B.H.அனந்த கிருஷ்ணமோகன் 250\37837
மே 5
- சிரியா மீதான மறைமுகப் போரைப் பகிரங்கமாக நடத்தத் தயாராகிவிட்டது
அமெரிக்கா. இந்த அடாவடித்தனத்தை கைகட்டி, வாய்ப்பொத்தி
வேடிக்கை பார்க்கிறது அதன் வளர்ப்பு நண்பன் ஐ.நா.சபை. எந்த ஒரு தனி நாட்டின் இறையாண்மை,
உள் நாட்டு பிரச்சனை, வெளிவிவகாரத்துறை போன்றவற்றில் மற்ற நாடுகள் தலையிடக்கூடாது என்ற ஐ.நா.சபையின்
அறிக்கை காற்றில் பறக்கிறது.
கடந்த 24 மாதங்களாக சிரியாவில்
கட்டவிழ்த்து விடப்பட்ட உள்நாட்டுப் போருக்கு மூல காரணம் அமெரிக்க ஏகாதிபத்தியமே! லிபியா
அதிபர் கடாபி, ஈராக் அதிபர் சதாம் உசேன் எனத் தொடங்கிய அமெரிக்காவின்
கச்சா எண்ணெய் வெறி, இன்று சிரியா அதிபர் பசாத் அல் ஹசார் வரை
தொடர்கிறது. ஈரானில் மூக்குடைபட்ட அமெரிக்கா அதன் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ள சிரியாவில்
உள்நாட்டுக் கலவரத்தை உருவாக்கி, அங்கு நடக்கும் ஆட்சியை
அகற்றத் துடிக்கிறது. அதன்பின், ஈரானின் அருகே இருந்து
அதற்கு சாவு மணி அடிக்கத் தொடங்கும் நடவடிக்கையின் முதற்கட்டமே, சிரியாவில் அமெரிக்காவால் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்த உள்நாட்டுக்
கலவரம்! இதே முறையில் குவைத் மூலம் வளைகுடாவில் புகுந்த அமெரிக்க ராணுவம், சதாம் உசேன் ஆட்சியை அகற்றி ஈராக்கை நிர்மூலமாக்கியது. அதே பாணியில்தான்
இன்று ஈரான் விஷயத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
அமெரிக்காவின் இந்த கச்சா எண்ணெய் பசியால் இன்று சிரியாவில்
அகதிகளாக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 60 லட்சம். இதில்,
குழந்தைகள் மட்டும் 30 லட்சம். இப்படி அகதிகளாக்கப்பட்ட மக்கள் ஜோர்டான் எல்லையில் தஞ்சமடைந்து,
அகதிகளாக, வெட்டவெளியில் குழந்தைகளோடு
தண்ணீர், உணவு, உறைவிடமின்றி தவித்து வருகின்றனர்.
சிரியாவின் மீது மே 5ம் தேதி நடத்தப்பட்டத் தாக்குதல் உலகத்தின் கண்களுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டது
கண்டிக்கத்தக்க விஷயமாகும். இந்தத் தாக்குதல் அமெரிக்காவின் துணையோடு இஸ்ரேல் விமானங்கள்
கக்கிய குண்டுகள் அதிபயங்கரத் தன்மை கொண்டவை. அணுகுண்டுகளுக்குச் சமமான யுரேனியம் குண்டுகளை
பயன்படுத்தியதன் மூலம் ஒரு சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான வீடுகளும், நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளும் அடியோடு நாசமாயின.
இந்தத் தாக்குதலைக் கண்டித்து சீனாவும், ரஷ்யாவும் குரல் கொடுத்ததன் மூலம் பதட்டம் சிறிது தணிந்துள்ளதே
தவிர, அடுத்த தாக்குதல் எந்த நேரத்திலும் நிகழலாம். ஒரு வேளை சிரியா
வீழும் பட்சத்தில் அமெரிக்காவின் அடுத்த குறி ஈரான் மீது பாயும். அப்படி நிகழும் பட்சத்தில்
மூன்றாவது உலகப் போர் மூள்வது தவிர்க்க முடியாததாகி விடும். ஏனெனில் ஈரான் அணு ஆயுத
நாடு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே உலக நாடுகள் சிரியாவின் மீதான தாக்குதலை
உடனடியாகத் தடுக்காவிட்டால் இந்தப் பூவுலகில் நாடுகளின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகிவிடும்.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா