Friday 14 June 2013

அமையட்டும் மக்கள் நலன் காக்கும் அரசு அமைப்போம் நிச்சயமாக



R.பத்மநாபன், 760/L054, தலைவர், உழைப்போர் உரிமைக்கழகம்

      செப்டம்பர் 17, 2011 அன்று உலகமே அதிர்ச்சியில் உறைந்தது! ஏகாதிபத்திய நாடான அமெரிக்காவில் முதலாளித்துவக் கொள்கையினால் ஏற்பட்ட பாதிப்பினால் மக்கள், உலகையே கட்டுப்படுத்தும் பெருமுதலாளிகள் வாழும் தெருவான வால்ஸ்ட்ரீட்டை முற்றுகையிட்டனர்.

      ``ஒரு சதமானத்திற்கும் குறைவான எண்ணிக்கையில் உள்ள பெரு முதலாளிகளே! இனியும் தொண்ணூற்று ஒன்பது சதமானத்திற்கும் அதிகமாக இருக்கும் உழைக்கும் மக்களை அடக்கியாள அனுமதிக்க மாட்டோம்.'' என்று நூறு நாட்களுக்கும் மேலாக வால்ஸ்ட்ரீட்டை முடக்கி வைத்தார்கள்!
      உழைக்கும் மக்களின் எழுச்சியை ஊடகங்கள் எவ்வளவு தான் மூடி மறைத்தாலும், ஐரோப்பாவிலும் அரபு நாடுகளிலும் மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்துவிட்டார்கள். முதலாளித்துவ ஜனநாயக ஆட்சிமுறையைக் கைவிட வேண்டும் என்றும் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் அரசு வேண்டும் என்றும் வீதிகளில் குவிந்துவிட்டார்கள்.
      தற்காலிகமாக இந்த மக்கள் எழுச்சி அடங்கிவிட்டாலும், உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் முதலாளித்துவ ஆட்சிமுறைக்கு எதிராகப் பெரும் கிளர்ச்சிக்குத் தயாராகிவிட்டார்கள். மக்களிடம் வசூலிக்கும் வரி மொத்தமும் முதலாளிகளின் நலன்களைப் பாதுகாக்கவே செலவிடும் அரசுகளை உலகம் முழுதும் உள்ள மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள்.
      இந்திய நாட்டில் ஆட்சியாளர்கள் பெரும்பான்மை மக்களின் நலன்களைப் புறக்கணித்து பெரு முதலாளிகளைப் பாதுகாக்கவும், மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடித்து வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கவும் தான் ஆட்சியைப் பயன்படுத்துகிறார்கள். இந்திய உழைக்கும் மக்கள் நலன் காக்கும் அரசுகளை உருவாக்க வர்க்க ரீதியாக மக்கள் ஒன்றிணைய வேண்டும்.
      இந்தியத் திருநாட்டில் சாதி சமய இன வேறுபாடின்றி ஒன்றிணைந்தால் உழைக்கும் மக்கள் அரசு நிச்சயம்!! ஆகவே உழைக்கும் வர்க்கமே! உருவாக்குவோம் மக்களுக்கான அரசை!! மக்கள் ஜனநாயக அரசை அமைப்போம்! அது பெரும்பான்மை மக்களின் தேவைகளை நிறைவேற்றுகிற ஒரு அரசாக அமையும்! அதுவே உழைக்கும் வர்க்கத்தின் நலன் காக்கும் வர்க்க அரசாக மாறும்!!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா