Friday, 14 June 2013

பீச்சாங்கைகள்




K.N.சஜிவ்குமார், 217/37918

மலம் அள்ளுபவன் கைகளில்
எந்தக் கை பீச்சாங்கை...?
      சமீபத்தில் ஒரு வாரப் பத்திரிக்கையில் வந்த கவிதை. ஒரு யுகத்தின் வலியினை இரு வரிகளில் நோக்கிய கவிதை. சென்னை போன்ற மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு உள்ள பெருநகரங்களில் கூட மனிதர்கள் பாதாளச் சாக்கடைகளில் இறங்கி வேலை செய்வதைக் கண்டும் காணாமல் இருந்து விடுகிறோம். பலர் இந்த வேலையில் ஈடுபடும்போது இறந்து போவது தொடர்கதையாகியுள்ளது. அவர்களின் வறுமை காரணமாக கூடுதல் கூலி கொடுத்து இந்த வேலைகளில் சட்ட விரோதமாக ஈடுபடுத்தப் படுகின்றனர். இந்த சட்ட மீறலுக்கும் உரிமை மீறலுக்கும் அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர்.

      பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி வேலை செய்வது 2009 தீர்ப்பின்படி தடை செய்யப்பட்டுள்ளது. இந்த வேலையின் போது பாதிக்கப்பட்டு இறப்பவர் தலித் மற்றும் அருந்ததி இன மக்களேயாவர். ஆகவே, இதில் பொருளாதார ஏற்றத்தாழ்வு மட்டும் காரணமல்ல, சமூக ஒடுக்குமுறையும் அடங்கியுள்ளதை தொழிலாளி வர்க்கம் கவனத்தில் கொள்ள வேண்டும். காலங்காலமாக உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்ட தலித் மற்றும் அருந்ததியர் இன மக்கள், விடுதலைக்குப் பின்னும் அதே இழிவுகளுக்கு ஆளாக்கப்படுவது எதனால்? `அவர்கள் முன்னேற்றத்துக்கு ஒதுக்கப்படும் தொகையில் பெரும் பகுதி அரசு கஜானாவுக்கு திரும்பிப் போவதும், வேறு பல திட்டங்களுக்கு திருப்பி விடப்படுவதும் எதனால்? இது அரசுகளின் மெத்தனத்தையே காட்டுகிறது.
      என்.டி.டி.வி.யில் மலம் அள்ளும் பாங்கிகள் குறித்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் பேசிய எல்லாரும், ``இந்த வேலையை விரும்பி செய்வதில்லை, நிர்பந்தங்கள் காரணமாகவே தலைமுறைகளாக இந்த வேலையில் ஈடுபடுவதாகக் கூறினர். அதில், சில இளைய தலைமுறையினர் தன்மானம் கொண்டு பெட்டிக்கடைகள் வைத்து இந்தத் தொழிலில் இருந்து விடுபட நினைத்தபோது, அந்த ஊரில் உள்ள மேல் சாதியினர் இவர்கள் கடையில் பொருள் வாங்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்தனர். வேறு வழியின்றி மீண்டும் மலம் அள்ளும் வேலைக்கே திரும்பிவிட்டனர். இவர்களை கோயில்களுக்கு உள்ளேயும் அனுமதிப்பதில்லை. மனிதக் கழிவுகளை சுமக்கும் இவர்கள் கழிவுகளாகவே பார்க்கப்படுகின்றனர்.      சென்னையைப் பொருத்தவரை 14 பாதாளச் சாக்கடை சுத்திகரிக்கும் இயந்திரங்கள் மட்டுமே உள்ளன. இந்த எண்ணிக்கையை உயர்த்த அரசு முனைய வேண்டும். இந்த வேலையில் ஈடுபடும் தலித் அருந்ததியர் இன மக்களை விடுவித்து அவர்களுக்கு மாற்று வேலைக்கு அரசு உத்திரவாதம் அளிக்க வேண்டும். மனித மலத்தை மனிதன் அள்ளும் அவலம் நீடிக்கும் வரை, நாம் நாகரீக சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளத் தகுதியற்றவர்கள்.
      நாம் ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றாலும், இந்த சமூக அவலங்களில் இருந்து விடுதலை பெறும் நாளே, உண்மையில் நாம் விடுதலை பெரும் நாள்!   ஒரு யுகத்தின் வலி துடைக்கப்பட இன்றே அனைவரும் ஒன்றிணைவோம்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா