Saturday 17 August 2013

தேவை… உண்மையான உணவுப் பாதுகாப்புச் சட்டம்!

எம்.ஆதிகேசவன்  - 264/ஜெ066

      உணவுப் பாதுகாப்பு மசோதாவுக்காக ஒரு அவசரச் சட்டம் என்ற பெயரில் முற்றிலும் ஜனநாயக விரோதமான பாதையைப் பயன்படுத்தி இருப்பதன் மூலம் மத்திய அரசு நாடாளுமன்றத்தின் மீது தனது தடையை அமலாக்க விரும்புகிறது. அனைத்து மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பு என்பதற்குப் பதிலாக, ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டுமே உணவுப் பாதுகாப்பு என்ற முறையை மத்திய அரசு சட்டமாக்கியுள்ளது. இச்சட்டத்தின்படி, மொத்த நகர்ப்புற மக்கள் தொகையில் 50% பேரையும், கிராமப்புற மக்கள் தொகையில் 25% பேரையும் தானாகவே உணவுப் பாதுகாப்பு வளையத்தில் இருந்து வெறியேற்றப்படுகின்றனர். மொத்தத்தில் 67% மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு 35 கிலோ உணவு தானியம் என்பது 10 கிலோ வெட்டப்பட உள்ளது. 5 பேர் கொண்ட குடும்பம் என்றால் 25 கிலோ அரிசி; குடும்பம் சிறியது என்றால் இன்னும் இந்த அளவு குறையும் என்று அவசரச் சட்டம் சொல்கிறது.

      இடதுசாரிகளைப் பொறுத்தவரை இந்தச் சட்டத்தில் குறிப்பிடத்தக்க முக்கியமான திருத்தங்களைக் கொண்டு வர வாதாடுகிறது. குறிப்பாக அரிசி மற்றும் கோதுமை கிலோ ரூ.2\- விலையில், 35 கிலோ உணவு தானியங்களை அனைத்துக் குடும்பங்களுக்கும் (90% மக்களுக்கு) வழங்கப்பட வேண்டும். பொது விநியோக முறையை அனைவருக்குமாக மாற்றி அதன் மூலமாக பொருட்கள் விநியோகிக்கப்பட வேண்டும். ஆனால், மத்திய அரசு, உணவுக்குப் பதிலாக நேரடி பணப் பட்டுவாடா என்ற முறையைக் கொண்டு வந்து பொது விநியோக முறையை அவசியமற்ற ஒன்றாக மாற்றுகிறது. அரசு கொடுக்கும் பணத்தில் வெளிச் சந்தையில் உணவுப் பொருட்களை வாங்க வைத்து இறுதியில் பணவீக்கத்தின் விளைவாக உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்ட குறைந்தபட்ச அளவைக் கூட வாங்க முடியாத நிலை மக்களுக்கு ஏற்படும் என்பதுதான் உண்மை.
      இவ்வாறு பொது விநியோக முறையை ஒழிப்பது என்பது மற்றுமொரு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். தற்போது விவசாயிகளிடம் குறைந்தபட்ச ஆதார விலை கொடுத்து வாங்கப்படும் தானியக் கொள்முதல் தேவையற்றதாகப் போய், இதுவரை விவசாயிகளுக்கு ஆன குறைந்த அளவு பொருளாதாரப் பாதுகாப்பையும் விவசாயிகளிடமிருந்து மத்திய அரசு பறித்துக் கொள்கிறது. மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டம் அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசுக்கே அளிக்கிறது. அதே நேரத்தில் ஒரு கணிசமான அளவு நிதிச் சுமையை மாநில அரசுகள் மீது சுமத்துகிறது. மாநிலங்களுடன் எந்தவித ஆலோசனையும் நடத்தாமல் இது செய்யப்படுகிறது.

      மொத்தத்தில் உணவுப் பாதுகாப்பை அனைத்து மக்களுக்கும் உறுதிப்படுத்தாமல் உணவுப் பாதுகாப்பை பறிக்கும் மத்திய அரசின் இந்த அவசரச் சட்டத்தை நாடு முழுதும் உள்ள மக்கள் கடுமையாக எதிர்க்க முன் வர வேண்டும். இல்லையென்றால் அனைத்து மக்களுக்குமான உணவுப் பாதுகாப்பு கேள்விக் குறியாகிவிடும்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா