Sunday, 27 April 2014

மனிதன் மகத்தானவன்

J.ஜேசுதாஸ், 
மாநிலச் செயற்குழு
தமுஎகச

தானே படைத்தவற்றிடம் மண்டியிட்ட மனிதனின் கதை மிகவும் ரசிக்கத்தக்க ஒன்றாகவே இருக்கிறது. மிருக வாழ்வில் இருந்து முற்றாக மனிதன் விடுபட்ட காலம் சுமார் 1.5 லட்சம் ஆண்டுகள் இருக்கலாம் என்றே ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இக்கால இடைவெளியில் உலகம் மாறி, சூழலும் மாறி, மனிதன் மாறி மாறி அவன் சிந்தனையும் மாற்றமடைந்து வந்துள்ளது.

மனிதனின் வாழ்வை இடைமறித்த இயற்கையின் மீது அவன் நடத்திய எதிர்த்தாக்குதல் அனைத்தும் தான் வாழ வேண்டும் என்ற கருத்தில் இருந்து உருவானது. இந்தச் சிந்தனைதான் அவனுக்கு இயற்கையை வழிபட வேண்டும் என்ற எண்ணத்தையும், அப்படி வழிபட்டால் தன்னை அது பாதுகாக்கும் என்ற ஆசையும் உண்டானது.

பேய் மழையிலும், கடுங்குளிரிலும், சூறாவளியிலும், அடர் இருட்டிலும், மேலும் தன்னைக் கொல்ல வரும் மிருகங்களோடும் போராடும்போதும், தன்னுடன் இருந்தவர்களை இழந்த போதும், இறந்தவனின் நினைவுகள் தன்னைவிட்டு அகலாத காரணத்தைத் தேட வேண்டி இருந்தது. பிணங்களே ஆதிகால கடவுளாக இருந்த வரலாறு, இன்னும் பல நாடுகளின் ஆதிவாசிகளிடம் அப்படியே இருக்கிறது. தனி மனிதனாக நின்று இயற்கையை எதிர்க்க இயலாதவன், இனமாக, குலக்குழுவாக நின்று எதிர்த்தான். விளைவு குலத்தலைவன் அல்லது தலைவி அந்தக் குலத்தின் தெய்வமாக பின்னாளில் உருவாகினர். மனித இன வரலாற்றில் இந்த மாற்றம் பற்றி சமூக அறிவியலாளர் திரு.வீல் டூரண்ட் கூறும்போது குலத் தலைவனுக்கோ, அரசனுக்கோ இன்று நாம் செய்யும் அனைத்துச் சிறப்புகளும் நவீன தெய்வங்களுக்கும் செய்யப்படுவதை அவர் மேற்கோள் காட்டுகிறார்.

இன்றைய தொல்பொருள் ஆய்வாளர்கள் அனைவரும் ஒரு விஷயத்தில் ஒத்த கருத்துடையவர்களாக இருக்கின்றனர். அது தென் அமெரிக்க மாயா நாகரிகமானாலும், எகிப்திய, ரோமானிய கலாச்சாரமானாலும், பண்டைய தமிழர் நாகரிகமானாலும் முன்னோர் வழிபாடும், மிகவும் சிறப்புக்குரிய ஒன்றாகவே இருந்துள்ளது.

பிணங்களைத் தாழிகளில் இட்டு மூடியதும், மம்மிகள் 4000 ஆண்டுகளாகியும் இன்றும் கெடாமல் இருப்பதும், இறந்தவனின் உடல் மீது பிரமிப்பூட்டும் கட்டிடங்களை எழுப்பி இருப்பதும், பிண வழிபாட்டுச் சின்னங்களே. குலத்தலைவன் இறந்தால் அந்தக் குலமே தற்கொலை செய்து கொண்ட காலமும் ஒன்று இருந்தது. மலையின் கீழே கூரான கம்புகள் நட்டு, மலையின் மீது ஏறி அதில் வீழ்ந்து மடிந்த பழங்கால வரலாற்றை எழுதி மாளாது. இதன் தொடர்ச்சியாக கணவன் தெய்வத்திற்குச் சமம், அவன் இறப்புக்குப் பின்பு வாழ்க்கை இல்லை எனக் கூறிய இந்திய அரசர்களின் மனைவிமார்கள் நூற்றுக்கணக்கில் தீக்குண்டத்தில் வீழ்ந்து சதிமாதாக்களான வரலாறு இந்தியாவில் ஏராளம். இதைக் கண்டு மிரண்டு போய் அயல் நாட்டு படையெடுப்பாளர்கள் செய்வதறியாது கைப்பிசைந்து நின்ற காட்சியும் உண்டு. அப்படியானால் கடவுள் என்பவர் யார்? ஆன்மா என்பது என்ன? பிரம்மம் எதைக் குறிக்கிறது. ஆவியும், பேய் பிசாசுகளும் இருக்கிறதா? இந்த உலகின் வாழ்வை இழந்து விட்டால் நாம் எங்கே போகிறோம்? காலம் காலமாக மனிதனின் இந்தக் கேள்விகள் தொடரத்தான் செய்கின்றன. கடவுள்களின் மறுபக்கத்தில் நவீன சமூகத்தின் விஞ்ஞான வளர்ச்சி பற்றிய சுவையான செய்திகளும் ஏராளம்... அதைப் பற்றியும் நாம் பேசித்தான் ஆகவேண்டும்.       
                     
<ஆகவே.... பேசுவோம்....>

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா