K.N.சஜீவ்குமார்
217\37918
217\37918
காட்சி 1 : Jack_ம், Rose_ம் டைட்டானிக் கப்பலில் பயணம் செய்கிறார்கள். கப்பல் பனிப்பாறை மீது மோதி மூழ்குகிறது. கடல் கடந்து கரையை எட்ட வேண்டிய கப்பல், கடலின் அடியில் இருக்கும் தரையைத் தொட்டுவிடுகிறது. பனிப்பாறைகளின் தன்மை என்னவென்றால் 1\3 பாகம் தான் வெளியில் தெரியும், பாக்கி 2 \3 பாகம் வெளியில் தெரியாமல் நீருக்கு அடியில் இருக்கும்.
காட்சி 2 : ஒரு திருடன் தன்னை பிடிக்க ஓடிவரும் மக்களிடம் பிடிபடாமல் இருக்க தானும் அவர்களுடன் சேர்ந்து ``திருடன்! திருடன்!! பிடியுங்கள்!'' என்று கத்திக் கொண்டே ஓடுகிறான். எதிரே வரும் மக்கள் யாரைப் பிடிப்பது என்று தெரியாமல் விழிக்கின்றனர். நம் குடும்பங்களில் பிள்ளைகள் யாராவது அரசியல்வாதி ஆகப்போகிறேன் என்றால் வருத்தப்படுவோம். அரசியல் ஒரு சாக்கடை என்று அறிவுரை கூறுவோம். ஆனால் அவர்களே பில் கேட்ஸ் அல்லது அம்பானி ஆகப்போகிறேன் என்றால் அகமகிழ்ந்து போகிறோம். மும்பை தெருக்களில் துணிகளை முதுகில் சுமந்து விற்ற அம்பானியை ``உழைப்பால் உயர்ந்தவர்'' என்று கொண்டாடுகிறோம். ஆனால் காலில் கோணியைக் கட்டிக் கொண்டு வெயிலில் வெந்து ``ரோடு'' போடும் தொழிலாளியின் உழைப்புக்கு எந்த விலையும் இல்லை. அவர் உழைப்பால் எந்த உயர்வையும் அடையவில்லை.
எனவே உழைப்பு மட்டும் அம்பானியை உயர்த்தவில்லை. அதோடு அவர் செய்த தில்லுமுல்லுகளும் வெற்றிக்குப் பின்னால் உள்ளது. அரசியல்வாதிகள் என்றால் கெட்டவர்கள் என்ற பிம்பம் உள்ளது. அரசியல்வாதிகளில் பலர் ஊழல் செய்கிறார்கள். அவர்கள் சட்டப்படி தண்டனை பெறவேண்டும். ஆனால் அரசியல்வாதிகள் அடிக்கும் கொள்ளை ஒரு சிறிய பாகம்தான். காட்சி 1ல் வெளியே தெரியும் ஐஸ் பாறை போல. ஆனால் பெரிய திருடர்கள் அம்பானி, டாடா, அடானி போன்றவர்கள் <கடலுக்கு> அடியில் மறைந்திருக்கும் பனிப்பாறைகள் போல. வங்கிகள் திவாலாவதற்கும், பங்கு மார்க்கெட் சரிவதற்கும், சாதாரண மக்களின் சேமிப்பு அபேஸ் செய்யப்படுவதற்கும், நிலத்தடியில் உள்ள வளங்கள் <எரிவாயு, சுரங்கம், கனிமம்> கொள்ளை போவதற்கும் இவர்களே காரணம். பெட்ரோல் விலை கூடி அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வதும் இவர்கள் சதியால்தான். ஆனால் நாம் அம்பானி பெயர் ஃபோர்ப்ஸ் பணக்கார பட்டியலில் இருப்பது அறிந்து பூரித்துப் போகிறோம்.
அரசியல்வாதிகளில் நல்லவர்கள் இருப்பதை மறைக்கும் பத்திரிகையும், டி.வி.யும், அம்பானி, டாடா ஆகியவர்களைத் தேசத் தியாகிகள் போல சித்தரிக்கிறார்கள்.
காட்சி 2ல் தான் தப்பிக்க கவனத்தைத் திசைதிருப்பும் திருடன் போல, தாங்கள் செய்யும் பெரிய திருட்டை பூசி மறைக்க எல்லா அரசியல்வாதிகள் மீதும் சேற்றைப் பூசி ஜனநாயகத்தைப் பரிகாசம் செய்கின்றனர். எனவே, இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்தில் ஊழலை ஒழிக்க முடியாது. வறுமையையும் ஒழிக்க முடியாது. இலாபத்தைப் பின்னுக்குத் தள்ளி மக்கள் நலனை முன்னிறுத்தும் சமுதாயமே சோசலிசம். அதைக் கொண்டுவர உழைக்கும் தொழிலாளர்களால்தான் முடியும்.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா