பெ.கலைமணி, 221/C197, துணைத்தலைவர், அசோக் லேலண்ட் தொழிலாளர் சங்கம்
மக்களை மாக்களிடமிருந்து பிரித்துக் காட்டுவது எது? சிந்தனை
ஒன்றுதான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சிந்தனை செய்வதற்கும், நல்லது
எது, தீயது எது என்று நாம் பிரித்தறிவதற்கும் தூண்டுகோலாய் இருப்பது நூல்களே.
உலகின் தலைசிறந்த நாகரீகமாகப் போற்றப்படும் கிரேக்க நாகரீகம் சிந்தனையின் பிறப்பிடமாக
இருந்தது. கிரீஸ் நாட்டின் முதல் நூலகம் பிஸிஸ்டிராடஸ் என்ற கிரேக்கரிடம் இருந்தது
என்பது வரலாறு. கி.மு.4-ம் நூற்றாண்டில் ரோமாபுரியில் 28 நூலகங்கள்
இருந்துள்ளன.
நினிவா என்ற இடத்தில் இருந்த ஆசிய நாட்டு நூலகத்தில் பத்தாயிரம் களிமண் பட்டயங்களின்
வடிவில் நூல்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. உலகம் போற்றும் அரசியல் தத்துவ மேதை
பிளாட்டோ ஏராளமான நூல்களை சேமித்து வைத்திருந்தார். அரசியல் மேதை அரிஸ்டாட்டில் தாம்
உருவாக்கி வைத்திருந்த நூலகத்தை தம் சீடருக்கு அன்பளிப்பாக அளித்தார்.
கி.பி.7ம் நூற்றாண்டில் நாளந்தா பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் 68,700 பனை ஓலைகளில் எழுதப்பட்ட நூல்களும், 36,058 பாபிரஸ் என்ற புல்வகை சுருள்களில்
எழுதப்பட்ட நூல்களும் இருந்தன. இவற்றில் 3,100 பனை ஓலைகள் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளன.
உலகத்திலேயே முதன் முதலில் ஜெர்மனியில் வெள்ளைத் தாளில் புத்தகம் தயாரிக்கும் புதிய
அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்த அறிவியல் மேதை கூடன்பர்க் உலகின் தலைசிறந்த பத்து
சாதனையாளர்களில் ஒருவராய் கருதப்படுகிறார்.
புத்தகங்கள் உருவாக புதிய முறையைக் கண்டுபிடித்த ஜெர்மனியில் தான் ஏராளமான புத்தகங்கள்
அழிக்கப்பட்ட சோகங்களும் அரங்கேறின. இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது ஜெர்மனி புத்தக
எரிப்பிலும் முனைந்து நின்றது. நாஜிக்களின் கொள்கைகளுக்கு எதிராக இருந்த புத்தகங்கள்
சர்வாதிகாரி ஹிட்லரால் பொது இடங்களில் குவிக்கப்பட்டு எரிக்கப்பட்டன. அன்று முதல் இன்றுவரை
அது முடியரசாயினும், குடியரசாயினும், புத்தகங்களைக் கண்டுதான், அது சிந்தனையில் உருவாக்கும் புரட்சியைக் கண்டுதான் அஞ்சுகின்றன.
சூரியனே அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை யாராலும் அசைக்க முடியாது என்ற திமிரோடு
பேசிய பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சிலை விழிப்புணர்வு பெற்ற இந்திய மக்களின் பேரெழுச்சி
அடிபணியச் செய்தது. சூரியனே மறையாத குடியேற்ற நாடுகளை இழப்பதற்கும் கவலைப்படாத தெற்காசிய
நாடுகள்தான் மாமேதை சேக்ஷ்பியர் எழுதிய நூல்களை இழந்திட சம்மதிக்கவில்லை. அதற்குக்
காரணம் சாகாத இலக்கியங்கள்தான் ஒரு நாட்டின் மதிப்புமிகு கருவூலங்கள்! சேக்ஷ்பியரின்
கடைசி நாடகமான ``தி டெம்பஸ்ட்'' உலகப் புகழ்பெற்ற நாடகமாக இன்றும் போற்றப்படுகிறது.
சரி, நம்மைப் பற்றிச் சிந்திப்போம். நமது மாநிலத்தில் 2000க்கும்
மேற்பட்ட உட்புற நூலகங்கள், 2500க்கும் மேற்பட்ட கிளை நூலகங்கள், 31 மாவட்ட
நூலகங்கள் செயல்படுகின்றன. இவை தவிர அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 12,000 கிராமப்புற நூலகங்கள் முந்தைய அரசால் உருவாக்கப்பட்டுள்ளன.
இறுதியாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். வளமான நிலமே, செழிப்பான
பயிர்கள் வளர உதவும். அது போல நூலகங்கள் தான் சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும்!
ஆயிரம் பூக்கள் மலரட்டும்! ஆயிரம் கருத்துக்கள் வளரட்டும்! அப்போதுதான் தந்தை பெரியாரின், பேரறிஞர்
அண்ணாவின், புரட்சிக்கவி பாரதிதாசனின் பகுத்தறிவுக் கருத்துக்கள் தமிழக மண்ணில் ஏன் உலகெங்கும்
பரவும்!
வாழ்க நூலகம்! வளர்க வையகம்!
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா