கி.சுரேஷ்
270/38313
சேசிஸ் அசெம்பிளி
புத்தர் தன் சீடர்களுக்குப் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது சீடர்களில்
ஒருவர் புத்தரைப் பார்த்து, உயிர் எங்கு இருக்கிறது? என்று
வினா எழுப்பினார். சிறிது யோசித்த பிறகு புத்தர், எங்கு போராட்டம் இருக்கிறதோ
அங்கு உயிர் இருக்கும் என பதில் உரைத்தார்.
தாய் மூன்று மகள்களுடன் தற்கொலை; கணவன், மனைவி, மகன்
தற்கொலை என்றும்; தேர்வில் தோல்வி கண்ட மாணவி முதல் விவசாயம் பொய்த்துப்
போனதால் விவசாயிகள் தற்கொலை வரை அனைத்தும் தினச் செய்திகளாக வந்து நம் நெஞ்சைப் பதற
வைக்கின்றன. தற்கொலை என்பது தனிப்பட்ட முடிவு என்றாலும், ஒரு காரியத்திற்கு
பின்பு ஒரு வலுவான காரணம் இருக்கும். நாமும் சரி, நாம் காணும் ஊடகங்களும் சரி
காரணத்தை விட்டுவிட்டு காரியத்தைப் பற்றி அலசுகிறோம். ஏன் இவர்கள் மாண்டு போகிறார்கள்?
தனக்கான இருத்தலை இந்தச் சமூகம் நிர்ணயம் செய்யும் காரணியாக இல்லாமல் போகும் பட்சத்தில்
நெருக்கடியைத் தாளாமல் தன்னை இச்சமூகத்தில் இருந்து விடுவித்துக் கொள்கிறார்கள். மனிதன்
என்பவன் தனி நபர் அல்ல! தனி சிந்தனை உடையவனும் அல்ல! இந்தச் சமூகத்தின் போக்கில் பயணம்
செய்யும் ஒரு பயணி. இந்தப் பயணத்தில் தனக்கான வாழ்வியல் இருக்கை (இருத்தல்) கிடைக்காததால்
தன்னை மரணித்துக் கொள்கிறான்.
உயிர் தோன்றியது கூட போராட்டத்தின் மூலமே வந்ததாக அறிவியலும் கூறுகிறது. கோடிக்கணக்கான
உயிரணுக்களின் போராட்டத்தில் வென்ற ஒரு உயிரணு கரு முட்டையை அடைந்து உயிராக முடிகிறது. மனிதனுக்கு ஆதாரம் உயிர். உயிருக்கு ஆதாரம் போராட்டம்.
முட்டையை உடைத்துக் கொண்டு குஞ்சு வெளியே வருவதற்கு ஒரு போராட்டம் தேவைப்படுகிறது.
சர்க்கரை வியாதி வந்தவர்கள், சர்க்கரை வியாதி வந்துவிட்டதே என்று இருப்பதில்லை. அதைச்
சமாளித்து தொடர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இப்படிப் போராட்டம் என்பது வாழ்வில் இரண்டறக் கலந்து உள்ளது. சமூகத்தில் பல்வேறு
பிரச்சனைகளுக்காக நாமோ, அல்லது மற்றவருடன் சேர்ந்தோ போராட வேண்டி உள்ளது. தற்போது
ஒன்று தொடர்ந்து சொல்லப்படுகின்றது. யாரும் போராட முன் வருவதில்லை என்று! உயிர் உள்ள
அனைத்தும் போராடும். ஒரு சிறு எறும்பை நீங்கள் நசுக்குகிற போது அது உங்களிடம் இருந்து
விலகி தன்னைக் காப்பாற்றிக்
கொள்ளப் போராடும். எங்கு
போராட்டம் இருக்கிறதோ அங்கே உயிர் இருக்கும்.
போராட்டம் என்பது பெருந்திரள்; அது பன்மை. எனவே அதற்கு தூண்டுகோல்
வேண்டும். வள்ளுவன் கூறியது போல, விளக்கு பிரகாசமாக எரியத் தூண்டுகோல் தேவைப்படுகிறது.
மக்கள் எழுச்சிக்கும் தூண்டு கோல் அவசியம். புறச்சூழல் (மக்களின்
எழுச்சி) அகச் சூழல் (எழுச்சியின் காரணி) இரண்டும் இணையும் போது, மக்கள்
அளவு என்பது பல மடங்காக மாறி புரட்சியை ஏற்படுத்தும்.
இதை அளவு மாற்றம் குணம் மாற்றம் என்பர். ஒரு தீக்குச்சி (அளவு) எளிதாக
உடைத்து விடலாம். 100 தீக்குச்சி (அளவு மாறுகிறது) என்றால்
உடைப்பது கடினம்.
மக்கள் மூன்று விதமான வாழ்க்கை வாழ்கிறார்கள். தனக்காக வாழ்வது, தன் குடும்பத்திற்காக
வாழ்வது, மூன்றாவது இச்சமூகத்திற்காக வாழ்வது. தனக்கு ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் சமூகம்
சார்ந்ததே என்பதை உணர்ந்து, இச்சமூக பிரச்சனைகளின் போராட்டத்துடன் தன்னையும் இணைத்துக்
கொண்டு போராடும் காலம் இது. போராட்டம் என்பது உயிர்! நாம் உயிர் அற்றவர்களா?
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா