கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவரும், சிஐடியுவின் அகில இந்திய தலைவர்களில் ஒருவருமான தோழர் உமாநாத் அவர்களுக்கும், ஜனநாயக மாதர் சங்கத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய தோழர் பாப்பா உமாநாத் அவர்களுக்கும் பிறந்த இரண்டாவது மகள். பட்டம் பெற்று, வங்கியில் பணிபுரிந்து 2000_ம் ஆண்டில் தனது வங்கிப் பணியை ராஜினாமா செய்துவிட்டு, மார்க்சிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியரானார். மாதர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர்களில் ஒருவராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகிப்பவர். தேர்ந்த அறிவுஜீவியான வாசுகி, மக்கள் பிரச்சனைகளுக்காக நேரடியாக களத்தில் இறங்கிப் போராடவும் தயங்காதவர். சிறந்த பேச்சாளர். அருமையாக எழுதக்கூடியவர்.
சில வருடங்களுக்கு முன்பு காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் வேலைக்கு போகும் பெண்களில் பெரும்பான்மையோர் ஒழுக்கமாக இருக்க மாட்டார்கள் என்று பெண்களை இழிவு படுத்திப் பேசிய போது, துணிச்சலாக கண்டனக்குரல் எழுப்பியவர். சங்கர மடத்திற்கே சென்று பாலின சமத்துவ விஷயங்களில் வாதிட்டு வந்தவர். விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், ரேசன் கடையில் பொருட்கள் கிடைக்கவும் மக்களின் சுகாதாரப் பிரச்சனைகளுக்காகவும் புதிய புதிய வடிவங்களில் போராட்டங்களை நடத்தி அரசைத் தலையிடச் செய்தவர். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் நுட்பமான கருத்துகளை எளிய முறையில் எழுதவும், பேசவும் வல்ல தோழர்.உ.வாசுகி அவர்கள் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவது சாதாரண மக்கள் குரலை அங்கே எதிரொலிக்க உதவியாக இருக்கும்.
வடசென்னை தொழிலாளர்கள் பெரும்பான்மையோர் வசிக்கும் தொகுதி. மீனவர்கள், கடுமையாக உழைக்கும் பாட்டாளிகள், அன்றாடக் கூலியில் வயிற்றைக் கழுவும் மிகவும் சாதாரண மக்கள் நிரம்பிய வடசென்னையில் செய்ய வேண்டிய வேலைகள், கிடைக்க வேண்டிய திட்டங்கள் ஏராளமுண்டு. வலுவான மார்க்சிஸ்ட் கட்சி கிளைகளும், தொழிற்சங்க அமைப்பும் தன்னுடன் நிற்க, தோழர் உ.வாசுகி பாராளுமன்றத்தில் மக்கள் எதிர்பார்ப்புக்களை நியாயமாக எடுத்துச் சொல்லவும், அவற்றை நிறைவேற்ற பாடுபடவும் முடியும். அவசியம் உங்கள் பகுதியில் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் எல்லோரிடமும் எடுத்துச் சொல்லுங்கள். தோழர் உ.வாசுகி அவர்களை வெற்றிபெறச் செய்யுங்கள்.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா