Saturday 17 August 2013

அறிவியல் வரலாறும், அறிவியல் பார்வையும் - 2

வி.கோவிந்தசாமி 352/கே202, மெகானிக்கல் மெயிண்டனன்ஸ்

      சென்ற இதழில் அறிவியல் வரலாறு பற்றி பார்த்தோம். அறிவியல் பார்வைக்கு சில உதாரணங்களை உங்கள் முன் வைக்கிறோம்.
      உலகமும் மனிதனும் தோன்றி வளர்ந்த வரலாற்றை அறிந்தவர்கள் மதமும், கடவுளும், சாதியும் ஆதியிலே இல்லை, பாதியிலேயே வந்தவை என்பதைக் கற்றுக் கொள்வார்கள். தற்போது கிளப்பி விடப்படும் மதவெறியும், ஜாதி வெறியும் அர்த்தமற்றவை என்பதைப் புரிந்து கொள்வார்கள்.

      சமீபத்தில் நடந்த தருமபுரி கலவரம், அதைத் தொடர்ந்து 2 மரணங்கள் மனதை இரணமாக்கின. சுமார் 20 வருடங்களுக்கு முன் தென் மாவட்டத் தலைநகர் ஒன்றில், ஒரு கோயில் திருவிழாவில் இரண்டு சாதியினரிடையே கலவரம் மூண்டது. காரணம் புலி வேடம் கட்டியவர்களிடம் யார் முதலில் புலி வாலை ஒட்ட வைத்துக் கொள்வது என்ற சர்ச்சைதான். புலி வால் எங்கே இருக்க வேண்டும்? புலியிடமே இருப்பதுதான் நல்லது. மனிதன் புலிவாலை ஒட்ட வைத்துக் கொள்வது திருவிழா கேளிக்கைக்காக இருக்கலாமே தவிர மண்டைகள் உடைய காரணமாக இருக்கலாமா? எவ்வளவு அறியாமை?
      சில சாமியார்கள் பக்தர்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி சாமியார்கள் வாயிலிருந்து சிவலிங்கம் எடுப்பது, மூடிய கைக்குள் இருந்து தாயத்தை எடுப்பது என சித்து வேலைகள் செய்து ஏமாற்றுகிறார்கள். ஏமாறுபவர்களில் ஐன்ஸ்டீன் உ=ம்ஸ்ரீ2 சமன்பாட்டைப் படித்தவர்கள். ஏராளமான சக்தி அழியாமல் சிறு துகள் உருவாக முடியாது என்பதை அறிந்த அறிவியலாளர்களும் உண்டு. ஆற்றல் ஏதும் அழிக்கப்படாமலே ஒரு பொருள் எப்படி திடீரென்று தோன்ற முடியும் என்ற கேள்வியைக் கேட்காமல், தான் பார்ப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டு அறிவியலாளர்களே ஏமாறுவார்கள் எனில் அவர்கள் படித்த அறிவியல் அவர்களுக்கு அறிவியல் பார்வையைக் கொடுக்கவில்லை என்றுதானே பொருள்?
      படித்து முடித்து வேலையைத் தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள், வேலை கிடைத்தால் பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பதாக வேண்டிக் கொள்வார்கள். அது உண்மையெனில் இந்தியாவில் உள்ள பல கோடி வேலை இல்லாதோருக்கு வேலை கிடைக்க பல கோடி தேங்காய்கள் தேவைப் படுவதால் வேலையின்மையைப் போக்க போதுமான அளவு தென்னை மரங்களை வளர்க்க வேண்டும் என்ற முடிவுக்குத் தானே அது இட்டுச் செல்லும். இந்தத் தீர்வை அறிவியல் பார்வை உடையவர்கள் ஏற்றுக் கொள்ள முடியுமா? இது போல் ஏராளமான உதாரணங்கள் கூற முடியும்.
      இவையெல்லாம் நம் சமூகத்தில் அறிவியல் பார்வை மிகமிகக் குறைவாக இருப்பதை தெளிவாகக் காட்டுகிறது. அறிவியல் இயக்கங்கள் பெருக வேண்டிய தேவையுள்ளது. மக்களை மூட நம்பிக்கையில் இருந்து விடுவிக்க வேண்டியிருக்கிறது. அறிவியலாளர்கள், அறிவியல் படித்தவர்கள் முதலில் தாங்கள் இதிலிருந்து விடுபட்டு மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும். நன்கு உடை உடுத்தியவர்கள், நவீன சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள் எல்லாம் நாகரீக மனிதர்கள் என்ற கருத்து இருக்கிறது. தோற்றம் எப்படியிருப்பினும் மனத்தளவில் அறிவியல் பார்வை உடையவர்களையே நவீன மனிதர்களாக நாம் ஏற்றுக்கொள்ள முடியும். வாழ்க! வளர்க!! அறிவியல் வரலாறும் அறிவியல் பார்வையும்!!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா