Friday, 14 June 2013

தண்டச்சோறு



S.சுகுமார் 266/C858

      விடியலைக் கூறும் சேவற்கோழியின் கூவலைக் கேட்டு திடுக்கிட்டு விழித்தான் ராமு. ஆழ்ந்த உறக்கமில்லாத இரவாகக் கழிந்ததால், மனமும் உடலும் உற்சாகமின்றிக் காணப்பட்டான் ராமு. `நமக்கு மட்டும் ஏனிந்த நிலை' என்று தன்னைத்தானே நொந்து கொள்வதா அல்லது விதியை நொந்து கொள்வதா? என்ற நிலையில் இருந்தான்.

      மற்ற நண்பர்கள் எல்லாம் ஆளுக்கொரு திசையில் மேற்படிப்பைத் தேடியும் வேலை தேடியும் சென்றுவிட்டனர். மற்றவர்களுக்கு உள்ள வசதி வாய்ப்புகள் இவனுக்கில்லை. தந்தையில்லாத மகனையும், மகளையும் காப்பாற்றவே முடியாத நிலையில் இவர்களைத் தொடர்ந்து படிக்க வைக்க இவனது தாயால் இயலவில்லை!
      எத்தனை நாட்கள்தான் வீட்டு வேலை செய்து தாய் உழைத்த உழைப்பில் ஜீவனை ஓட்டுவது? ராமுவுக்கும் இது தெரியாமலில்லை. அவமானமாகத்தான் இருந்தது. ஏதாவது ஒரு வேலை செய்து குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்றுதான் அவனும் நினைக்கிறான்.  வேலை இருக்கும்போது சில நாட்கள் போவான். சில நாட்கள் வேலை இருக்காது. வேலைக்குப் போகாத போதெல்லாம் மகனை வசைபாடுவது அவனது தாயின் அன்றாட நிகழ்ச்சியாக இருந்தது.  ``அவன் போறான். இவன் போறான். உனக்கு மட்டும் வேலை கிடைக்கவில்லையா?'' என்று புலம்புவதும். ராமு சாப்பிட உட்காரும்போது ``தண்டச்சோறு'' என்று சொல்லுவதுமாக இருந்தாள் அவனது தாய். ராமுவுக்கு, அம்மாவே இப்படிச் சொல்கிறாளே என்று நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் போல இருக்கும். சாப்பாடு இறங்காது. பாதியில் நிறுத்திவிட்டு எழுந்துவிடுவான் ராமு.
      சிறிது நேரத்திற்குப்பின் அம்மாவின் அருகில் வந்து ``அம்மா, நாளைக்கு என் நண்பன் வேலைக்குக் கூட்டிட்டு போறேன்னு சொன்னாம்மா. பஸ்சுக்கு இருபது ரூபா குடும்மா'' என்று கேட்டான். ``ஆமாடா... வேலைக்குப் போய் அம்மாவுக்கு சம்பாதிச்சு குடுக்கணும்னு தோணல. இன்னும் எத்தனை நாள்தான் உங்களுக்கு நான் உழச்சு கொட்டுறது.'' என்று கொதித்தாள் தாய்.
      அண்ணனது நிலைமையைப் பார்க்க, அவனது தங்கைக்கு சங்கடமாக இருந்தது. ``பாவம்மா... அண்ணன் வேலை கிடைச்சு போகாமல் இருக்கா...? எப்ப பாத்தாலும் திட்டிக்கிட்டே இருக்கியே...'' என்று அண்ணனுக்குப் பரிந்து பேசினாள் தங்கை.
      உள்ளே சென்று வந்த அம்மா, ``இந்தா இருபது ரூபாதான் இருக்கு. இதயும் எடுத்துட்டு போயி அந்த பஸ் காரன்கிட்ட குடுத்துட்டு
நிம்மதியா தூங்கு'' என்று ஒரு பத்து ரூபாய் நோட்டையும், மீதிக்கு சில்லறையுமாக அவனது கையில் கொடுத்தாள்.
      பஸ் நிறுத்தத்திற்குச் செல்ல, ராமுவின் வீட்டிலிருந்து சிறிது தூரம் நடந்து செல்ல வேண்டும். எப்போதாவது ஒரு பஸ் வரும். அதுவும் புளிமூட்டையை அடைத்து வருவது போல வரும். அது வரும் நேரத்தில் தொற்றிக் கொள்ள வேண்டியதுதான்.
      பத்து ரூபாய் நோட்டை நீட்டி, ``எம்.ஆர்.சி. கம்பெனி ஒரு டிக்கெட்'' என்று இவன் கேட்க, பத்து ரூபாய் டிக்கெட்டைக் கிழித்துக் கொடுத்தார் கண்டக்டர். கம்பெனி வாசலில் இறங்கிக் கொண்டான் ராமு. கம்பெனி வாசலில் இவனைப் போன்ற ஆட்கள் நிரம்பி வழிந்தார்கள். யார் யாரோ வெளியில் வருவதும் போவதுமாக இருந்தார்கள். சிலரை உள்ளே அழைத்துப் போனார்கள்! நண்பனை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்த வேளையில் அவனும் வந்தான், ``டேய் ராமு இன்னைக்கு வரச்சொன்ன ஆள் கான்டிராக்ட் அடுத்த வாரம்தான் எடுக்குறாங்க, இன்னிக்கு முடியாதுன்னு சொல்லிட்டாண்டா'' என்று சொல்லி நண்பனிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டான்.
      மிகுந்த ஏமாற்றத்தோடு, பஸ் நிறுத்தம் நோக்கி நடந்தான். சிறிது நேரத்தில் பஸ்சும் வந்தது. இப்போதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. எப்படியோ ஒரு வழியாக வண்டியில் ஏறிக் கொண்டான். ``சின்னப்பாளையம் ஒண்ணு குடுங்க'' என்று சொல்லி பாக்கெட்டில் கையைத் துழாவி அனைத்து சில்லறைகளையும் எடுத்த போது, அச்சில்லறைகளில் ஒரு நாணயம் கீழே விழுந்துவிட்டது. சில்லறையைக் கையில் வாங்கிய கண்டக்டர், ``என்ன எட்டு ரூபாதான் இருக்கு. இன்னும் இரண்டு ரூபா குடு'' என்றார். ``எட்டு ரூபா டிக்கெட் குடுங்க'' என்று சொல்லி, ராமு டிக்கெட்டை வாங்கிக் கொண்டான். இரண்டு ஸ்டாப்பிங் முன்பே இறங்கி நடந்தே வீடு வந்து சேர்ந்தான்.
      வந்ததும் வராததுமாய் தாய் கேட்டாள், ``என்னடா வேலைக்குப் போகலையா?''. ``இல்லம்மா அடுத்த வாரம்தான்னு சொல்லிட்டாங்கம்மா'' என்றான். ``நீ பஸ்சுல வந்ததையும், பாதியிலேயே இறங்கி ஊர் சுத்திட்டு வந்ததையும் பஸ்சுல வந்தவங்க சொல்லிட்டாங்க. உனக்கு எப்பத்தான் பொறுப்பு வரப்போதோ? தண்டச்சோறு! தண்டச்சோறு!! சரியான தண்டச்சோறு!!!'' என்று சொல்லிக்கொண்டே உள்ளே சென்றாள் தாய்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா