Friday, 14 June 2013

என் உயிர் நீதானே



எஸ்.கெஜராஜ், 375/K700, Mechatronics

      அலுவலகம் வந்தும் வினோத்தால் காலையில் நடந்த நிகழ்ச்சியை மறக்க முடியவில்லை. ``டேய்...! என்னடா எதையோ நினைச்சிக்கிட்டு வேலை செய்யாம டல்லா இருக்கே?'' என்றான் ரவி. ``ஒண்ணுமில்லேப்பா, எனக்கும் என் மனைவிக்கும் இரண்டு நாளா சண்டை...! இன்னும் அவ என்னை புரிஞ்சிக்கல.. என்ன வாழ்க்கை? எல்லாம் ஒரே போராட்டமாத்தான் இருக்கு.'' என்றான் வினோத். ``சரி..! சரி..! எல்லாம் வீட்டுக்கு வீடு அப்படித்தான் இருக்கும், நீ வேலையைப் பாரு.'' என்றான் ரவி. மாலை அலுவலகம் முடிந்து வினோத் உடனடியாக வீடு செல்ல விரும்பவில்லை. `இன்னிக்கு வீட்டுக்கு கொஞ்சம் லேட்டா போனா போதும்' என்று நினைத்தான். அவனுடைய நண்பன் ஒருவன் நினைவுக்கு வர அவன் வீட்டுக்கு செல்ல முடிவெடுத்தான் வினோத்.

      அவன் நண்பனின் வீட்டை அடைந்து கதவைத் தட்ட முற்பட்டபோது, அங்கே கணவன் மனைவிக்கிடையே ஏதோ பிரச்சனை. அவர்கள் இருவரின் குரலும் மாறி மாறி எதிரொலித்து, ஏதோ சண்டை என்று தெரிந்தது வினோத்துக்கு. சிறிது நேரம் தன் பிரச்சனையை மறந்து பழைய நண்பனைச் சந்தித்து மனமாற்றம் அடைய வந்தால், இங்கேயும் அதே கதை தானா? போங்கடா பொல்லாத வாழ்க்கை..'' என்று அலுத்துக் கொண்டு வெளியே செல்ல நினைத்தான் வினோத்.
      ``டேய்...! வினோத்'' என்ற தன் நண்பனின் குரலைக் கேட்டுத் திரும்பினான். ``அண்ணா, உள்ளே வாங்கண்ணா'' என்றாள் நண்பன் ரகுவின் மனைவி. ``எப்படிம்மா இருக்கே. என் நண்பன நல்லா வச்சிருக்கியாமா?'' என்றான் வினோத் சற்று கண்டிப்புடன்.   ``எங்கண்ணா! அவருகிட்ட தினமும் ஒரே அக்கப்போர்தான்'' என்றாள். ``டேய், இவகிட்ட என்னால குப்ப கொட்ட முடியலடா.. சின்ன விஷயத்துக்கெல்லாம் சண்டை போடுறா!'' என்றான் ரகு.
      ``டேய் ரகு, இதெல்லாம் ஒரு பிரச்சனையா..? இன்னும் நாம வாழ்க்கையில சந்திக்க வேண்டியது நிறைய இருக்கு'' சுதாரித்துக் கொண்டு இயல்புநிலைக்கு வந்தான் வினோத்.
      ``அண்ணா! இவருக்கு நல்லா புத்தி வர மாதிரி சொல்லுங்கண்ணா'' என்று சொல்லி நிறுத்தாமல், ``அண்ணா, நீங்கல்லாம் உங்க மனைவிகிட்ட இப்படியா நடந்துக்கிறீங்க?'' என்று வேறு கேட்டு வைத்தாள்.
      `என் நிலைமை எனக்குத்தான் தெரியும். எல்லா மனைவியும் இப்படித்தான் இருப்பாங்களா? என்ன உறவோ...! என்ன பிரிவோ...! ஹ்ம்ம்ம்' என்று மனதில் நினைத்துக்கொண்டு, ``சரி விடும்மா, உங்க இரண்டு பேரையும்  என் வீட்டிற்கு கூப்பிடுறதுக்காகத்தான் இங்கே வந்தேன். கண்டிப்பா வந்திடும்மா... டேய் வந்திடுடா...'' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து விடைபெற்றான் வினோத்.       தனது வீட்டை நெருங்கும்போது, தனது மனைவி பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் பேசிக்கொண்டிருப்பது தெளிவாகக் கேட்டது.
      பக்கத்துவீட்டுப் பெண், `இன்னாக்கா? உங்க ஊட்டுக்காரு இன்னும் வரலையா...?'' என்று கேட்டாள். ``அவருக்கு ஏகப்பட்ட வேலை கீதா... அவங்க ஆபீஸ்ல அவருக்கு நல்ல பேரு... இவருதான் எல்லாத்தையும் கிட்டயிருந்து கவனிக்கணும்.'' என்றாள் கணவனைப் பற்றி பெருமையாக.
      ``ஏன்க்கா! உங்க ஊட்டுக்காரப்பத்திப் பெருமையா பேசுறீங்க அப்புறம் ஏன் அந்த மனுஷன்கிட்ட எப்ப பாரு சண்ட போடுறீங்க.'' என்றாள் கீதா குசும்பாக. ``ஏய்... நாங்க சண்ட போடுற மாதிரிதான் தெரியும். எங்க வீட்டுக்காரரு மாறி யாராலும் இருக்க முடியாது. அவரு ரொம்ப நல்லவரு. என்கிட்ட ரொம்ப அன்பா இருப்பாரு. அன்பு இருக்கிற இடத்தில கோபமும் வரத்தான் செய்யும். அதுக்காக அது சண்டைனு ஆயிடுமா?'' என்று பேசிக்கொண்டிருக்கும் போதே,  கணவன் வருவதைக் கண்டு மிகவும் மகிழ்ந்து புன்முறுவலுடன் தனது கணவரை வரவேற்றாள். `சே.. இவ நம்ம கிட்ட இவ்வளவு அன்பா இருக்கா... நாமதான் இன்னும் அன்போட இவளிடம் நடந்துக்கணும். என் உயிர் இவதான்!' என்று நினைத்துக் கொண்டான் வினோத். விட்டுக் கொடுத்து போவதுதான் உண்மையான கணவன் மனைவியின் குணம் என்பதை இருவருமே உணர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தனர். அங்கே மௌனம் நிலவியது. விழிகள் பேசிக்கொண்டன. பின்னணியில் ரேடியோவில்...
``பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி, பேச மறந்து சிலையாய் இருந்தால், பேச மறந்து சிலையாய் இருந்தால், அதுதான் தெய்வத்தின் சந்நிதி... அதுதான் காதல் சந்நிதி...'' என்று அதிக சத்தமில்லாமல் அந்த நிசப்தத்தைக் கலைத்தது.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா