Saturday 17 August 2013

மாயனின் கனவு

எஸ்.சுகுமார் 266/C858

      ``புஷ்பா... ஏய்... புஷ்பா...'' குரல் கொடுத்தான் மாயன். ``நான் கிணத்தடியில் இருக்கேன். இரு வர்றேன்'' என்று அவரச அவசரமாக தண்ணீர் இறைத்தாள் புஷ்பா. மருதவாயலூரில் உள்ள இந்த பெரிய கிணறுதான் மூன்று தலைமுறையாக இந்தக் கிராம மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்து கொண்டிருக்கிறது. இந்த ஆழமான கிணற்றின் அடி ஆழத்தில் மணல் தெரியுமளவுக்கு வற்றிப் போய் தண்ணீர் கொஞ்சமாக இருக்கும்! ஒரே சமயத்தில் ஐந்துஆறு பேர்கள் சூழ்ந்து கொண்டு தண்ணீர் இறைப்பார்கள். ஒவ்வொரு முறையும் தண்ணீர் இறைக்கும் போதும் சிறிய சொம்பில் பாதியளவுக்குத்தான் தண்ணீர் கிடைக்கும்.  இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மொண்டு குடங்களில் நிரப்புவார்கள். சிறிது நேரத்தில் தண்ணீர் முழுவதும் தீர்ந்து, வெறும் மணல் மட்டுமே  தெரியும்! மீண்டும் எல்லோரும் தண்ணீர் ஊறும் வரை காத்திருக்க வேண்டும். சில மணி நேரம் கழித்து தண்ணீர் சுரந்த பிறகு மீண்டும் தண்ணீர் எடுக்கத் தயாராவார்கள்!

      மாட்டுக்குத் தண்ணீர் காட்டிவிட்டு, கொண்டு வந்து கட்டிவிட்டு மீண்டும் கத்தினான். ``ஏய் வாடி இங்க வயித்துக்கு ஏதாவது குடுத்தீயினா சீக்கிரமா கழனி பக்கம் போயி களை எடுக்கணும்னு பார்த்தா, சட்டுபுட்டுன்னு வர்றாளா பாரு'' என்று புலம்பினான். ``இந்தாளு வேற'' என முணுமுணுத்துக் கொண்டே பாதி நிரம்பிய குடத்துடன் வந்து ``இன்னா இப்பத்தான் குளத்துக்குப் போய் துணியெல்லாம் தோய்ச்சி போட்டுட்டு குடிக்கிறதுக்கு தண்ணி எடுத்துகிட்டு வந்திடலாம்னா லப லபன்னு கத்துறீயே'' என்று அலுத்துக் கொண்டாள் புஷ்பா. பழைய சோற்றைப் போட்டு அவனது அருகில் வைத்தாள். ``சாப்புடு'' என்று கூறி அவனருகில் அமர்ந்து மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தாள்.
      ``ஆமா... பொண்ணை எப்பத்தான் கரையேத்தலாம்னு நினைச்சிக்கிட்டிருக்கே?'' ``ஆமா இவளுக்குத்தான் அக்கரை! எங்களுக்கெல்லாம் இல்ல பாரு. போடி, வேலைய பாருடி. அதுக்குத்தான் இந்த தடவை வச்சிருந்த எல்லா விதை நெல்லையும் எடுத்து தரிசா கிடந்த அந்தத் துண்டு நிலத்துலயும் சேர்த்து பயிர் போட்டுட்டேன். இந்த முறை வெள்ளாமை நல்லா இருந்துச்சினா பொண்ணுக்கு வேண்டிய நகையெல்லாம் வாங்கி வெச்சிட வேண்டியதுதான். ஜமாய்ச்சிடலாம் கவலய வுடு.'' என்றான் உறுதியான தொனியில். ``வர்ற வருஷம் பையனையும் டவுனுக்கு அனுப்பி காலேஜ்ல சேர்த்திடனும்.'' என்று சொல்லிக் கொண்டே வேக வேகமாகச் சென்றான் மாயன்.
      பயிர் நன்றாகச் செழித்து வளர்ந்ததைக் கண்டு மகிழ்ந்த வேளையில் அறுவடைக்குத் தயாராக இருந்த நேரத்தில் கடுமையான மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. பயிர் செய்த நிலமெல்லாம், இது இன்னாருடைய நிலம் என்றுகூட தெரியாத வகையில் எல்லா இடமும் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாகக் காட்சியளித்தது. பரிதவித்துப் போனான் மாயன். ``சாப்பாட்டுக்குக் கூட நெல்லை வைக்காம அதுல போட்டேனே! உரத்துக்கும், மருந்துக்கும் கடன் வாங்கி, கடன் வாங்கி வளர்த்தப் பயிர் நாசமாப் போச்சே'' என்று புலம்பி சில நாட்களிலேயே மனமுடைந்து நடைப்பிணமாகக் காட்சியளித்தான் மாயன்.
      ஊரே திரண்டு அரசாங்கத்திடம் முறையிட்டார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். வேறு வழியில்லாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது என்று அரசும் அறிவித்தது. இழப்பீடு வாங்கச் சென்ற மாயனிடம் இந்த நிலம் உன் பெயரில் இல்லை, உன் அப்பா பெயரில் இருப்பதால் உனக்கு இழப்பீடு தர முடியாது என்று கூறிவிட்டனர். ``அப்பா, காலமாயிட்டாருங்க'' என்று சொன்ன மாயனிடம், ``நாங்கள் எதுவும் செய்ய முடியாது'' என்று கை விரித்துவிட்டனர் அதிகாரிகள். நிராயுதபாணியாக நிலைகுலைந்து போய் ``என் பொண்ணை எப்படிக் கட்டிக் கொடுப்பேன் என் பையனை எப்படி படிக்க வைப்பேன்'' என்று புலம்பிக்கொண்டே இருந்த மாயன் வீட்டுக்குப் பின்புறமுள்ள புளிய மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டான்! ``இப்படி பரிதவிக்க விட்டுட்டு போயிட்டீங்களே!'' என்று மனைவியும், மகளும், மகனும் கதறி அழுதனர்.

      அரசு அதிகாரிகள் கொடுத்த செய்தியின் படி மாயன் குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகத் தொலைக்காட்சிகளும் செய்தித்தாள்களும் செய்தி வெளியிட்டன.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா