Friday, 14 June 2013

அறிவியல் வரலாறும்அறிவியல் பார்வையும்



V.கோவிந்தசாமி, 352/K302, Mechanical Maintenance

      அறிவியல் என்றதும் கணினி, கைப்பேசி, விண்வெளிப் பயணம், அணுகுண்டு, படியாக்கம் (குளோனிங்), சோதனைச் சாலைகள் சம்பந்தமானவை என்ற முடிவிற்கு வந்து விடுகிறோம். இதனால் அறிவியல் என்றாலே நமக்குச் சம்பந்தமில்லாத விஷயம் என்ற முடிவிற்கு வந்து விடுகிறோம். ஆனால், அறிவியல் மேலே சொன்ன சில விஷயங்களோடு முடிந்துவிடுவதில்லை. வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் அறிவியல் உண்டு. ஏன் சமையலில் கூட அறிவியல் உண்டு. உயிர் சத்துக்களை எல்லாம் நீக்கிவிடும் வகையில் சமையல் செய்து சாப்பிட்டு அதன் காரணமாகவே பல நோய்களை வரவழைத்துக் கொள்வது அறிவியலுக்குப் புறம்பான சமையற்கலை. இதைப் பற்றி வேறு யாரும் வந்து நமக்குக் கற்றுத் தர வேண்டியதில்லை. நாமே இதில் தேர்ந்தவர்கள்.

வரலாற்றில் அறிவியல்: இந்த பூமி, உயிர்கள், மொழிகள் என எல்லாவற்றிற்கும் அவை சார்ந்த வரலாறு உண்டு. வரலாற்றைப் பார்ப்பதில் அறிவியல் பூர்வமான பார்வையும் உண்டு. அறிவியலற்ற பார்வையும் உண்டு. பொதுவாகப் பள்ளிகளில் வரலாறு என்பது மன்னர்களின் வரலாறாக, சாம்ராஜ்யங்களின் வரலாறாகவே சொல்லித் தரப்படுகிறது. சத்திரம் கட்டினார் என்று ஒரு மன்னரைப் பற்றி படிக்கும்போது, சத்திரங்கள் கட்ட வேண்டிய நிலை அக்காலத்தில் ஏன் இருந்தது என்ற கேள்வியும், சத்திரங்கள் கட்டியவர் ஏன் பள்ளிக்கூடங்களைக் கட்டவில்லை என்ற கேள்வியும் எழ வேண்டும். இந்தக் கேள்விகளைக் கேட்கத் தெரிந்தாலே நம் நாட்டில் இன்னும் ஏன் 30 கோடி பேர் கைநாட்டாகவே இருக்கின்றனர் என்பதற்கு அறிவியல் பூர்வமான விடை கிடைத்துவிடும். ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினா கேட்கும் சிந்தனை அவசியம் தேவை. ஏகலைவனின் கதை குருபக்திக்கு அடையாளமாகச் சொல்லித் தரப்படுகிறது. வேட்டுவர் குலத்தில் பிறந்த ஒருவனுக்குத் தானாகவே வில் வித்தையைக் கற்றுத் தேர்வதற்குக்கூட அக்காலத்தில் உரிமை கிடைக்கவில்லை என்ற உயர் சாதியினரின் சதியை அம்பலப்படுத்தும் விளக்கம் அளிக்கப்படுவதில்லை. அக்காலத்தில் மக்களுடைய வாழ்க்கை முறைகளை வைத்து வரலாறு சொல்லித்தரப்படுவதில்லை. காட்டுமிராண்டியாக இருந்த மனிதன் நாகரீக மனிதனாக மாறியதைப் பற்றி, அடிமைச் சமுதாயம், நிலப்பிரபுத்துவ சமுதாயம், முதலாளித்துவ சமுதாயம், சோசலிச சமுதாயம் என சமுதாயம் வளர்ந்திருப்பது பற்றி போதிக்கப்படுவதில்லை. அதாவது அறிவியல் பூர்வமாக வரலாறு கற்பிக்கப்படுவதில்லை. வரலாறு என்பதே முன்னுரையில்லாத படிப்பாக மாறிவிட்டது. வரலாறு என்பது விரிவான ஆய்வுகளின் அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர, ஒருவரது விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் இருக்கக்கூடாது?
..... தொடரும்......

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா