R.பத்மநாபன்
760\L054
தலைவர்,
உழைப்போர்
உரிமைக் கழகம்
சுதந்திரப் போராட்டத்திற்குப் பின் சுதந்திர இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற
சோசலிச ஜனநாயகக் குடியரசாகப் பிரகடனப்படுத்திக் கொண்டார்கள். ஆனால் சுதந்திரப் போராட்டம்
நடந்த போது இந்திய கம்யூனிஸ்டுகள் இந்தியா ஒரு சோசலிச நாடாக உருவாக வேண்டும் என்று
முயற்சித்தார்கள். சுதந்திர இந்தியா பெரும்பான்மையினரான உழைக்கும் மக்களுக்கான அரசாக
இருக்க வேண்டும் என்றும், அதற்கான சட்டம் உருவாக
வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்கள்.
அன்றைய தினம் ஆட்சியாளர்கள் இந்தியாவில் ஒரு முதலாளித்துவ ஆட்சி அமைப்பதிலேயே கவனமாக
இருந்தார்கள். சாதாரண மக்களுக்கான பொருளாதாரம் மேம்பட விவசாயம், கைத்தொழில், சிறுதொழில்,
நடுத்தரத் தொழில், உயர் தொழில்,
அரசு சார்பு தொழில் என இந்தியப் பொருளாதாரத் திட்டம் வகுக்கப்பட்டது.
ஆனால் மத்தியில் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் ஆட்கள் தான் மாறினார்களே தவிர இந்திய
பொருளாதாரத்தை முற்றிலும் ஒரு முதலாளித்துவ பொருளாதாரத்திற்குக் கொண்டு சென்று விட்டார்கள்.
1991-க்கு பிறகு இந்திய ஆட்சியாளர்கள் பெரும்பான்மை மக்கள் நலன்களுக்கு
எதிராக உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்ற கொள்கையை அமுல்படுத்தி, கார்ப்பரேட் நிர்வாக முறையைப் புகுத்தி, பன்னாட்டு முதலாளிகள் கொள்ளையடிக்க வழி அமைத்தார்கள்.
சோவியத் மற்றும் உலக நாடுகளில் ஏற்பட்ட சோசலிச பின்னடைவுக்குப்
பிறகு ஏகபோக முதலாளித்துவத்தின் சுரண்டல்முறை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பெரும்பான்மை
உழைக்கும் மக்களைச் சுரண்டத் துவங்கிவிட்டது. உழைப்பின் நேரம் அதிகரிப்பு, சம்பளக் குறைப்பு, நிரந்தர வேலையின்மை
எனப் பல வழிகளிலும் நேரடியாகச் சுரண்டத் துவங்கியுள்ளது. சாதாரண மக்களுக்கான மானியங்கள்
வெட்டப்பட்டு, பெருமுதலாளிகளுக்குச் சலுகைகள் வாரி வழங்கப்பட்டன.
அது மட்டுமல்லாமல் உழைப்பாளி மக்கள் போராடிப் பெற்ற சலுகைகள் பறிக்கப்பட்டன. பெரும்பான்மை
மக்களின் நலன்களுக்காக வசூலிக்கப்படும் வரிகளில் பெரும்பகுதி அரசாங்கத்தின் உதவியுடன்
சூறையாடப்படுகிறது. ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் பன்னாட்டு
மற்றும் உள்நாட்டுப் பெருமுதலாளிகளின் ஏஜெண்டுகளாகவே செயல்படுகின்றன. உலகத்தோடு இணைவோம்
என்ற மாய கோஷத்தைச் சொல்லிக் கொண்டு இந்தியாவின் செல்வத்தையும், கனிம வளங்களையும் இந்தியப் பெரு முதலாளிகளுக்கும் அந்நிய ஏகபோக
முதலாளிகளுக்கும் ஆட்சியாளர்கள் தாரை வார்க்கிறார்கள். உழைக்கும் பெரும்பான்மை மக்களுக்குச்
சொந்தமான செல்வங்கள் கொள்ளை போவதைத் தடுக்க, மக்களைத் திரட்டி, பலமுனைப் போராட்டங்களை நடத்திக் கொண்டே பெரும்பான்மை
மக்கள் நலன் காக்கும் மாற்றுக் கொள்கை அரசை உருவாக்க கம்யூனிஸ்டுகள் அரசியல் களப்பணியில்
இருக்கிறார்கள்.
உலகம் முழுவதும் உள்ள ஊடகங்களும், கார்ப்பரேட் முதலாளிகளின் கையில் சேர்ந்துவிட்டன. உண்மையான செய்திகள் கூட மறைக்கப்படுகின்றன.
ஜனநாயக முறையில் இயக்கம் நடத்துவதற்குக் கூட அனுமதி மறுக்கப்படுகிறது. இனியும் உழைக்கும்
வர்க்கம் பொறுமையாக இருக்காது. உலக இடதுசாரி இயக்கங்களோடு அணிதிரண்டு உழைக்கும் வர்க்க
அரசை உருவாக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா