சு.சக்கீர்
240/J030
மெட்ரோ
ரயில், மோனோ ரயில் என சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைத்திட, ஏதாவது ஒரு வழி கிடைத்தால்
போதும் என ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் நேரமிது. ஆனால் பேருந்து
போக்குவரத்து பிரபலமாகவதற்கு முன்பாகவே, சென்னைவாசிகளுக்குப் பரிச்சயமானது டிராம் எனும்
மின்சார வண்டிகள். டிராம்களை காணவிரும்பும் இந்தியர்கள், இனி கொல்கத்தாவிற்குத்தான்
செல்ல வேண்டும். இல்லையெனில் 1942-ஆம் ஆண்டு வெளியான என் மனைவி போன்ற பழங்கால தமிழ்த்
திரைப்படங்களைத் தேடிப்பிடித்து பார்க்கலாம்.
1895 மே மாதம் 7ம் தேதி மின்சாரத்தால் இயங்கும்
டிராம்கள் சென்னையில் அறிமுகமானது. அதற்கு முன் குதிரைகளால் இழுத்துச் செல்லக்கூடிய
டிராம்கள் சென்னை வீதிகளில் வலம் வந்தன. லண்டன் நகரத்தை மையமாகக் கொண்ட மெஸர் ஹசின்சன்
நிறுவனம் மதராஸ் டிராம்வே கம்பெனி மூலமாக டிராம்களை இயக்க ஒப்பந்தம் பெற்றிருந்தது.
டிராம்களுக்குத் தேவையான மின்சாரம் வழங்கும் பொறுப்பு எலக்ட்ரிக்கல் கன்ஸ்டிரக்ஷன்
கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டது. 26 கி.மீ. தூரத்திற்குத் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
1,25,000 பேர் வரை ஒரு நாளில் பயணம் செய்ய வசதி செய்யப்பட்டிருந்தது. கஸ்டம்ஸ் ஹவுஸ்
மைலாப்பூர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், ராயபுரம், எழும்பூர், ஹாரீஸ்ரோடு, சிம்சன்
ஆகிய வழித்தடங்களில் டிராம்கள் இயக்கப்பட்டன. டிராம்களின் வருகையை அறிவிக்க ஓட்டுனர்கள்,
இரும்புப் பலகையில், கம்பியால் அடித்து ஓசையை எழுப்பிக் கொண்டே செல்வார்களாம். இதை
வேடிக்கை பார்க்கவே, தண்டவாளங்களின் இருபுறமும் மக்கள் கூட்டம் அலைமோதும். ஜார்ஜ் டவுனிலிருந்து
மவுண்ட் ரோடு வழியாக மைலாப்பூர் செல்ல கட்டணம் இரண்டு அணா (16 காசுகள்), மாதச்சீட்டுக்கு
6 ரூபாய் கொடுத்தால் ஒரே வழித்தடத்தில் செல்லலாம். பல வழித்தடங்களில் பயணம் செய்யவும்
சீசன் டிக்கெட் விலை ரூ.10ஆக இருந்தது. டிராம் கட்டண உயர்ந்ததாகவோ, அதை எதிர்த்து போராட்டங்கள்
நடைபெற்றதாகவோ பதிவுகள் எதுவுமில்லை. தற்போதைய தினத்தந்தி அலுவலகம் எதிரில் டிராம்
பழுதுபார்க்கும் நிலையம் அமைக்கப்பட்டு தலைமையிடமாக செயல்பட்டது. பி&சி, மெட்டல்
பாக்ஸ், சிம்சன் தொழிற்சங்கங்களைப் போன்று டிராம்வே தொழிலாளர் சங்கமும், சென்னை தொழிற்சங்க
இயக்க வரலாற்றில் முன்னோடி தொழிற்சங்கமாகத் திகழ்ந்தது.
கொல்கத்தாவில் 1902-ம் ஆண்டு துவங்கிய டிராம்
சேவை, இன்றும் தொடர்கிறது. அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளில் டிராம் சேவை இதற்குப்
பிறகுதான் தொடங்கப்பட்டது. 1963ம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடி, மக்கள் தொகையில் ஏற்பட்ட
வளர்ச்சி காரணமாக சென்னையில் டிராம்கள் மறைந்து, கடற்கரை-தாம்பரம் மார்க்கத்தில் மின்சாரத்
தொடர் வண்டிகள் அறிமுகம் செய்யப்பட்டன. 1980 வரை சாலைகளில் அங்கும் இங்குமாக டிராம்
தண்டவாளங்கள் தென்பட்டு பிறகு அதுவும் காணாமல் போனது.
செல்போன் யுகத்தில் காணாமல் போனது கடிதங்கள்!
மெட்ரோ யுகத்தில் காணாமல் போனதோ டிராம்கள்?
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா