ஆர்.ஜெயராமன்
மாநிலப்
பொருளாளர்
தீண்டாம் ஒழிப்பு
முன்னணி
காசேதான் கடவுளடா என்றதொரு பழைய சினிமா பாடல் உண்டு. காசு - பணம்
- துட்டு -
மணி, நல்லவாயன் சம்பாதிக்க நாரவாயன் திங்கறான் என்று இன்றைய
சினிமாப் பாடல் ஒன்றும் ஒலிக்கிறது. பணம் குறித்து பல பாடல்கள் கதைகள் சினிமாக்கள்
வெளிவந்துள்ளன. பணமே அனைத்துக்கும் மூலம் என்று இன்றைய சமூக அமைப்பு கருதுவதால் பணத்தைத்
தேடி மனிதன் ஓடுகிறான். பணத்திற்காக எதையும் இழக்கத் தயார் செய்யப்படுகிறான். தான்
வேலைக்குச் சென்று உழைத்து சம்பாதித்த கூலியில் தன் மனைவி, மக்களை
மகிழ்ச்சியாக வாழவைக்க பெற்றோர்களையும் தள்ளி வைக்கத் தயங்கவில்லை.
பிள்ளையை உயர்ந்த பள்ளியில் படிக்க வைக்க வேண்டும். மனைவியின் ஆசைகளை நிறைவேற்றிட
வேண்டும். டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மிஷின், ஏ.சி., புதிய
வீடு, பிளாட், நகைகள் வாங்க வேண்டும். சமூகத்தில் மரியாதை மிக்க மனிதனாக, கௌரவமாக வாழ பணம் அவசியம் தேவைப்படுகிறது.
எங்கே தேடுவேன் - பணத்தை எங்கே தேடுவேன்? என்ற என்.எஸ்.கே. அவர்களின்
பாடலைப் போல,
பணத்தை எங்கே, எப்படி அடைவது என மனிதர்கள் எல்லோரும்
ஏக்கப் பெருமூச்சோடு மூளையை போட்டு கசக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இதன்விளைவுகள் : சீட்டுப்பிடிக்கலாம், தீபாவளி - பொங்கல்
ஃபண்ட் பிடிக்கலாம், சேமித்த சிறு தொகையை வட்டிக்கு விட்டு பணம் தேடலாம். வேலை
நேரம் போக மற்ற நேரங்களில், வேறு பணிகளில் வியாபாரம் ரியல் எஸ்டேட், தரகர்
என பல பணிகளை செய்யலாம் எனத் தோன்றுகிறது. நாள் முழுவதும் பணத்திற்காக தேடி ஓடினாலும், நம் தேவைகள்
நிறைவேறும் அளவு பணம் கிடைப்பதில்லை. எல்லோரும் போட்டிக்கு வேறு வந்து விடுகிறார்கள்.
நாள் முழுதும் உழைத்தும், தொழிலாளர்களின் குறைந்தபட்ச தேவைகளைக் கூட நிறைவேற்றப்
போதுமான பணம் கிடைப்பதில்லை.
ஆனால், அதே சமயம் உழைக்கத் தெரியாத முதலாளிகளுக்கு கோடி கோடியாகப் பணம் குவிகிறது. அவர்களிடம்
மட்டும் பணம் எப்படிக் குவிகிறது?
பணம் எவ்வாறு தொழில் மூலதனமாக, நிதி மூலதனமாக மாறி லாபத்தைக் குவிக்கிறது
என்கிற துடிப்பை விதிகளை உலகிற்கு உணர்த்தியவர் காரல் மார்க்ஸ். அவரது கூற்றுப்படி மூலதனம் அனைத்து எல்லைகளையும் உடைத்து
பாயும் என்பதை இன்றைய உலகமயம் நமக்கு உணர்த்தியுள்ளது. மூலதனக் குவியலுக்கு ஏற்படும்
நெருக்கடிகளை சமாளித்துக் கொள்ள, மூலதனம் அனைத்து வழிகளையும் மேற்கொள்ளும்.
மூலதனக் குவியலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் சக்தி எது? பொருள்
உற்பத்தி சரக்காகி, சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கும் போதுதான் லாபம் கிடைக்கும்.
பொருள் உற்பத்தி செய்ய மூன்று சக்திகள் தேவைப்படுகிறது. அவைதான் உழைப்பு, கருவி, கச்சா
பொருட்கள். கருவி மற்றும் கச்சா பொருட்களின் விலையை சந்தையே தீர்மானிக்கும். உழைப்பின்
விலையை முதலாளியே தீர்மானிக்கிறான். உழைப்பின் விலையைக் குறைக்க குறைக்க மூலதனம் லாபம்
குவிக்கிறது. இதனால் உழைப்பைக் கொடுக்கும் தொழிலாளி வர்க்கம் தன் உழைப்புக்கான விலையை
உயர்த்தப் போராடுகிறது. லாப வெறி கொண்ட முதலாளி வர்க்கம் உழைப்பின் விலையைக் குறைக்கிறது.
இந்த முரண்பாடு மோதலாகி மூலதன குவியலுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது. தொழிலாளி வர்க்கத்தின்
ஒன்றுபட்ட போராட்டங்கள், முதலாளித்துவ ஆதிக்கத்தின் தாக்குதலை முறியடித்து முன்னேறுகிறது.
மூலதனத்தின் சுரண்டலைப் பற்றியும், தொழிலாளர்கள் தற்காத்துக் கொள்ளும்
வழிகளைக் குறித்தும் அடுத்த இதழில் காண்போம்.
(இன்னும் வரும்...)
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா