Wednesday, 1 August 2012

இனியொரு சுதந்திரம் | கவிதை



S.சுகுமார்
266/C858

சுதந்திர நாடாம்!
இது சுதந்திர நாடாம்!
வெள்ளையனை விரட்டியடித்து
நாம் பெற்றிட்ட சுதந்திரம்!
ரெட்டி சகோதரர்கள்
பெட்டி நிரப்பிடவா?
ஸ்பெக்ட்ரம் ஊழலில்
ஊறித் திளைத்திடவா?

ஆங்கிலேயரோடு போட்டி போட்டு
தன் உடைமைகளை விற்று
கப்பல்விட்ட தியாகச் செம்மல்
வஉசி பட்டதுயர் கொஞ்சமா?
இறுதி நாளில் சோற்றுக்கு வழியின்றி
வாடி, வதங்கி உயிரை விட்டதும்
நம் தேசம் களவு போகவோ?

தேசம்தான் என் சொத்து
என்றிட்ட ஜீவாவும்
தேசத்தின் சொத்தே நீங்கள்தான்
என்றுரைத்த மகாத்மாவும்
எண்ணற்றவர் தியாகத்தால்
நாம் பெற்ற சுதந்திரம்
பன்னாட்டு முதலைகள்
நம் நாட்டை சூறையாடிடவோ?

வாஞ்சிநாதன் கண்ட கனவு
நிச்சயம் இதுவல்லவே!
ஆஷ்துரையைச் சுட்டுப்
பொசுக்கிய அவன்
மக்களை வஞ்சிப்போரை
சுட்டுப் பொசுக்க மாட்டானா?

மக்களின் வாழ்க்கை கந்தலாகிக்
கிழிந்து நொந்து கிடக்கையிலே
இந்தியா வளர்வதாக ஓயாமல்
காதில் பூ சுற்றுகிறது அரசு!
எத்தனை காலம்தான் இனி பொறுப்பது?
தயாராவோம்... இப்போதே நாம்
இன்னொரு சுதந்திரப் போருக்கு...

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா