Tuesday, 15 October 2013

தொழிலாளி வர்க்க கலாச்சாரம்

சு.சக்கீர், 240/J 030

            மனிதனை இதர உயிரினங்களில் இருந்து மாறுபடுத்துவது சிந்தனை ரீதியாக மனிதகுலம் அடைந்துள்ள முன்னேற்றம்தான். மனித குல முன்னேற்றத்திற்கு மிகவும் உறுதுணையாக இருப்பது தெளிவான சிந்தனையும், அயராத உழைப்புமேயன்றி வேறில்லை.


            வளர்ச்சிக்கும், போராட்டத்திற்கும் இடையே மிக நெருக்கமான உறவு இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. உழைப்பிற்கும், உயர்வுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்த விரும்புவதைப் போல உழைப்பாளி வர்க்கத்திற்கும் உரிமைப்போராட்டத்திற்கும் இடையே இணைப்பு ஏற்படுத்த வேண்டியது மிக அவசியம். உடல் உழைப்பாளிகளும், மூளை உழைப்பாளிகளும் மற்ற பாட்டாளி சிந்தனையாளர்களும் ஒரே நோக்கத்துடன் ஒருங்கிணைந்து செயலாற்றும்போது புதியதோர் சமூக அமைப்பை உருவாக்க முடியும். ``தாழ்வில்லை, உயர்வில்லை, சமமென்ற நிலை வந்தால் வாழ்வின்பம் காண்போமடி சகியே!'' எனப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடிய புதியதோர் சமூக அமைப்பு அது.

            காக்கிச்சட்டை, கட்டையான உருவம், குழிந்த கண்கள், கடுமையான சொற்கள் எனத் தொழிலாளி வர்க்கத்திற்கே உரிய தனித்தன்மைகள் ஒரு காலத்தில் இருந்தது. இன்று நிலக்கரி சுரங்கங்களிலும், துறைமுகங்களிலும், தொழிற்சாலைகளிலும் பணிபுரியும் உடல் உழைப்பாளிகள், கொடுமையான முறையில் சுரண்டப்படும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், சட்டையின் மடிப்பு கூட கலையாமல் பணிபுரியும் மூளை உழைப்பாளிகள், நம் தொழிலாளி எல்லைக்குள் உள்ளனர். இருபதாவது நூற்றாண்டின் ஆரம்பத்தில் சமபந்தி போஜனம் என்பது சாதியத்திற்கு எதிரான புரட்சிகர நடவடிக்கையாக இருந்துள்ளது. இது இன்று தொழிற்சாலை உணவகத்தில் நடைபெறும் ஒரு சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது. தொழிலாளி வர்க்கக் கலாச்சாரத்தின் புரட்சிகரத் தன்மை என்பது சமூக ஏற்றத்தாழ்வுகளை, முற்றிலுமாக மாற்றியமைக்கும் வல்லமை படைத்தது என்பதை இதன் மூலம் நிரூபித்துள்ளோம். ஆனால் இத்தகைய சிறிய முன்னேற்றங்களால் மட்டுமே சமத்துவச் சமுதாயம் அமைந்து விடாது. மூலதனத்தால் தங்கு தடையின்றி கண்டம் விட்டு கண்டம் பாய முடியுமென்றால், அதன் தீய விளைவுகளையும், உலகளவிலான போராட்டத்தின் வாயிலாக தொழிலாளி வர்க்கம் சந்திக்கும் என்பதில் ஐயமில்லை.

            யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்ற உலகளாவிய ஒற்றுமை கீதத்தை எதிரொலிக்கும் மாபெரும் பணியை முன்னெடுத்துச் செல்ல தொழிலாளி, தொழிலாளி வர்க்க சிந்தனைகளைப் பேணுவது அவசியம். அனைவரும் ஒரே லட்சியத்தில் ஒருங்கிணைந்து சேர்ந்திசைப் பாடும் விதமாகத்தான் பாட்டாளி வர்க்கத்தின் குரல்வளம் இயற்கையாகவே அமைந்துள்ளது. புதியதோர் உலகை நிர்மாணிக்கும் கைவினைக் கலைஞர்களே! சக்தியோடு எழுவோம்! சமூக மாற்றத்தை உருவாக்குவோம்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா