Saturday, 17 August 2013

மனிதன்! மனிதம்!! சமூகம்!!!

ஆர்.பத்மநாபன் 760/எல் 054, தலைவர், உழைப்போர் உரிமைக் கழகம்

மனிதன்: மனிதன் மண்ணில் பிறந்தவுடன் தான் காணும் சூழ்நிலையில் இருந்து உலகத்தையும், அருகில் இருக்கும் மனிதர்களின் சமூகத் தன்மையுடன் தான் வளர்கிறான். சிந்தனையும் செயலும் பழக்க வழக்கங்களும் அதே தன்மையுடன்தான் இருக்கும். அவன் வாழும் சூழலில் பேசப்படுகின்ற விஷயங்கள், கற்பனை கதைகள், மூளையில் பதிவாகி புதிய சிந்தனைகள் தோன்றுகின்றன. சமூக சிந்தனைகளும், விஞ்ஞான சிந்தனைகளும் புதிதாக சிந்திக்கச் சிந்திக்க பல புதிய விஷயங்கள் உருவாகின்றன. விஞ்ஞானக் கோட்பாடுகள் உலகைப் புதிய கண்டுபிடிப்புகளின் மூலம் நவீனப்படுத்துகின்றன. மனித மூளையில் இருந்து உருவாகும் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் மனிதன் மனிதனாக வாழ்வதற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும். ஆக்கப்பூர்வமான வேலைகளுக்குப் பயன்தரும் கண்டுபிடிப்புகளாக அவை இருக்கும் வரையில் மனிதன் மனிதனாகவே இருக்கிறான். அவன் வாழ்கின்ற சமூகத்தில் இருக்கும் குறைகளையும், வித்தியாசங்களையும் பற்றி சிந்தித்து சமூக விஞ்ஞான கோட்பாடுகள் உருவாகின்றன. அவற்றால் பழைய சமூக முறைகள் மறைந்து புதிய சமூக முறை தோன்றுகின்றது. அத்தகைய மாற்றம் ஏற்றத் தாழ்வுகள் அற்றதாகவும், மனிதன் மனிதனாகவே வாழ்வதற்கு ஏற்றதாகவும் உருவாக வேண்டும்.
மனிதம்: பொதுவாக மனிதம் என்பது சக மனிதனை நம்மைப் போலவே அவனையும் உணர்வது. அது இருபாலருக்கும் பொதுவாகவும் சமமாகவும் பின்பற்றப் பட வேண்டும். மனிதர்கள் அனைவரையும் சமமாக உணர்கின்ற நிலையே மனிதம்.
சமூகம்: மனிதன் தனித்து வாழ்வது என்பது இயலாத செயல். மனிதன் கூடி வாழ்வதே சமூகம். அது சிறியதாகவும் இருக்கலாம். பெரியதாகவும் இருக்கலாம். சமூகமாக வாழ சில கட்டுப்பாடுகளும், சட்ட  திட்டங்களும் வகுத்து அனைவரும், சமமாக வாழும் சூழ்நிலையை உருவாக்கினால் அச்சமூகம் சிறந்த சமூகமாகத் திகழும். மனிதன், மனிதம், சமூகம் இவற்றைச் சீராக இணைப்பதற்கு உரிய வழிகளை உருவாக்க வேண்டும். நாம் இருக்கும் இன்றைய சமூகச் சூழல்களைப் பற்றி அறிய வேண்டியது அவசியம். இப்போது இருக்கும் சமூகச் சூழல் நீடித்தால் மனித குலம் தொடர்ந்து நீடிக்குமா? மனித நாகரீகம் மனிதப் பண்புடன் இருக்குமா? என்ற சிந்தனையுடன் புரிந்து கொள்வதும் இன்றைய தேவை. உலகில் உள்ள பல நாடுகளில் பலவித நாகரீகங்கள், சிந்தனைகள், கலாச்சாரங்கள் வித விதமாகத் தோன்றின.

<மனிதன் மனிதம் சமூகம் தொடரும்>

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா