Tuesday, 15 October 2013

நெருக்கடிக்கு யார் பொறுப்பு?



தொழிலாளத் தோழர்களே!

            தொழிலகத்திற்கும், தொழிலாளர்களுக்கும் நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் உழைப்போர் உரிமைக்கழகம் தனது கருத்துக்களை தொழிலாளர்கள் மத்தியில் உறுதியாகவும், தெளிவாகவும் வலியுறுத்தி வந்திருக்கிறது. தற்போதும் இம்மடல் மூலம் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

உலக நெருக்கடி : உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி கடுமையான தாக்குதலைத் தொடுத்து வரும் இச்சூழலில், ஆட்டோமொபைல் தொழிலும் கடுமையாக பாதிப்படைந்து வருகிறது. நம் நாட்டில் பண முதலீடு செய்த உலக முதலாளிகள் அப்பணத்தை அப்படியே தங்களுடன் எடுத்துச் சென்று விட்டதால், அந்நியச் செலாவணி வீழ்ச்சியடைந்து ரூபாயின் மதிப்பு வேகமாக சரிந்து வருகிறது. மத்திய அரசு பின்பற்றி வரும் தவறான பொருளாதார, தொழில் கொள்கைகளே இதற்குக் காரணம். தொழிலைப் பாதுகாக்கவோ, தொழிலாளர்களைப் பாதுகாக்கவோ மத்திய அரசிடம் உறுதியான எந்த நடவடிக்கையும் இல்லாததால், ஒரு பாதுகாப்பற்ற சூழலில் இந்தியத் தொழிலாளி வர்க்கம் தள்ளப்பட்டிருக்கிறது. தொழிலாளி வர்க்கம் ஒன்றுபட்டு ஒற்றுமையோடு போராடினால் தான் இச்சூழலில் நாம் நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும்.


லேலண்ட் நிர்வாகத்தின்செயல்பாடுகள்: உலகளாவிய நெருக்கடியோடு, நமது லேலண்ட் நிர்வாகம் சரியான திட்டமிடல் இல்லாமல் அகலக் கால் வைத்ததும் நெருக்கடி முற்றியதற்கு பிரதான காரணம். இதற்கு எந்த விதத்திலும் தொழிலாளர்கள் பொறுப்பல்ல. போட்டியாளர்களை எதிர்கொண்டு, நமது வண்டிகளை விற்பனை செய்ய எந்த முயற்சியும் எடுக்காத நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள், தொழிலாளர்கள் உழைப்பால் உருவான சொத்துகளை எல்லாம் விற்று, இலாபம் காட்டி அந்தப் பணத்தைச் சுரண்டிச் செல்கிறார்கள். ஆனால், நெருக்கடியின் பாதிப்புகள் முழுவதையும் தொழிலாளர்கள் தலையில் திணிக்கிறார்கள். அதிகாரிகளுக்கு பேக்கேஜ் என்ற பெயரில் கோடிக்கணக்கான பணம் இத்தருணத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தொழிலாளர்களுக்கோ நிர்வாகம் வேலை நாளை குறைத்து சம்பள இழப்பு ஏற்படுத்தியுள்ளது.

            புது கன்வேயர் செட்டில்மெண்ட் முடித்து வண்டிகள் தந்தால் தான் அனைத்து வேலை நாட்களும் தருவோம் என்று சொன்ன நிர்வாகம், தற்போது புது கன்வேயரில் வண்டிகள் தந்தவுடன், தடாலடியாக பீஸ்ரேட் போல் கணக்கிட்டு வேலைநாட்களைக் குறைப்பது அநியாயம். ஆனால், அதிகாரிகளுக்கு மட்டும் ஆறு நாள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. டெய்ம்லர், எய்ச்சர், ஹுண்டாய் உள்ளிட்ட பல ஆட்டோமொபைல் தொழிலகங்களில் தொழிலாளர்களுக்கு வேலை நாள் குறைக்கப்படவில்லை. எனவே, இலாபம் வந்தால் அதிகாரிகளுக்கு, நெருக்கடி வந்தால் தொழிலாளர்களுக்கு என்ற லேலண்ட் நிர்வாகத்தின் செயல்பாடுகள் அப்படியே தொடர்ந்தால், தொழிலாளர்கள் தக்க பதிலடி தருவார்கள் என எச்சரிக்கின்றோம்.

சங்கத்தின் செயல்பாடுகள் : 700 வாரிசுகளுக்கு வேலை கிடைக்கும்; விட்டுப் போன இன்சென்டிவ் 50 பைசா தொகை கிடைக்கும்; தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு (ஆ.உ., ஈண்ல்ப்ர்ம்ஹ படித்த) டெஸ்ட் இல்லாமல் அதிகாரியாக வேலை கிடைக்கும்; ஒப்பந்தம் விரைவில் முடியும் என்ற எதிர்பார்ப்போடு குசேலன் அவர்களை சங்கத் தலைவராக தொழிலாளர்கள் தேர்ந்தெடுத்தனர். ஆனால் நிலைமையோ தலைகீழாக மாறிவிட்டது. நிர்வாகத்தின் தேவைகளை சங்கம் உடனே ஏற்று ஷாப் ஐஐ, டஈஐ, பழைய சேசிஸ் மூடப்பட்டது. சுமார் 800 தொழிலாளர்கள் சர்ப்பிளஸ் செய்யப்பட்டனர். புது கன்வேயர் செட்டில்மெண்டும் முடிக்கப்பட்டுவிட்டது. சங்கத்தின் துணைத்தலைவர் தோழர்.சக்திவேல் நிர்வாகத்தின் இத்தேவைகளை ஒப்பந்தத்தோடு இணைத்து பேச வேண்டும் என்று வலியுறுத்தியதை தலைவர் ஏற்றுக் கொண்டிருந்தால், தற்போது ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியிருக்கும். ஆகவே, இனிமேலும் தாமதிக்காமல் சங்கத்தலைவர் ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையை துரிதப்படுத்தி, சிறப்பாக ஒப்பந்தம் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாகத்தின் தேவைகளை எல்லாம் சங்கம் நிறைவேற்றித் தந்து விட்டதால், உடனடியாக ஒப்பந்தத்தை முடிக்க நிர்வாகம் முன் வர வேண்டும்.

            வேலை நாள் குறைப்பு பிரச்சனையில் நமது சங்கத்தின் செயல்பாடு ஏற்கத்தக்கதாய் இல்லை. ஞாயிறு வேலையின்மையும், வேலை நாள் குறைப்பில் உள்ளடங்கியது என்பதை சங்கம் நிர்வாகத்திற்கு உணர்த்த வேண்டும். நிர்வாகம் தன்னிச்சையாக ஞாயிறு வேலையை வெட்டுவதையும், வேலை நாளைக் குறைப்பதையும் சங்கத்தலைவர் ஏற்காமல் கண்டித்திருக்க வேண்டும். இது குறித்து சங்கத்தின் நிலைப்பாடு தெளிவில்லாமல் இருக்கிறது. சென்ற முறை லே-ஆப்-பிற்கு முழு சம்பளம் என்று விளம்பரப்படுத்திவிட்டு, பிறகு பிடித்தம் செய்தது நிர்வாகம். அத்தொகையை மீட்டுத் தந்தது தோழர் ப.ச.ச. தலைமையிலான சங்கம். இம்முறையாவது நிர்வாகத்திடம் ஏமாறாமல், சம்பளத்தை பிடித்தம் செய்யாமல் முழுமையாகக் கிடைத்திட உத்தரவாதப்படுத்த வேண்டும்.  சங்கத்தலைவர், சங்க நிர்வாகிகளின் கூட்டத்தைக் கூட்டி விவாதித்து, செயற்குழுவைக் கூட்டி சங்கத்தின் நிலையை தெளிவு படுத்த வேண்டும். சங்கம் தொழிலாளர்களை ஒற்றுமைப்படுத்தி நிர்வாகத்தை எதிர் கொள்ள வில்லையென்றால் நெருக்கடி முழுமையும் தொழிலாளர்கள் தலையில் சுமத்தப்பட்டுவிடும். இதுவரை வேலை நாள் குறைப்பால் ஒவ்வொரு தொழிலாளிக்கும் மொத்தம் சுமார் 25,000 ரூபாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 3200 தொழிலாளர்களுக்கும் கணக்கிட்டால் ரூ.8 கோடி சம்பளப் பணத்தை நிர்வாகம் பறித்துள்ளது எவ்வளவு அநியாயம்! ஆகவே, இனியாவது சங்கம் எச்சரிக்கை உணர்வோடு விழிப்பாக நடந்து கொள்ள வேண்டும்.

             சென்ற ஆண்டு நெருக்கடியின் போது தோழர் ப.ச.நம்பிராஜன் சங்க நிர்வாகிகளோடு இணைந்து மேற்கொண்ட ஜனநாயக அணுகுமுறையை நாம் அனுபவமாகக் கொள்ள வேண்டும். ஞாயிறு வேலையைக் கூட விட்டுத் தராமல் வாதாடிப் பெற்றோம். தவிர்க்க முடியாத சூழலில் இழப்புகளை தொழிலாளர்களோடு அதிகாரிகளும் பகிர்ந்து கொள்ளச் செய்தோம். ஒப்பந்தமே இல்லாத காலத்தில் இ.க. காலத்தை கிராஜிவிடியுடன் இணைத்து ரூ.9 கோடி பணப்பலன் பெற்றோம். `சங்கத்தை ஜனநாயக முறையில் நடத்தியதால் சங்கத்தின் கூட்டுபேர உரிமை வலுப்பெற்றது. சங்கத்தால் பல சாதனைகளை சாதிக்க முடிந்தது.
போனஸ் : 2012-13ல் நமது நிறுவனத்தின் விற்பனை (ற்ன்ழ்ய் ர்ஸ்ங்ழ்) 12,481.20 கோடி; நிகர லாபம் ரூ.433.71 கோடி; மொத்தம் 1,14,611 வண்டிகள் விற்பனை செய்துள்ளோம். நமது சங்கம் 20% உச்சவரம்பற்ற போனஸ், லாபத்தில் 10% பங்கும் கோரிக்கையாக வைத்துள்ளது (ரூ.48,000 + ரூ.43,320 = 91,320). சென்ற ஆண்டு சங்கத்தின் தலைவர் தோழர் ப.ச.நம்பிராஜன் முயற்சியில் தீபாவளிக்கு முன்பாகவே அனைத்து தொழிலாளர்களும் ஏற்கத்தக்க போனஸ் தொகையைப் பெற்றோம். அதே போல் இந்த ஆண்டும் சங்கத் தலைவர் குசேலன் சங்க நிர்வாகிகளை ஒன்றிணைத்து அதிகபட்ச போனஸ் தொகை பெற வேண்டும். பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வழங்கப்பட்டுவிட்டது. அதிகாரிகளுக்கும் பேக்கேஜ் கொடுக்கப்பட்டுவிட்டது. ஆகவே, தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய நமது நீண்ட நாள் கோரிக்கையாகவே இருக்கும் லாபத்தில் பங்கினை சங்கம் வென்றெடுக்க வேண்டும். சங்கம் நினைத்தால் நிச்சயம் சாதிக்க முடியும்.

சங்கமே! நிர்வாகத்தின் சதிகளை முறியடிக்க, தொழிலாளர்களை ஒற்றுமைப்படுத்தி, தொழிலாளர்களின் நலன்களை விட்டுக் கொடுக்காமல் செயல்படு.
தொழிலாளர்களே...

            வேறுபாடுகளைக் களைந்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து, நிர்வாகத்தை எதிர்த்துப் போராட வேண்டிய தருணமிது! ஆகவே, ஒற்றுமையோடு நிர்வாகத்தை எதிர்கொள்வோம்! நெருக்கடியில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வோம்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா