Wednesday 1 August 2012

வாழ்த்துச் செய்தி | T.N.நம்பிராஜன்



T.N.நம்பிராஜன்
தொழிற்சங்கத் தலைவர், A.L.E.U.

வணக்கம்.

      உரிமைக்குரல் இதழ் ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மகிழ்வான இத்தருணத்தில் சில கருத்துகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.      பொருளாதார நெருக்கடி அமெரிக்காவில் ஏற்பட்டு, ஏராளமான வங்கிகள் திவாலான போது, அமெரிக்க அரசாங்கம் மக்கள் வரிப்பணத்தில் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை வங்கிகளுக்கு இழப்பீடாகத் தந்தது. அந்த நெருக்கடி உலகம் முழுமையும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் நமது அசோக்லேலண்ட் நிறுவனமும் தப்பவில்லை. லே_ஆப்பால் தொழிலாளர்கள் பாதித்தனர்.

      அமெரிக்காவைத் தொடர்ந்து தற்போது, பொருளாதார நெருக்கடி ஐரோப்பாவின் கிரீஸ் நாட்டை முதலில் தாக்கி, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, போர்சுகல் என்று வேகமாகப் பரவி வருகிறது. இது ஆசியாவிலும் பரவும் நிலை ஏற்பட்டிருக்கிறது. நெருக்கடியில் இருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ள சீன நாடு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்திய அரசாங்கமோ தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்காமல், நாம் கடன் வாங்கிக் கொண்டிருந்த IMF - உலக வங்கிக்கு 10 பில்லியன் டாலர் பணம் தருவதாகக் கூறியுள்ளது. நம் நாட்டில் நெருக்கடி வரும்போது யார் நம்மைக் காப்பாற்றுவார்கள்? முதலாளித்துவத்தில் நெருக்கடி என்பது இயல்புதான். நமது அரசாங்கம் நம்மைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, எந்தத் தீர்க்க தரிசனமும் இல்லாமல் நமது கொள்கை உருவாக்கப்பட்டிருக்கும் காரணத்தால், இங்கும் நெருக்கடி முற்றி வருகிறது என்பது பொருளாதார நிபுணர்களின் கணிப்பு.

      நமது அரசாங்கம் பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளை தங்கு தடையின்றி வரிச்சலுகைகள் தந்து நம் நாட்டிற்குக் கொண்டு வரும் காரணத்தால் (டைம்லர், பென்ஸ், ரெனால்டு), அசோக் லேலண்ட், டாடா மோட்டார்ஸ் தொழிலகங்களுக்கு நெருக்கடி ஏற்படுகிறது. கம்பெனி நிர்வாகங்கள் அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்ப்பதற்குப் பதிலாக, அதில் மாற்றம் கொண்டு வர முயற்சிப்பதற்குப் பதிலாக, நெருக்கடிகளைத் தொழிலாளர்கள் மேல் சுமத்துகிறது. ஒட்டுமொத்தமாக அரசாங்கத்தின் கொள்கைகள் மாற்றப்பட வேண்டும். நமது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் தொழிற்சங்கங்களின் கோரிக்கை. இந்திய நாடு விற்பனைக்கல்ல என்று உரத்துச் சொல்கிறது தொழிலாளி வர்க்கம். உங்கள் உரிமைக்குரல் இந்த முழக்கத்தை எடுத்துக் கொண்டு லேலண்ட் தொழிலாளர்களை வர்க்க ரீதியாக ஒற்றுமைப்படுத்த முழுமூச்சுடன் செயல்படுகிறது.

      நெருக்கடியிலும் இனிமையான தென்றல் காற்றாக உரிமைக்குரல் வருகிறது. உங்கள் பணி என்றென்றும் சிறக்கட்டும்!

                                       தோழமையுடன்

T.N.நம்பிராஜன்

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா