Friday, 14 June 2013

பிரிவினை அரசியல்



கி.சுரேஷ், 270/38313, சேசிஸ் அசெம்பிளி

சாதி இரண்டொழிய வேறில்லை! என ஔவையும், சாதிகள் இல்லையடி பாப்பா! என பாரதியும், ஒடுக்குமுறைக்கும், தீண்டாமைக்கும் எதிராகப் போராடிய அம்பேத்கரும், பெரியாரும் மற்றும் பல தலைவர்களும் வாழ்ந்த மண்ணில் இன்று உழைக்கும் மக்களை சாதி ரீதியாகப் பிளவுபடுத்தி, அரசியல் ஆதாயம் தேடும் சில சாதி அரசியல் கட்சிகளும், சாதி அமைப்புகளும் அடையாளம் காணப்பட வேண்டியவர்கள் மட்டும் அல்ல. அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்களும் கூட.

      ``பாதகம் செய்பவரைக் கண்டால்
      பயம் கொள்ளலாகாது பாப்பா
      மோதி மிதித்து விடு பாப்பா
      அவர் முகத்தில் காரி உமிழ்ந்துவிடு பாப்பா!'' - பாரதி
      சாதீயம் வேரூன்ற முக்கிய காரணம், சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பே என்பதை நினைவில் கொண்டு சாதியை அணுக வேண்டும். சாதிப் பிரிவினை எந்த வகையில் மக்களுக்கும், சமூகத்திற்கும் பயன்தரும்? சாதி பிரிவினை உழைக்கும் மக்களை உயர்த்துமா? சாதி மக்களிடையே ஒற்றுமையைக் கட்டுமா? இது போன்ற ஆதாரமான கேள்விகளுக்கு விடை தேட முற்பட்டாலே சாதிப் பிரிவினை எனும் கண்புரை நீங்கித் தெளிவான பார்வை கிடைக்கும். வரலாற்று ரீதியாகத் தொடர்ந்து ஒடுக்கப்படும் மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை வைத்து சாதி அரசியல் தொடங்குகிறது. அவர்களுக்கு வழங்குவது சலுகைகள் அல்ல மறுக்கப்பட்ட நீதி.
      பிரிவினை பேசும் அரசியல் கட்சிகள், அன்றாட அத்துக்கூலிகள், விவசாயிகள், உழைக்கும் தொழிலாளர்கள் இவர்களிடத்திலேயே அதிகம் சாதிப் பிரிவினை பேசி மோதல்கள் உருவாகக் காரணமாக உள்ளனர். உழைக்கும் மக்கள், விவசாயிகள் பொருளாதாரச் சுரண்டல் சமுதாயத்தின் விளைவாக பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஒடுக்கப்படுகிறார்கள். இந்த சமனற்ற ஏற்றத்தாழ்வான வாழ்க்கை முறைக்குக் காரணமான பொருளாதாரக் கட்டமைப்பை மறைத்து சாதியே காரணம் என்று தவறான பரப்புதலுக்கு மக்களைத் திசை திருப்பி ஒற்றுமை குலைக்கப்படுகிறது. ஒற்றுமை சிதறும் போது கிடைக்க வேண்டிய உரிமைகளும், அதற்கான போராட்டங்களும் சிதறும். இந்தப் போக்கை அரசும் முதலாளிகளும் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். காரணம், இந்தப் பிரிவினை தொடர்ந்தால்தான், உழைக்கும் மக்களுக்குள் ஒற்றுமை குலைந்தால்தான் அவர்கள் பிழைக்க முடியும். நீங்கள் எண்ணிப் பாருங்கள். டாடாவாகட்டும், அம்பானி, பிர்லாக்களாகட்டும், அவர்களுக்குள் சாதிச் சண்டை வராது. காரணம் அவர்களின் பொருளாதார வளர்ச்சி. இந்தப் பொருளாதார வளர்ச்சி
மக்களிடையே பரவலாக்காததன் விளைவு சாதி பிரச்சனைகள் மேலோங்கக் காரணம். சாதியை உயர்த்திப் பிடிக்கும் வசதியாக வாழும் தலைவர்கள் அவர்கள் சாதியைச் சேர்ந்த வசதி குறைவான ஆணையோ, பெண்ணையோ, தங்கள் குடும்பத்தில் திருமணம் செய்வார்களா?
      உரிமைகள் பெறவும், ஒடுக்குதலில் இருந்து மீளவும், தன் சாதி மக்கள் மட்டும் போராடி உரிமையை நிலைநாட்ட முடியாது. அனைத்து உழைக்கும் மக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே உரிமைகளை நிலைநாட்ட முடியும் என்பதை உணர வேண்டும். ஆனால் சாதித் தலைவர்கள் இதை மறைத்து ஒரு குறுகிய அரசியலுக்காக மக்களைப் பிளவு படுத்துகிறார்கள். ``திருட்டு முதல் பாலியல் வன்கொடுமை வரை நாட்டில் நடக்கும் அத்தனை சமூக சீர்கேடுகளுக்கும் சமூகப் பொருளாதார மற்றும் கலாச்சார ரீதியான கட்டமைப்பே காரணமே ஒழிய ஒரு குறிப்பிட்ட சாதிக்காரன் மட்டும் காரணம் இல்லை.''
      இதைத்தான் காரல் மார்க்ஸ், தனது சமூக விஞ்ஞானத்தில் சமூக உணர்வு நிலை, மனித உணர்வு நிலையாக மாற்றப்படுகிறது என்று கூறுகிறார். எனவே, சாதிப் பிரிவினை, சாதி மோதல்களை உருவாக்கும் அரசியல் தலைமைகளைக் களைந்து அனைவரும் உழைக்கும் மக்களாய் ஒற்றுமையுடன் திரண்டு ஒடுக்குதலுக்கு எதிராகவும், உரிமைக்காகவும் போராடினால், இந்த ஏற்றத் தாழ்வான சமூகக் கட்டமைப்பைத் தகர்த்து, சாதி சமயமற்ற ஒரு சமூகத்தைப் படைக்க முடியும்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா