B.H.அனந்த
கிருஷ்ணமோகன்
250\37837
வாழ்க்கையை நரகமென நினைத்து நொந்து கொண்டு நம்மில்
பலபேர் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், உண்மையான நரக உலகம் என்பது எய்ட்ஸ்
மற்றும் புற்றுநோயாளிகளின் இறுதி காலக்கட்டத்தைக் கூறலாம். அதிலும் வாய்ப்புற்று நோயாளிகளின்
நிலையை நேரில் காண மன தைரியம் நிச்சயம் வேண்டும்.
வாய்ப்பகுதி முழுவதும் சிதைந்து, தொண்டை முழுவதும்
பரவி, மூக்கு வரை சீழ்பிடித்து அவர்கள் தினம் தினம் படும் மனவலி பத்து பிரசவ வலிகளுக்கு
சமம். நாடி நரம்புகள் அடங்கி சன்னமான குரலில் ``ம்ம்ம்'' என்ற அரற்றல் மட்டுமே அவர்களிடமிருந்து
அடிக்கடி கேட்கும். வலி அதிகமாகி உடல் மேலெழும்பி ``அம்மாமா'' என்று அவர்கள் அலறும்
அலறல், பக்கத்தில் இருப்பவருடைய இதயத்தை சுக்குநூறாக்கிவிடும் ``மனிதப் பேரவலம்''.
வலியின் கொடுமையைத் தாங்கிக் கொண்டு தனக்கு மட்டும்
ஏனிந்த கொடுமையான மானிடப் பிறப்பு என மனம் வருந்தி ஊழ்வினையால் வந்த பிணியா என நொந்து,
தன் மரணத்திற்குப் பின் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பற்றிய பயத்துடன், இப்படிப்பட்ட
பல்வேறு மன ஓட்டங்களின் மத்தியில் வாழும் ஒவ்வொரு நாளும் ஒரு யுகமே.
உலகெங்கும் இப்படி சிகிச்சை பலன் அளிக்காமல்
கைவிடப்பட்ட நோயாளிகளின் இறுதி காலத்தின் அவலத்தை 80% மருந்து மற்றும் உரிய கவனிப்பின்
மூலம் குறைக்க முடியும். அதிக வலியின்றி இந்த நோயாளிகள் உயிர்துறக்க உதவ முடியும் என்கிறது
உலக சுகாதார அமைப்பு (டபுள்யூ.எச்.ஓ.). சாதாரண வலியை எதிர்கொள்ள உதவும் பாராசிட்டமால்,
ப்ரூஃபென் மருந்துகளில் தொடங்கி கோடின், மார்பின் போன்ற போதை மருந்திற்கு நிகரான மருந்துகளையும்
இந்தக் கொடுமையான வலியை எதிர்கொள்ள உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது.
இந்நோயின் ஆரம்ப கட்டத்தில் சாதாரண வலி நிவாரண
மாத்திரைகள் பலன் அளிக்கலாம். ஆனால் நோயின் இறுதி கட்டத்தை எட்டும்போது வீரியம் மிக்க
போதை மருந்துகள் கூட ஒரு சில மணி நேரங்கள்தான் பலன் அளிக்கும், பின்னர் வலி விஸ்வரூபம்
எடுக்கும். அதனாலேயே இந்த மரண வலி தணிப்பு மருத்துவத்தின் ஒரு பகுதியாகவே கருணைக் கொலைகளுக்குக்கூட
ஒரு சில நாடுகள் சட்டப்பூர்வமாக அனுமதிக்கின்றன. ஆனால் நமது நாட்டில் அவர்களுக்கு மருந்துகள்
கிடைப்பது எட்டாக் கனியாகவே உள்ளது. இப்படிக் கொடும் வலிக்கும், மரணத்திற்கும இடையே
இவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு இந்திய அரசு காட்டும் ஒரே பரிவு ``மார்பின்''. மாத்திரை
வடிவில் உள்ள இந்த மருந்துகள் தனியார் மருத்துவமனைகளில் தடையின்றி கிடைக்கும். ஆனால்
அரசு மருத்துவமனைகளில் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. ஏழைகள் வாழ்வதற்கும்
போராட்டம் நடத்த வேண்டும், சாவதற்கும் போராட்டம் நடத்த வேண்டும் என்பதே இந்த முதலாளித்துவ
வர்க்க உலகில் எழுதப்படாத விதி.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா