அ.ஜோசப்
பிரேம்நாத்
250\L988
மெட்ராசுக்கும் பாரிசுக்கும் என்ன தொடர்பு?
பிரெஞ்சுக்காரர்களிடம் தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டிருந்த பிரிட்டிஷார்
தங்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு பகுதிக்கு பிரான்சின் தலைநகர் பெயர் வர
எப்படி அனுமதித்தார்கள்?
சென்னையின் மையப் பகுதியான பாரீஸ் கார்னர்
என்று அழைக்கப்படும் பாரிமுனையைக் கடக்கும்போது இப்படி ஒரு கேள்வி எழலாம். இந்தக்
கேள்விக்கான விடையை நான் தேடிய போது, சற்றும் எதிர்பாராத பதில் கிடைத்தது.
பாரீசுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும்
இல்லை என்றும்; ஒரு சுவாரஸ்யமான மனிதர்தான் இந்தப் பெயர் வரக் காரணம் என்றும்
தெரியவந்தது. தாமஸ் பாரி என்ற அந்த மனிதர் இங்கிலாந்தின் வேல்ஸ் நகரில் இருந்து
இந்தியாவில் வியாபாரம் செய்வதற்காக 1788ஆம் ஆண்டு மெட்ராஸ் வந்தார். கிழக்கிந்திய
கம்பெனியாரிடம் அனுமதி பெற்று தனி வர்த்தகராகத் தம்மைப் பதிவு செய்து கொண்ட பாரி,
பல்வேறு பொருட்களின் விற்பனையில் ஈடுபட்டார். அவரின் முக்கிய வியாபாரம்
வட்டிக்குப் பணம் கொடுப்பது. வட்டி என்றால் சாதாரண வட்டியல்ல 12.5% வட்டி.
ஆனாலும், அவரிடம் வட்டிக்கு வாங்க நிறைய பேர் இருந்தார்கள். திப்பு சுல்தான்
போன்றவர்களோடு சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் என்பதால் போர்த் தேவைகளுக்காக
கிழக்கிந்திய அதிகாரிகளும், நிறைய இளவரசர்களும் பாரியிடம் கையேந்தினார்கள்.
பாரியின் வியாபாரமும் ஓஹோவென்று இருந்தது.
இதனால் 1792ல் பாரி சொந்த அலுவலகம் ஒன்றைத் தொடங்கினார். திடீரென்று வியாபாரத்தில்
நஷ்டம் வர அனைத்தையும் விட்டுவிட்டு கர்நாடக நவாப் கருவூல அதிகாரியாக சிறிதுகாலம்
பணியாற்றினார். அதன்பின் இப்போது பாரீஸ் கார்னர் என்று அழைக்கப்படும் பகுதிக்கு
வந்தார். ஒரு பக்கம் சீற்றம் காட்டும் கடல், மறுபுறம் உள்ளூர் மக்கள்
தங்கியிருக்கும் கருப்பர் நகரம் என அதிகம் பேர் விரும்பாத இடமாக அது இருந்தது.
அங்கு வாலாஜா நவாபிற்கு சொந்தமான வீடு இருந்தது. அதை வாங்கித் தனது அலுவலகமாக
மாற்றினார் பாரி. 1817ம் ஆண்டிலேயே அனைவரும் அண்ணாந்து பார்க்க வைக்கும்
அடுக்குமாடி கட்டிடம் அது. வியாபாரத்தின் நிறைய ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த
பாரிக்கு பார்ட்னராக வந்து சேர்ந்தார் ஜான் வில்லியம் டேர். பாரி கட்டிடத்தின்
பெயர் டேர் ஹவுஸ் என இருப்பதற்கு இந்த பேர் தான் காரணம். பாரியும் டேரும் கப்பல்
தொழிலில் நங்கூரம் பாய்ச்சிப் பணம் பார்த்தனர்.
இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக 1823ல்
இங்கிலாந்து திரும்ப முடிவெடுத்தார் பாரி. அவரை வழியனுப்ப உள்ளூர் வர்த்தகர்கள்,
பொதுமக்கள் ஒரு தங்க டீ கப்பை விழாவுக்காக தயார் செய்தனர். அவர் தீடிரெனத் தனது
பயணத்தை ரத்து செய்து விட்டாலும், அந்தக் கோப்பையை அவருக்குப் பொதுமக்கள்
வழங்கினர். இந்தளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்ததற்கு பாரியின் மனிதாபிமானமும்,
ஏழைகளுக்கு அவர் செய்த உதவியுமே காரணம். தாமஸ் பாரி எழுதி வைத்த உயிலே அவரது இரக்க
மனதுக்கு அத்தாட்சி. தனது உறவினர்களுக்கு மட்டுமின்றி வேலைக்காரர்களுக்கும்
சொத்தில் பங்கு கொடுத்தவர் பாரி.
எங்கிருந்தோ வந்து, சென்னை வீதிகளில்
அலைந்து திரிந்து, மெட்ராஸ் என்ற மாநகரின் வரலாற்றில் இடம்பிடித்து விட்ட
பாரியையும், டேரையும் பாரிமுனையும், அங்கிருக்கும் டேர் ஹவுசும் நினைவுபடுத்திக்
கொண்டே இருக்கிறது. தாமஸ் பாரியின் உடல் கடலூரில் அவர் அடிக்கடி சென்று வழிபட்ட
தேவாலயத்தில் புதைக்கப்பட்டிருக்கிறது. ``பாரீஸ் கார்னர்'' இனி மறக்க முடியுமா?
சென்னை குடிமக்கள் அறிந்துகொள்ள வேண்டிய செய்தி. நன்று.
ReplyDelete