K.N.சஜீவ்குமார்
217/37918
217/37918
ஒரு கோயிலில் இரு யானைகள் கட்டப்பட்டிருந்தன. அதில் பெரிய யானை சிறிய சங்கிலியாலும், குட்டி
யானை பெரிய சங்கிலியாலும் கட்டப்பட்டிருந்தன. இதைப் பார்த்த சிறுவன் யானைப்பாகனிடம்
அதற்கான காரணத்தைக் கேட்டான். அதற்கு அந்த யானைப் பாகன், ``யானை
குட்டியாக இருக்கும்போது குறும்பு அதிகமாக செய்யும். அது சங்கிலியை அறுக்க முழு சக்தியையும்
பயன்படுத்தும்;
அப்போது பெரிய சங்கிலியால் கட்டப்பட்டுள்ள போது பல முறை முயன்று
இதை தன்னால் அறுக்கவே முடியாது என்ற எண்ணம் மனதில் பதிந்துவிடும். யானை பெரிதாகி சக்தி
கூடிய பிறகும் இந்த சங்கிலியை அறுக்க முடியாது என்று எண்ணி எந்த முயற்சியிலும் இறங்காத
காரணத்தால் சிறிய சங்கிலியே போதுமானது'' என்றான்.
நாமெல்லாம் தொழிலாளி வர்க்கம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாதல்லவா? நம் உழைப்பினால்தான்
இந்த உலகம் இயங்குகிறது. ஆனால் நம் வாழ்க்கை முன்னேற்றம் அடைய நாம் நடத்தும் போராட்டம்
ஏன் வெற்றி அடைவதில்லை. போனஸ், ஒப்பந்தம் போன்ற அடிப்படை விஷயங்களில் கூட தொழிலாளிக்கு
ஏமாற்றம் மிஞ்சுவது எதனால்?
அடிப்படைக் காரணம், நாம் வாழ்வது ஒரு முதலாளித்துவ அமைப்பில். இதில் ஏற்படும்
யாவும் முதலாளிகளின் பாதுகாப்புக்காகவே நடக்கும். தொழிலாளி ஒன்றுபட்டு போராடும்போது
அவன் வாயை அடைக்க சில சலுகைகள் அளிக்கப்படும். ஆனால், அதிகாரம்
வழக்கம் போல முதலாளிகளிடம் இருக்கும். அரசியல் என்பது, `யார்
கையில் பொருளாதார அதிகாரம் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதுதான்''. எனவே
நம் சட்டைப் பையில் எவ்வளவு காசு இருக்க வேண்டும் என்பதை முதலாளிகள் தீர்மானிப்பார்கள்.
இதற்கு மாற்று என்ன? நாம் காசு ஈட்டித் தரும் போனஸ், ஊதிய
உயர்வு போராட்டங்களோடு நில்லாமல், அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும்
போராட்டங்களிலும் ஈடுபட வேண்டும். அப்போதுதான் நம் எதிர்காலத்தை நாமே வடிவமைக்க முடியும்.
15வது நாடாளுமன்றத்தில் 306 எம்.பி.க்கள் கோடீஸ்வரர்கள். இது 14வது நாடாளுமன்றத்தைவிட
இரு மடங்காகும். இவர்களது சராசரி சொத்து மதிப்பு ரூ.5.8 கோடியாகும்.
இவர்கள் எப்படி ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.20 மட்டும் சம்பளம் வாங்கும் 77% மக்களின்
பிரச்சனைகளைப் பேசப் போகிறார்கள்? தொழிலாளர் உரிமை பற்றி எங்கே வாய்திறக்கப்
போகிறார்கள்?
பிரச்சனைகளை விவாதிக்க அந்த மக்களை பிரதிநிதித்துவப் படுத்துபவர்
நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இருக்க வேண்டும். அவர்கள் பலம் கூட வேண்டும்.
தொழிலாளர்களைப் பிளவு படுத்தும் ஜாதி, மத தூண்டுதல்களையும், நம் முன்னேற்றத்தைத்
தடுக்கும் ஊழல் அரசியலையும் தூக்கி எறிந்து தொழிலாளிக்காக குரல் கொடுக்கும் அரசியலைக்
கையில் எடுக்க வேண்டும்.
அதுவரை சொந்த பலத்தை உணராத சிறிய சங்கிலியால் கட்டப்பட்ட பெரிய யானையின் நிலைதான்
நமக்கும்!
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா