Wednesday, 1 August 2012

தோல்வி முகம்



B.H.அனந்த கிருஷ்ணமோகன்
250\37837

      அன்று, முதலாளித்துவம் இனி வரும் காலங்களில் உலகில் தொழில் புரட்சியை உருவாக்கி, மக்கள் வாழ்க்கையை சுபிட்சமாக்கும், வளமாக்கும் என அறைகூவல் விடுத்தவர்கள், இன்று ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியைக் கண்டு, புதிய பொருளாதாரக் கொள்கையின் தோல்வியை ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறார்கள். ஆனால் மத்தியில் ஆளும் அரசாங்கமோ இதைப் பற்றியெல்லாம் சிறிதுகூட கவலைப்படாமல் இன்னமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம்.

      அண்மையில் உலகப் பொருளாதார தர மதிப்பீடு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்திய நாட்டின் எதிர்காலப் பொருளாதாரம் நிலைத்தன்மை என்ற நிலையில் இருந்து எதிர்மறை தன்மை என்ற நிலைக்குச் செல்கிறது என்ற அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டு இருக்கிறது. இதை உறுதி செய்வது போல் சென்ற ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சி 6.5% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இது 2009_10 வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் இது பெரும் வீழ்ச்சியாகும். இப்படி நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வரும்போதும், மத்தியில் ஆளும் ஆட்சியாளர்கள் பல வரிச்சலுகைகளை இந்திய பெருமுதலாளிகளுக்கு அளித்து வருகின்றனர். சென்ற 5 ஆண்டுகளில் மட்டும் 20 லட்சம் கோடிகள் மானியமாக இந்த பெருமுதலாளிகளுக்கு அளித்துள்ளனர். ஆனால் ஏழை மக்களுக்கு அளிக்கும் மானியத்தை மட்டும் பெரும் செலவாக எண்ணி மத்திய அரசு புலம்புகிறது. ஏழை மக்களுக்கு ஆண்டொன்றுக்கு மத்திய அரசு செலவிடும் தொகை 75000 கோடிகள் மட்டுமே. மானியம் என்ற பெயரில் பெரு முதலாளிகளுக்கு 20 லட்சம் கோடிகளைக் கொட்டிக் கொடுத்தால் எப்படி எழுச்சி பெறும் நம் பொருளாதாரம்?

      மத்தியில் ஆளும் ஆட்சியாளர்களின் தவறான பொருளாதாரக் கொள்கையினால் ஏற்படும் இழப்பை வரிகள் என்ற பெயரில் மக்கள் மீது சுமத்தி பெரு முதலாளிகளுக்கு பாதிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்கிறது மத்திய அரசு. நமது நாட்டின் வருவாய் பல வழிகளில் வீணடிக்கப்படுகிறது.

      கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு நம் நாட்டு வருவாய் பெருமளவில் செலவிடப்படுகிறது. நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் என்பது உள்நாட்டுத் தேவையில் வெறும் 30% மட்டுமே பூர்த்தி செய்கிறது. மீதம் 70% அந்நிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இப்படி இறக்குமதி செய்யும் எண்ணெய்க்கு டாலர்களில் மட்டுமே பரிவர்த்தனை நடைபெறுகிறது. 70% இறக்குமதி என்னும் போது அது 21 இலட்சம் பீப்பாய்கள். அதன் மதிப்பு நமது நாட்டு ரூபாயில் 98,000 கோடிகள். இப்படி நாளொன்றுக்கு நாம் அமெரிக்க டாலரை 98,000 கோடியை பயன்படுத்தும்போது, இதன் மூலம் நமக்கு ஏற்படும் இழப்பு மிக அதிகம்.  இதை சரி செய்ய முடியாதா? ஏன் முடியாது? பெட்ரோல் பயன்பாட்டை வெகுவாக குறைப்பதன் மூலம் இறக்குமதி அளவை குறைத்துக் கொள்ளலாம். மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி கண்டிப்புடன் அமல்படுத்தினால் இது சாத்தியமே. ஏனெனில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஈரானில் கூட ரேஷன்முறை தான் அமலில் உள்ளது. எனவே, இந்த ஒரே துறையில் மட்டும் அரசு கவனம் செலுத்தினால் கிடைக்கும் வருவாய் பல ஆயிரம் கோடி எனும் போது, தவறான பொருளாதாரக் கொள்கையைக் கைவிடும்போது நாட்டின் வளர்ச்சி என்பது சாத்தியமே. அதைவிட்டு பழைய பல்லவியைத் திருப்பிப் பாடினால் அவர்களின் தோல்வி முகம் விரைவில் வெளிப்படும்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா