M.ஆதிகேசவன்
264/J066
264/J066
இந்தியாவில் எந்தத் தொழிலும்
வளர்ச்சியில் வருடத்திற்கு 9% தாண்டியதில்லை.
ஆனால் பாட்டில் வாட்டர் 40% முதல்
50% வரை வளர்ச்சியுள்ள தொழிலாக உள்ளது. பொதுவாக,
இந்தத் தொழிலில் பன்னாட்டு நிறுவனங்கள் ஆக்கிரமித்து பல ஆயிரம் கோடிகளை சம்பாதித்து வருகின்றன. நாடு
முழுவதும் சுமார் 600 நிறுவனங்களில்
370 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
2005ல் நடத்திய சர்வேயில் ரூ.1,000\-
கோடி சென்னையில் மட்டும் தண்ணீர் வியாபாரம் நடந்துள்ளது எனத்
தெரிகிறது. தற்போது 2000 கோடியைத்
தொட்டு நிற்பதாக ஒரு முதலீட்டு நிறுவனம் கூறுகிறது.
இந்த நிறுவனங்கள் நாடு முழுவதும்
நிலத்தடி நீரை உறிஞ்சி வருகின்றன. இந்த உறிஞ்சும் நீரை ஈடுகட்ட,
தற்போதுள்ள ஆறு, ஏரி, குளங்களில்
உள்ள கழிவுகளை அகற்ற வேண்டும். இதை வீண் செலவு என்று அரசுகள் பார்க்குமேயானால்,
வெகு விரைவில் தண்ணீரை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு
தள்ளப்படுவோம் என்பது நிதர்சனமான உண்மை.
இந்தச் சூழ்நிலையில் பாட்டில்
வாட்டர் முதலாளிகள் தற்போது செலவுகள் கூடுவதாகப் புலம்புகின்றனர். இதன் விளைவாக பெருவாரியான
உற்பத்தியாளர்கள் கிருமி கலந்த நீரை விற்கின்றனர். இதன் காரணமாக நாளொன்றுக்கு 1500 பேர் காலரா போன்ற குடிநீர் மூலம் வரும் வியாதிக்கு பலியாவதாக விவரங்கள் கூறுகின்றன.
பாட்டில் வாட்டர் தொழில்
அரசியல் புள்ளிகளும், பன்னாட்டு
நிறுவனங்களும் நடத்துகிற தொழிலாக இருப்பதால், இடதுசாரிகள் தவிர மற்ற அரசியல் கட்சிகள் கண்டு கொள்வதில்லை. வாட்டர் பிசினஸ் என்பது
தொழில் வளர்ச்சியின் அடையாளம் என அரசுகள் தம்பட்டம் அடிக்கின்றன. ஆனால் இது வளர்ச்சியின்
அடையாளமல்ல, நீரும்
நிலமும் கெட்டு வருவதன் அடையாளமாகும்.
இந்தச் சூழ்நிலையில் தமிழக
அரசின் பாட்டில் வாட்டர் வியாபாரம் கடலில் தத்தளிக்கும் ஒருவனுக்கு மிதவை பலகை கிடைத்ததற்கு
ஒப்பாக உள்ளது. முதலாளித்துவ லாப போட்டி வியாபாரத்தில் தமிழக மக்களுக்கு ஓரளவு பொருளாதார
ஆறுதலாக அரசின் இந்த நடவடிக்கை இருந்தாலும், இது தமிழக மக்களின் நிரந்தரத் தீர்வாக அமையாது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
மூன்றாம் உலகப் போர் தண்ணீருக்காக
ஏற்படலாம் என்பது உலகின் பல்வேறு விஞ்ஞானிகள் மற்றும் அறிஞர்களின் கருத்தாக உள்ளதை
மனதிற்கொண்டு, மத்திய,
மாநில அரசுகள் திட்டங்கள் தீட்டி செயல்பட வேண்டும்.
தண்ணீர் விற்பனைக்கல்ல...!
என்பதே மக்களின் முழக்கம்!
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா