இ.தவமணி
இன்ஜின் & யூனிட் அசெம்பிளி
செயற்குழு உறுப்பினர், ALEU
இன்ஜின் & யூனிட் அசெம்பிளி
செயற்குழு உறுப்பினர், ALEU
தொழிலாளர்கள் நாட்டின் முதுகெலும்பு என்பார்கள். ஆனால் உண்மையில் முதுகெலும்பு மட்டுமல்ல, நாடி நரம்புகள் அனைத்தும் தொழிலாளர்களே! இவ்வுலகில் காணப்படும் அனைத்தும் தொழிலாளர்களின் உழைப்பால் உருவானது. இயற்கையின் சீற்றங்களில் இருந்து மனிதகுலத்தைக் காப்பாற்ற ஆறுகளைக் கட்டுப்படுத்தியவன் தொழிலாளி. ஏரிகளையும், அணைகளையும் கட்டியவன் தொழிலாளி. ஆலைகள், நவீன இயந்திரங்கள் அனைத்தும் தொழிலாளியின் உழைப்பின் மூலமாகவும், சிந்தனை மூலமாகவும் உருவானவையே. தொழிலாளர்களின் உழைப்பினால் உருவானவைகளை உண்டு கொழுப்பவர்களே முதலாளிகள். மனித உடலில் உருவாகும் நோய்க் கிருமிகளை அழிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி போல் தொழிலாளி வர்க்கம் செயல்படுகிறது.
முதலாளித்துவ அமெரிக்காவில் மனிதாபிமானமற்ற முறையில் 12 மணி நேரம், 18 மணி நேரம் என கடும் சுரண்டலுக்கு உள்ளான போது, எதிர்த்து போராடி 8 மணி நேரம் உழைப்பு, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் என உலகிற்கு பறைசாற்றியவர்கள் தொழிலாளர்கள்.
முதலாளித்துவ கொள்கையினால் இந்தச் சமூகத்தை அனைவருக்குமான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியாது. கடும் வறுமையையும், வேலையின்மையையும் உருவாக்கி சமூகத்தின் வளங்களை சில பேர் அனுபவிக்க, பலபேர் வறுமையில் வாடச் செய்வது தான் முதலாளித்துவம். இதை மாற்றி உலகின் அனைத்து வளங்களையும் அனைத்து மக்களும் அனுபவிக்க முதலாளித்துவத்திற்கு மாற்றாக சோசலிச சமூகத்தைப் படைத்தவர்கள் தொழிலாளர்கள்.
இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் முதலாளித்துவத்தின் இன்னொரு வடிவமான பாசிசம் முன்னுக்கு வந்தது. ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகள், இன வாதத்தைத் தூண்டி, மனித இனமக்களை மனிதாபிமானமற்ற முறையில் அழித்த போது, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டு ஹிட்லருக்கு ஆயுத உதவி செய்து, முதன் முதலில் தொழிலாளி வர்க்க தலைமையில் ஆட்சி அமைத்த சோவியத் யூனியனை அழித்திட நினைத்தது. ஆனால் ஹிட்லர் படைகளை ஓட ஓட விரட்டி, ஹிட்லரின் ரிச்ஸ்டாக் மாளிகையில் தொழிலாளர்களின் செங்கொடியை ஏற்றியது சோவியத் யூனியனின் செஞ்சேனை.
இன்றைக்கு உலகமய, தாராளமயத்தினால் தொழிலாளர் வர்க்கத்தின் மீது அதிகப்படியான தாக்குதல் தொடுக்கப்படுகிறது. புதிதாக தொடங்கிய ஆலைகளில் சங்கம் அமைக்கும் உரிமை முற்றிலும் மறுக்கப்படுகிறது. 8 மணி நேர வேலைக்காக போராடிப் பெற்ற உரிமை இன்று பறிபோகிறது. காண்டிராக்டில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வேலை நேர அளவே கிடையாது. முதலாளித்துவத்தின் லாப வெறிக்காக உழைப்பாளி மக்கள் கசக்கிப் பிழியப்படுகின்றனர். இதை எதிர்த்து நாம் போராட வேண்டும். தற்சமயம் முதலாளித்துவத்தின் கை ஓங்கினாலும் இறுதி வெற்றி தொழிலாளி வர்க்கத்துக்கே என்பதை நிலைநாட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை. அதற்கான பணிகளில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள இந்த மேதின நாளில் சபதமேற்போம்!
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா