Friday, 14 June 2013

சட்டமன்றத்தில் எதிரொலிக்கும் நமது குரல்



சு.சக்கீர், 240/J030
      சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் ரகளையில் ஈடுபடுவதும், வெளிநடப்பு செய்வதும் மட்டும் பெரும்பாலும் ஊடகங்களில் இடம்பெறும். ஆக்கப்பூர்வமான விவாதங்களும், கருத்து மோதல்களும், கூர்மையான விமர்சனங்களும் நடைபெற்றால் மட்டுமே, அவையின் ஜனநாயகத் தன்மையைப் பாதுகாக்க முடியும் என்ற உணர்வு பெரும்பாலான நமது மக்கள் பிரதிநிதிகளிடம் இருப்பதில்லை. திராவிடக் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பினால் ஆளும் முதல்வர்களை வானளாவப் புகழ்வதிலும், எதிர்க்கட்சி உறுப்பினர்களை வசை பாடுவதிலும் சட்டமன்றத்தில் அனுமதிக்கப்படும் விவாதநேரம் வீணடிக்கப்படுகிறது. இதற்கு மாறாக, தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி உறுப்பினர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன என்பதுதான் நமக்கான ஒரே ஆறுதல்.

      சென்னை மாகாண சபையில் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்ற மரபை உடைத்தவர் மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி. தோழர்கள் ப.ஜீவானந்தம், உமாநாத், ரமணி, வி.பி.சிந்தன், நன்மாறன், ஜே.ஹேமச்சந்திரன், டி.மணி போன்ற தலைவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த காலத்தில் அவையில் ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுத்துச் செல்வதில் ஆக்கப்பூர்வமாக பங்காற்றினார்கள்.
      தற்போது நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்த செய்திகள் பத்திரிகைகளில் வந்த வண்ணம் உள்ளன. விதி 110-ன் கீழ் முதல்வர் அறிவிக்கும் அறிவிப்புகள் சதமடித்துள்ளது. அது நடைமுறைக்கு வருமா என்பது போகப்போகத்தான் தெரியும். இந்த கூட்டத்தொடர் முழுவதும் இடதுசாரி உறுப்பினர்களின் செயல்பாடுகள் மிகவும் பாராட்டிற்கு உரியவைகளாக இருந்தன. குறிப்பாக மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.க்கள் சவுந்தரராஜன், பாலபாரதி, பீம்ராவ், பாலகிருஷ்ணன், அண்ணாதுரை, ஏ.லாசர் போன்றவர்கள் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகளுக்கான விவாதங்களில் பங்கேற்று ஆக்கப்பூர்வமான பல யோசனைகளை முன் வைத்தனர்.
      தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய தோழர் அ.சவுந்தரராஜன் தமிழகத்தில் தொழிலாளி வர்க்கம் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளையும் விரிவாக விளக்கினார். தொழிற்சங்கங்களுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் அளிப்பது, சங்கங்களின் கூட்டுபேர உரிமையை நிலைநாட்டுவது, ஊதிய ஒப்பந்தங்களை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை திருத்தி அமைப்பது, ஒப்பந்த தொழிலாளர்கள் முறையை ஒழிப்பது, உதிரி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தை ரூ.10,000\- ஆக உயர்த்துவது, நலவாரியங்களை சீராகச் செயல்பட வைப்பது போன்ற உழைக்கும் வர்க்கத்தின் அனைத்து கோரிக்கைகளையும், அவர் அமைச்சரவையின் கவனத்திற்கு எடுத்துரைத்தார். ஒரு கட்டத்தில் அமைச்சர் செல்ல பாண்டியன் பதிலளிக்கத் தடுமாறும் சூழல் ஏற்பட்ட போது, முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் நேரடியாக பதிலுரை நிகழ்த்தத் துவங்கினார். தொழிலாளர்களின் நலவாரியத்தின் மூலமாக வழங்கப்படும் உதவித்தொகையை முறைப்படுத்தி, வங்கிகளின் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்ய நடவடிக்கை எடுக்க இருப்பதாக அவர் உறுதியளித்தார்.
      பள்ளிக் கல்வித்துறைக்கான மானியக் கோரிக்கையின்போது, திண்டுக்கல் பாலபாரதிக்கும், அமைச்சர் வைகை செல்வனுக்கும் இடையே கடும் விவாதங்கள் நடைபெற்றது. அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.முனுசாமி போன்றவர்களும் கேள்விகளுக்கு விடையளித்தனர். இட ஒதுக்கீட்டின் பயன்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முறையாகச் சென்றடைய வேண்டியதன் அவசியத்தை இந்த விவாதங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின.
      போக்குவரத்துத்துறைக்கான மானியக் கோரிக்கையில் ஏ.லாசர், உயர்கல்விக்கான விவாதங்களில் கே. பாலகிருஷ்ணன், வருவாய்த்துறைக்கான நிதி ஒதுக்கீடு குறித்து அண்ணாதுரை என மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ஜனநாயகக் கடமைகளை ஆக்கப்பூர்வமாக நிறைவேற்றியுள்ளனர்.
      கடந்த காலத்தில் ஒரு மாநிலத்தின் சட்டசபையில் நிகழ்ந்த ஒரு சுவாரசியமான செய்தியையும் குறிப்பிட வேண்டும். சட்டசபை ஐந்தாண்டு பூர்த்தி செய்வதை ஒட்டி கடைசி கூட்டத்தொடரின் கடைசி நாள். அதுவரை ஒருமுறைகூட எழுந்து பேசாத ஒரு எம்.எல்.ஏ. திடீர் என்று எழுந்தார். அவை நிசப்தமானது. சபாநாயகர் ஆச்சரியத்துடன்  ``மாண்புமிகு உறுப்பினர் ஏதோ முக்கியமான விஷயத்தைப் பேச விரும்புகிறார். நான் அவருக்கு வாய்ப்பு அளிக்கிறேன்.'' என்று கூறினார். அதற்கு அந்த உறுப்பினர், ``மாண்புமிகு சபாநாயகர் அவர்களே, என்னிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை. எனது வேட்டி அவிழ்ந்துவிட்டது. அதை இறுக்கிக் கட்டத்தான் நான் எழுந்து நின்றேன்.'' என்றார். இப்படியும் ஒரு சட்டமன்ற உறுப்பினர்.
      இதிலிருந்து மாறுபட்டு, சட்டமன்றத்தில் உழைக்கும் வர்க்கத்தின் குரலை எதிரொலிக்கும் இடதுசாரி உறுப்பினர்களின் செயல்பாட்டை வரவேற்போம்! வாழ்த்துவோம்!!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா