Wednesday 1 August 2012

உள் நாட்டு மக்களைப் புறக்கணிக்கும் உணவுக் கொள்கை



க.ராமையன்
221\36038

      உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்கிறது முதுமொழி. ஆனால் நமக்கெல்லாம் உயிர்கொடுக்கும்  விவசாயிகளின் நிலையை மேம்படுத்தும் வகையில் அரசின் கொள்கை அமைந்துள்ளதா? இதுகுறித்து சில கருத்துக்களை உங்கள் முன் வைக்கிறோம்.

      நமது நாட்டில் 2010_11ம் ஆண்டு வேளாண் பருவத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டி 24.10 கோடி டன் அளவு உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட உற்பத்தி அதிகரித்துள்ளது. 2000_ஆம் ஆண்டு முதல் இந்திய அரசு அறிமுகப்படுத்தி வரும் புதிய விவசாயக் கொள்கைக்கு கிடைத்துள்ள வெற்றி எனப் பெருமிதத்தோடு நமது பிரதமர் அறிவித்துள்ளார்.

      ஆனால் இந்த அறிவிப்புக்கு நேர்மாறாக நமது விவசாயிகளின் யதார்த்த நிலைமை உள்ளது. உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகள் மோசமான நிலையில் உள்ளனர். 1995 முதல் 2010 வரை இந்தியாவில் 2,56,913 விவசாயிகள் வாழ வழியின்றி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2010_ம் ஆண்டில் மட்டும் 15,964 விவசாயிகளும், மகாராஷ்டிராவில் மட்டும் சுமார் 40,000 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது.

      விவசாய மாநிலங்களான ஆந்திரா, ம.பி., உ.பி., பீகார், ஒரிசா உள்ளிட்ட மாநிலங்களில் 10 ஆண்டுகளில் வாழ வழியின்றி 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்து தமிழகத்தில், பல்வேறு பன்னாட்டு தொழில் நிறுவனங்களில் உரிமைகள் ஏதுமின்றி கூலி அடிமைகளாக பணியமர்த்தப் பட்டுள்ளனர். சிலர் கட்டுமானப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

      வேறு தொழில் ஏதுமின்றி, தொடர்ந்து விவசாயம் செய்துவரும் சிறு விவசாயிகள் மோசமான கந்துவட்டி கடன் வலைக்குள் சிக்குண்டு தவிக்கின்றனர். சிலர் உடல் உறுப்புகளை வறுமையின் காரணமாய் விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சுமார் 65 ஆண்டுகளாக பெரும்பாலான விவசாயிகளின் நலன்களுக்கு எதிராகவே விவசாயக் கொள்கை செயல்படுகின்றன. அரசின் கொள்கை விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் புத்துணர்ச்சி அளிக்கவில்லை. 1994_95ல் இந்தியா உலக வர்த்தக அமைப்புகளோடு செய்து கொண்ட ஒப்பந்தங்கள் இந்திய விவசாயத்தை உலக சந்தையோடு இணைத்துள்ளன. அவை, ஏற்றுமதியை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படுகின்றன.

      மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டம், உணவு தரக்கட்டுப்பாடு சட்டம், பன்னாட்டு நிறுவனங்களின் நலன்களையே பாதுகாக்கின்றன. அனைவருக்கும் பொதுவிநியோக திட்டத்தை நடைமுறைப்படுத்தி வந்த மத்திய அரசு, ரபஞ வில் கையொப்பமிட்டவுடன் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என ஒரு பிரிவினரை ஏற்படுத்தி தகுதி வாரியாக பல வண்ண குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மீண்டும் தற்போது உணவு பாதுகாப்பு மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

      இன்று இலவச அரிசி கிடைத்தாலும் வெளி மார்கெட்டில் அரிசி ரூ.40\_க்கும் மேல் விற்கப்படுகிறது. உணவு தானியக் கிடங்குகளில், உணவுப் பொருட்கள் முறையான பராமரிப்பின்றி எலிகளுக்கும், பெருச்சாளிகளுக்கும் உணவாகிறது. விவசாய நிலம் குறைந்து கொண்டே போகிறது. விளைநிலங்கள் பண்ணை நிலங்களாக்கப் படுகிறது. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்படுகிறது. விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு பலியாகிறது. சிறு விவசாயிகளும், விவசாயக் கூலிகளும், அவர்களது நிலையில் இருந்து தூக்கி வீசப்பட்டு தொழிலாளிகளாக நகரங்களுக்கு புலம்பெயர்ந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

      நமது நாடு விவசாயம் சார்ந்த நாடு. விவசாயத்தில் தன்னிறைவு பெற்றால்தான் நாம் தலைநிமிர்ந்து நிற்க முடியும். சமரச அரசியலை புறந்தள்ளி இந்திய விவசாயிகளை தொழிலாளி வர்க்கத்தோடு இணைத்து அரசியல் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் விவசாயத்தையும் நமது தேசத்தையும் பாதுகாக்க முடியும்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா