டியெல்லாம்'' என்றான் பரத்.

            அந்த ஆசிரமத்தில் பரத் நுழையும் போதே அவனுக்குக் கிடைத்த வரவேற்பு, நண்பர்கள் மத்தியில் வியப்பை அளித்தது. ``பரத்

மாமா...''' என்று அழைத்தவாறு, ஆறு வயது சிறுமி, போலியோவினால் பாதித்த கால்களுடன் தவழ்ந்து வந்து பரத் காலை இறுகப் பற்றினாள்,!

            மேலும் அங்கேயிருந்த முதியவர் ``ஹேய்...! நம்ப புள்ள வந்திட்டாரு'' என்றார் பூரிப்புடன். இவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது, பாசம் ஒன்றே என்பது நிரூபணம் ஆயிற்று. ``டேய்...! ரவி, ரமேஷ், கணேஷ் அந்த ஸ்வீட்டு, பழங்கள் எல்லாம் உங்க கையால அவங்களுக்கு கொடுங்கடா என்றான் பரத் உற்சாகத்தில்.

            ``டேய்... பரத்! எங்க எல்லோருக்கும் இன்னோர் உலகமும் இருக்குதுன்னு, இவர்கள் மூலமா நீ உணர்த்திட்டே...!, மேலும் எல்லாத்துக்கும் பார்ட்டி, பார்ட்டினு கேட்டு, இதுதான் வாழ்க்கைன்னு  நாங்க இருந்திட்டோம். இனி மேல் நாங்களும் உன்னோடு இணைந்து ஒவ்வொரு மாதமும் இவங்களோடுக் கொண்டாடுவதுதான் எங்களோட இலட்சியமாய் நினைக்கிறோம்.'' என்றனர் பரத் நண்பர்கள் ஒருமித்த கருத்தாய். ``ஆசிரமத்தில் எதிர்பார்ப்பது நேசமும், பாசமும்'', நமக்கு இதன் மூலம் கிடைப்பது ஒரு பெரிய மனநிறைவு.''!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா